ஐபிஎல் போட்டியின்போது மும்பை வான்கடே மைதானத்தில் தொழிலதிபர் நெஸ் வாடியா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நெஸ் வாடியா, ப்ரீத்தியின் புகாரில் உண்மையில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து தன் ஃபேஸ் புக் பக்கத்தில் நீண்ட விளக்க அளித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா.
அதில், ‘நெஸ் வாடியாவிடம் பணம் பறிப்பதற்காக நான் புகார் செய்ததாகக் கூறப்படுவது சுத்தப்பொய். அவருக்குச் சொந்தமான கோ-ஏர் விமான நிறுவன விளம்பரப் படத்தில் இலவசமாக நடித்தேன். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் வென்ற ரூ.1 கோடியைக்கூட வாடியாவின் குழந்தைகள் அறக்கட்டளைக்கு நன்கொடையாகத் தந்தேன். இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் அணி ஏலத்துக்காக எனது சார்பில் ரூ.5 கோடியும், நெஸ் வாடியாவுக்காக ரூ.5 கோடியும் நான்தான் செலுத்தினேன். அதற்கான ஆதாரம் பிசிசிஐ ஆவணங்களில் உள்ளது. சில மாதங்கள் கழித்து அதே ரூ.5 கோடியை (வட்டியில்லாமல்) எனக்கு நெஸ் வாடியா திருப்பிக் கொடுத்தார். எனவே பண ஆதாயத்தை நான் எதிர்பார்ப்பவள் அல்ல என்பது தற்போது விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.
அதோடு, நெஸ் வாடியாவின் அம்மாவிற்கு ஐபிஎல் போட்டிகளின் போது அமர இடம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் என் மீது வைக்கிறார். உண்மையில் நான், எனது நண்பர்கள் உள்பட 6 இருக்கைகளில் மட்டுமே அமர்ந்திருந்தோம். மீதி அங்கே 50 இருக்கைகள் காலியாக இருந்தன. என்னை மறந்தாலும் மறப்பேனே தவிர, நான் ஒருபோதும் மரியாதையை மறப்பவள் அல்ல.
1998 முதல் நடித்து வருகிறேன். ஏராளமான வெற்றிப்படங்கள் அளித்திருக்கிறேன். விருதுகளை வாங்கியிருக்கிறேன். தைரியமான பெண் என்கிற விருதுகூட பெற்றிருக்கிறேன். பிரபலம் என்கிற உச்சத்தை தொட்ட எனக்கு இதுப்போன்ற புகார்கள் மூலம் விளம்பரம் தேடும் அவசியம் இல்லை.
எனக்கும் நெஸ் வாடியாவுக்குமான பர்சனல் பிரச்னையை பெரிதாக்குகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையில் எனக்கும் வாடியாவுக்குமான உறவு 2009 ஆண்டே முடிந்துவிட்டது. அதில் சொல்ல ஒன்றும் இல்லை.
இப்போதைய பிரச்னையை வெளியே சொல்லக் காரணம் தொடர்ந்து என்னை அவதூறாக பேசுவது, அடிப்பது போன்றவற்றை நெஸ் வாடியா எல்லோர் முன்னிலையிலும் செய்து வந்தார். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே போலீஸில் புகார் செய்தேன். போலீஸ் விசாரித்து முடிக்கும்போது உண்மை வெளிவரும் என்று நம்புகிறேன். அதுவரை பொறுத்திருப்போம்’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.