வரும் ஞாயிறு அன்று சென்னை படப்பையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான உற்பத்தி ஆலை முன்பு மது அரக்கி உருவம் எரிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக மதுபான கடைகளை மூடக் கோரி தொடர்ந்து பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகிறார் நந்தினி.
இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக அவர் அறிவித்துள்ள குறிப்பில், ’மதுவுக்கு எதிராக தமிழக மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் இந்த கோபம் அரசுக்கு எதிரான பெரும் போராட்டமாக வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளதை தமிழக அரசு நன்கு அறியும்.ஆனால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது விநியோகம் செய்துவரும் மதுபான ஆலை அதிபர்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்க விடாமல் அரசை நிர்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.தி.மு.க.,அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மதுபான உற்பத்தி ஆலை வைத்திருக்கிறார்கள்.விஜய் மல்லையா போன்ற பெரு முதலாளிகளும் மதுபான ஆலைகளை வைத்திருக்கிறார்கள்.டாஸ்மாக்கை மூடிவிட்டால் இந்த அத்தனை மதுபான ஆலை அதிபர்களும் தங்கள் மது உற்பத்தி ஆலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.தமிழக அரசியலையே தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு சக்திவாய்ந்த இவர்களின் நிர்பந்தம் காரணமாகவே டாஸ்மாக் கடைகளை மூடுவது பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. ஆனால் பாதிப்புகள் அதிகமாக அதிகமாக மக்களின் கோபமும் போராட்டங்களும் அதிகரிப்பது உறுதி.ஆலை அதிபர்களுக்கு பயந்து கொண்டு இப்பிரச்னையில் தமிழக அரசு முடிவெடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயரை சம்பாதிக்க வேண்டியிருக்கும். தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம்.
நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 29.07.2014 அன்று சென்னை படப்பையில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் (MIDAS) மதுபான உற்பத்தி ஆலை முன்பு “மது அரக்கி உருவம் எரிப்பு போராட்டம்” நடத்த உள்ளோம். முதல்வர் ஜெயலலிதா மது விற்பனையை அரசுடைமையாக்கி ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து மதுப்படுகொலை செய்து கொண்டிருப்பதற்கு இவரது உயிர்த்தோழியான சசிகலாவின் மிடாஸ் ஆலை ஒரு முக்கிய காரணம்.ஆகவே தான் நமது அடுத்த போராட்ட மையமாக மிடாஸ் ஆலையை தேர்ந்து எடுத்துள்ளோம்.டாஸ்மாக்கை மூடும் வரை இவர்களை விடப்போவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.
நாட்டு மக்கள் நலன் பேணவேண்டிய அரசு; மதுபான உற்பத்தி, விற்பனை நிலையங்களை நடாத்தக்கூடாது. மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவர்களது போராட்டம் சரியானதே!