ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் “ஒரு குப்பைக்கதை” ஸ்ரீகாந்த் நடித்த “பாகன்” படத்தினை இயக்கிய அஸ்லம் தயாரிக்கிறார். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர். “ஆடுகளம்” படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மிடம் பேசிய தினேஷ் கூறியதாவது, “மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் என்னை இதற்கு முன் அணுகியிருந்தாலும் இந்த கதை என்னை நடிப்புக்குள் இழுத்து வந்துவிட்டது. நடனத்தையும் தொடர்ந்துகொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்த படத்தைசெய்து முடிக்கிறேன். யாராவது தினேஷ் மாஸ்டர் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறார்னு கொளுத்திப் போட்டா யாரும் நம்பிடாதீங்க. பொழப்பு முக்கியம்” என்று சிரித்துக்கொண்டே அடக்கமாகச் சொல்கிறார் மாஸ்டர்.
காளிரங்கசாமி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். “பாகன்” படத்தில் அஸ்லமிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் காளிரங்கசாமி. அப்போது அஸ்லம் குப்பைக்கதையினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தை தானே முன்வந்து தயாரிப்பதாகவும் தெரிவித்து அவரையே இயக்குனராக்கியுள்ளார்.
அதென்ன ஒரு குப்பைக்கதை? டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என்றால்,’’என்னப்பா படத்தை குப்பை படம்னு சொல்றேன்னு நிறைய பேர் கேட்டாங்க.. அவங்க அப்படி கேக்கும்போது அதுல ஒரு அக்கறை தெரிஞ்சது.. அதுவுமில்லாமல் இப்படி கேட்டுக் கேட்டே படம் எல்லாரிடமும் போய் சேர்ந்திரும்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு படத்தின் தலைப்பு என்னடா இதுன்னு?? சரியாவோ இல்ல தவறாகவோ மக்களைப் போய்ச் சேர்ந்திரணும் முதல்ல.. இது அப்படி பரவக்கூடிய ஒரு தலைப்பு.. படம் பார்க்கும் போது அல்லது படம் பார்த்துட்டு வெளியே வருகிற எல்லாரும் இந்த படத்துக்கு இந்த தலைப்புதான் சரின்னு சொல்லிட்டுப் போவாங்க. அப்படியொரு கதை இருக்கு உள்ளுக்குள்ள.. என்கிறார் படத்தின் இயக்குனர் காளிரங்கசாமி.
“ஆதலால் காதல் செய்வீர்“, “வழக்குஎண் 18/9″ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “கலகலப்பு”, “பட்டத்து யானை”, “மான்கராத்தே”, “யாமிருக்க பயமே”போன்ற படங்களில் நடித்தவர். சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, மௌனகுரு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ்முத்துசாமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். பெல்ஜியத்தில் வாழும் இந்தியர் ராமதாஸ், அஸ்லமுடன் இணைந்து “ஒருகுப்பைக்கதை” படத்தை தயாரிக்கிறார்..