இலக்கியம், புத்தக அறிமுகம், புத்தகம், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

அம்பையால் மட்டுமே இது முடியும்!

புத்தக அறிமுகம் – ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு

கவிதா சொர்ணவல்லி

கவிதா சொர்ணவல்லி
கவிதா சொர்ணவல்லி

“இந்த புக் படிச்சுட்டீங்களா, அந்த புக் படிச்சுட்டீங்களா” என்பது போன்ற மேதமையான கான்வர்சேஷன்களில் பங்கேர்ப்பதிலும் , இல்லை கும்பலாக சேர்ந்து கொண்டு படித்த புக்கை அக்கு வேறு ஆணிவேறாக கிழிப்பதிலோ அல்லது பாராட்டுவதிலோ பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை.

ஆனால்…ஒரு பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்த இப்படியான புத்தக வாசிப்பு விவாதங்கள் சிலவற்றில், அம்பையை பற்றி சிலாகிக்கும் தருணங்களில் எல்லாம் அவரின் “காட்டில் ஒரு மான்” மற்றும் “வீட்டின் மூலையில் ஒரு சமையலைறை” என்று இரண்டு கதைகளை பற்றி மட்டுமே பேச பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் லேசான எரிச்சல் எட்டி பார்க்கும். இந்த ரெண்டு கதையில் மட்டுமா அவள் “அம்பையாக” தெரிகிறாள் என்று.

அம்பை எப்போதும் அம்பைதான். அவளின் எல்லா கதைகளுமே “அம்பையின்” கதைகள்தான். அவளுடய கதைகள் யாருக்கு, எந்த பிரிவினருக்கு, எந்த வயதினருக்கு என்பதை எல்லாம் கடந்தது. அது பெண்களுக்கானது. எல்லா பெண்களுக்கும் ஆனது.

வெகு நாட்கள் கழித்து வந்திருக்கும் அம்பையின் “ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” சிறுகதை தொகுப்பை படித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதை படிக்கவெல்லாம் இல்லை நான். ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் ஆகிவிட்டேன்.

இதுதான் சிறுகதை என்கிற கட்டுமானங்களை எல்லாம் ஒற்றை விரலால் ஒதுக்கி நடந்து போகிறாள் அம்பை, இந்த கதை தொகுப்பு முழுவதும். கதைகளில் அம்பை பயன்படுத்தி இருக்கும் வாக்கியங்கள் அதி சுகமானதாக , அற்புதமானவையாக இருக்கிறது.

“புலரியில்” மிக சுத்தமான மனைவிக்கு ஒரு வீடும் , ஒழுங்கற்ற தன் காதல் கணவருக்கு அருகிலேயே மற்றொரு வீடும் என்று ஒரு புதிய வாழ்க்கையை நமக்கு அறிமுக படுத்தும் அம்பை… அந்த காதல் கணவர் இறந்த பிறகு அவருக்காக மனைவி எழுதும் ஒரு வாசகமான “உன் மூச்சு காற்றை என் வீட்டில் இறைத்து விட்டு போய் இருக்கிறாய்…சுத்தம் செய்ய முடியவில்லை” என்பதில் அவர்கள் இடையேயான காதலை சொல்லி செல்கிறாள். ஆனால் இது காதல் கதை இல்லை.

ரயில் பயணத்தின் நடுவில், தண்ணீர் இல்லாமல் செத்து கொண்டிருக்கும் ஜாதி வெறி பிடித்த ஒருவருக்கு, “நான் தலித்” என்று கூறும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்கும் பெண்ணின் வன்மம், வெறி, எனக்கு பிடித்திருந்தது. அது நானாக இருக்க கூடும் என்று நினைத்து கொண்டேன்.

“மரத்தடியில் திருவள்ளுவர்” கதையை அம்பையை தவிர வேறு யாராலும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. லண்டனில் சிறு தெருவில், இருக்கும் திருவள்ளுவர் சிலையின் தொடை மீது ஏறி அமரும் பெண் ஒருத்தி “வாசுகி அப்படி அமர்ந்திருப்பாளா ” என்று யோசிப்பது அக்மார்க் அம்பை. அம்பை மட்டுமே.

“நிலவை தின்னும் பெண்” சிறுகதையில் தன்னை ஏமாற்றியவனை செருப்பால் அடிப்பாளே அந்த பெண். அந்த ஆவேசம்தான் அம்பை. வாசித்து செல்லும் நமக்குள்ளும் அந்த ஆவேசத்தை விட்டு செல்கிறாள் அம்பை.

மிக நெகிழ்ச்சி அடைந்து, மிக ஆவேசம் அடைந்து, எங்கோ ஒரு சுய பச்சாதாபம் தாக்கி, அதன் வலி தாங்காமல் அழுதது “சோக முடிவுடன் ஒரு காதல் கதையில்”. இந்த கதையை அவசியம் படியுங்கள்.

தேவர்களால் புறந்தள்ளப்பட்டு அசுரர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மகிஷனின் காதல் கதை அது. சண்டிகை மீதான காதல் கொண்ட மகிஷனின் வழியே எழுதப்பட்ட கதை அது. அந்த தனிமை, அந்த புறக்கணித்தல், அசுரன் என்று கீழ்பட வைத்தல் என்று எல்லாமுமாக சேர்ந்து ஒடுக்கப்பட்ட ஒருவனின் வலியை அழுத்தமாக எழுதி செல்கிறாள் அம்பை.

இறுதியில் ஒற்றை ஆளாக போர்க்களத்தில் நிற்கும் மகிஷன் தேவியை பார்த்து கேட்கிறான் “உயர் குல பெண் ஒருத்தியை காமுருவது அத்தனை குற்றமா” என்று. சக்ராயுதம் பாய்ந்து வந்து அவனை வெட்டி தள்ளுகிறது.

அனுபவம் காரணமாக எழும் சோர்வோ, இல்லை ஒரு பொருளை பார்ப்பதில் ஏற்படும் சமரசங்களோ எதுவும் இல்லாமல், மிக இளமையான, மிக ஆக்ரோஷமான. மிக எதிர் குரல் எழுப்புபவளாக அம்பை இருக்கிறாள் இந்த “ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” சிறுகதை தொகுப்பில்.

அம்பையின் இந்த சிறுகதை தொகுப்பு ஒரு பயணம். பயணங்கள் இடையேயான பெரு வாழ்வு. வாழ்தலை கடக்கும் ஒரு நொடி. இந்த நொடியை எல்லாரும் அனுபவித்தே ஆக வேண்டும்.

“அம்பையால் மட்டுமே இது முடியும்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.