சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 6வது நாளாக தொடர்கிறது. இதுவரை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்கும் வகையில் நவீன கருவிகள் எதுவும் இல்லாததே மீட்புப்பணி மெதுவாக நடைபெற காரணம் என சொல்லப்படுகிறது.
இருக்கும் கருவிகளை வைத்தே தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில மீட்புக் குழுவும் இணைந்து முழு வீச்சாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இடிந்து விழுந்த கட்டடத்தின் முன்பகுதியில் மீட்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டடத்தின் பின்பகுதியின் தரைத் தளத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நாளைக்குள் முடிவடைய வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக்குழு டி.ஐ.ஜி செல்வன் தெரிவித்துள்ளார். விபத்து நிகழ்ந்து 6 நாட்கள் ஆனதால் இடிபாடுகளுக்குள் இருக்கும் உடல்கள் அழுகிய நிலையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மனித உரிமை ஆணையம் இந்த விபத்து குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நீதியரசர் ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருக்கிறது தமிழக அரசு.