புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 1,250 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் எதிர்வரும் ஏப்ரல் 29-ம் தேதி 2015 ல் நடைபெறவுள்ளது. இந்த கவியரங்கத்தில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் தொடர்பு கொள்ளலாம் என பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோ.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
பாவேந்தர் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்தநாளை புதுச்சேரி மற்றும் தமிழக அரசும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் விரும்பிய தமிழ் மேம்பாடு, தாய்மொழிக் கல்வியை அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் பாரதிதாசன் இல்லத்தில் இயங்கும் ஆய்வு மையம் உயராய்வு மையமாக்கப்பட வேண்டும். பாரதிதாசன் விருது வழங்கவும், காரைக்காலில் பாரதிதாசன் சிலை நிறுவவும், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் பாரதிதாசன் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். மத்திய அரசு ஃபெலோஷிப் விருதுகள் வழங்கி, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் விவேகானந்தர் விழாக்களை தேசிய அளவில் கொண்டாடியது. அதுபோல தேசியக் கவிஞரான பாரதிதாசனையும் கொண்டாட வேண்டும்.
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியில் 1,250 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்க மாநாடு நடைபெறவுள்ளது. அப்போது 1,000 பக்கங்கள் கொண்ட மலர் வெளியிடப்படும்.
கவியரங்க மாநாட்டில் பங்கேற்க விரும்புபவர்கள் தன்விவரக் குறிப்பு, நிழற்படம், செல்பேசி எண்ணுடன் வேண்டுகோள் கடிதத்தை,
கலைமாமணி கோ.பாரதி,
பாரதிதாசன் அறக்கட்டளை,
4 முதல் தெரு,
காந்திநகர்,
புதுச்சேரி-605009 என்ற முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.
சிறந்த பகிர்வு