அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண்கல்வி, பெண்களின் சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!

இதுவும் கடந்துபோகுமோ?
ஜோ. ராஜ்மோகன்
பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் நள்ளிரவில் 10 மற்றும் 11 வயதுள்ள இரண்டு சிறுமிகளை சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இக்கொடுமைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஆழ்ந்த கவலையையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட் டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் கடந்த மே 27ந்தேதி திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற இரு தலித் சிறுமிகளை சமூக விரோத கும்பல் கடத்திச் சென்று புதர்கள் மண்டிய காட்டுப்பகுதியில் வைத்து இரு சிறுமிகளும் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் இரு சடலங்களையும் மரத்தில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் கூறுகையில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சியும், திகைப்பும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளன.
உலக மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் சுரண்டலையும் பாகுபாட்டையும் சந்தித்து வரும் நிலையில் அமைதியும், செழிப்பும் ஏற்பட சாத்தியமில்லை என்றார். இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 65 விழுக்காடு மக்கள் கழிவறை வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பெண்கள் இரவு நேரங்களில் மற்றும் அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்பே இப்பணிகளை முடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுவும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெற காரணமாக அமைகின்றன. உலகிலேயே அதிகமாக இந்தியாவில் தான் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர் என்று பல்வேறு புள்ளி விவரங்கள் உலக அரங்கில் நம்மை தலைகுனிய வைக்கின்றன.
பொள்ளாச்சியிலும் உ.பியிலும் நடை பெற்ற இச்சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றும் நடைபெற்றதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நகரங்கள், கிராமங்கள் என நாடுமுழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நடைபெற்றுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்களும், கொடூர கொலைகளும் தமிழ் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கிய நிகழ்வுகளை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. 2013 ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவி புனிதா மர்ம நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.
சென்னையில் ஐடி துறையில் பணியாற்றிய உமா மகேஸ்வரி வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் மறிக்கப்பட்டு சமூக விரோதிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சேலத்தையடுத்த வாழப்பாடியில் 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து பின் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாள்.தொடரும் இக்கொடுமையை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் இருந்தும் எதையும் தடுக்க முடியவில்லையே ஏன்?
violence on women
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எல்லாமும் சந்தைமயமாகி விட்ட நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளது உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஐந்து லட்சம் பெண் குழந்தைகள் இந்திய குழந்தைகள் என அதிர்ச்சி தகவல்களை இந்திய குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ளது.மேலும் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை சார்பில் 2012ல் குழந்தைகள் என்ற தலைப்பில் நாடுதழுவிய சர்வே நடத்தப்பட்டது.அதில் கடந்த ஆண்டுகளை விட 24 விழுக்காடு குற்றங்கள் அதிகரித்துள்ளன.
குழந்தை கடத்தல் என்பது 43 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பாலியல் பலாத்காரம் 30 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2012ம் ஆண்டு மட்டும் 6,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலும் 33, 100 வழக்குகள் பதிவாகியுள்ளன. உ.பியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 16.6 விழுக்காடும், மத்திய பிரதேசத்தில் 13.2 விழுக்காடும், தில்லியில் 12.8 விழுக்காடும், பீகாரில் 6.7 விழுக்காடும், ஆந்திராவில் 6.7 விழுக்காடும் எனகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன.மேலும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கை தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களையளிக்கிறது.தமிழகத்தில் 2011ல் 484 பெண்குழந்தைகள் மீது நிகழ்ந்த பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன.
2012ல் 528 ஆகவும், 2013ல் 727 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன. இதில் 75 விழுக்காடு குற்றங்கள் நகரங்களில் தான் நடைபெற்றுள்ளன.இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவுகள் 14 மற்றும் 15 சமத்துவத்திற்கான உரிமையை பெண்களுக்கு உத்திரவாதப் படுத்துகின்றன. மேலும் வாழ்வதற்கான உரிமையையும் கண்ணியமான வாழ்விற்கான உரிமையும் பிரிவு 21 உறுதிபடுத்துகிறது. ஆனால் இந்திய பெண்களுக்கு சம உரிமையும் கண்ணியமான வாழ்வையும் நமது அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே உறுதிசெய்கிறது. ஆனால் நடைமுறையோ இரண்டாம் பாலினமாக பெண்களை பார்ப்பதும், ஒடுக்குவதும், வன்முறைகளே அவர்களது வாழ்க்கை என தொடர்கதையாக பெண்களுக்கு அநீதிகள் தொடர்கிறது.பொள்ளாச்சி சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 3 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விடுதியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கை மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறையாகுமா? தமிழகத்தில் அனுமதியின்றியும் போதுமான பாதுகாப்பு, அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் தனியார் விடுதிகள் முழுவதும் தடைசெய்யப்பட வேண்டும். அங்குதங்கி பயிலும் மாணவர்கள் கல்வியை தொடரும் வகையில் மாற்று ஏற்பாடுகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அனுமதியோடு இயங்கி வரும் தனியார் விடுதிகளை, அரசு கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் அரசு நடத்திவரும் மாணவர் நல விடுதிகளில் குறிப்பாக மாணவியர் விடுதிகளில் உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு விடுதிக்கு ஒரு காப்பாளர் மற்றும் பாதுகாவலர், உதவியாளர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட விடுதிக்கான அடிப்படை வசதிகள் போன்ற உடனடி தேவைகளை அரசு கவனம் செலுத்தி நிறைவேற்றிட வேண்டும்.
விரைவு நீதிமன்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்திடுவது. குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் விதிமுறைகளை அமல்படுத்திட வேண்டும். நடவடிக்கையை மறுக்கும் குற்றவாளிகளை பாதுகாக்கும் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை உறுதிப்படுத்திட வேண்டும். இது போன்று நடைபெறும் குற்றங்களில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி காவல்துறையின் நேர்மையான விரைவான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மேற்கண்ட அரசின் கண்காணிப்புமே இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கும், குறைவதற்குமான வழிமுறையாகும். இல்லையென்றால் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறும் போது மட்டுமே விவாதிக்கப்படுகின்ற கவலைப்படுகின்ற நிகழ்வாக இதுவும் கடந்து போகும்.
கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்கம், மாநிலச் செயலாளர்

“இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.