போப் ஃபிரான்சிஸ் முதலாளித்துவத்தை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி மேற்கத்திய ஊடகங்கள் அவரை லெனினிஸ்ட் என்று வர்ணிக்கின்றன. சமீபத்தில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போப், ‘ மார்க்ஸ் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்லலாம். கிறித்துவத்தின் தத்துவம் ஏழைகளுக்கானது.’ என்று பேசியிருக்கிறார்.
ஏழைகளுடன் உங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசிவருகிறார் போப் ஃபிரான்சிஸ். ‘இதைச் சொல்லும்போது நீங்கள் பொதுவுடைமைவாதியா என்று கேட்கலாம். ஆமாம் இதைப் பேசுபவர்கள் கிறித்துவர்களாக இருப்பார்கள்’ என்று மேலும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
முன்னதாக போப், உலக அரசியலில் ஊழலும் வன்முறையும் அதிகமாகிவிட்டது என்றும் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன் பங்குச் சந்தை மற்றும் யூக வணிகங்கள் ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பறிக்கின்றன என்று பேசியிருந்தார்.