புத்தக அறிமுகம்
மண்புழு என்னும் உழவன்
வளர்ப்பும் தொழிற்நுட்பமும் பயன்களும்
பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
தொலைபேசி: 04259 226012
கைபேசி: 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com
அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளை குறைக்கும் ஒரு தீர்வாக தற்சார்பு பொருளாதாரம் குறித்து தற்சமயம் அறிஞர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் பண்டைய கோட்பாடு புத்துயிர் பெற்றிருக்கிறது. அதனுடைய விளைவே இப்போது ஊடகங்களில் அதிக அளவு வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பேசப்படுவது. அரசு சார்ந்த நகர்புற வேளாண் நிறுவனங்களும் மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம் குறித்த பிரத்யேக பயிற்சி அளிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. பொதுமக்களும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயங்களும் உண்டு. ஒன்று வீட்டு நிர்வாகம் போக உபரியாக கிடைக்கும் நேரத்தை வீட்டுத் தோட்டம் சார்ந்த தொழில்களைச் செய்யும் வாய்ப்பை பெண்களுக்குத் தருகிறது. சிறிய அளவில் நர்சரி என்னும் நாற்றுப் பண்ணைகள் நடத்துதல், இயற்கை உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்றவை வீட்டுத் தோட்டம சார்ந்த சில தொழில்களாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள பல சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சில குழுக்களால் மட்டுமே மண்புழு உரத் தயாரிப்பு தொழில் வெற்றிகரமாக செய்யப்படுகிறது. இந்தப் பயிற்சி மூலம் மண்புழு உரத் தயாரிப்புக்காக வழங்கப்பட்டவை நம் மண்ணிலிருந்து அந்நியப்பட்ட மண்புழுக்களே. இயற்கை வேளாண் அறிஞர்களால் இது கடுமையான ஆட்சேபத்திற்கு உள்ளானபோது சுய உதவிக் குழுக்களின் மண்புழு உரத் தயாரிப்பு பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது. இப்படி முற்றுபெற்ற மண்புழு உரத் தயாரிப்பை, உயிர்த்தெழ வைத்திருக்கிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில். நம்மோடு வாழ்ந்த நம் மண்ணின் பாதுகாவர்களாக இருந்த மண்புழுக்களை மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சுல்தான் அகமது இஸ்மாயில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக நகரங்களில்கூட மண்புழு உரம் தயாரிக்கலாம் என்பதையும் இதன் மூலம் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்பதையும் ஆய்வு பூர்வமாக உணர்த்தியிருக்கிறார்.
மண்ணைக் காண்பதே அரிதாகிப்போன கான்கிரீட் நகரத்தில் எப்படி இது சாத்தியமானது என்பதை விரிவாக தன் மண்புழு என்னும் உழவன் என்னும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில்.புத்தகத்தில் அவர் சுட்டியியிருக்கும் சென்னை கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் 45 வயதான சாந்தி சுபாஷ், ஒரு வெற்றிகரமான மண்புழு உரத் தயாரிப்பாளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சாந்தி, அருகில் உள்ள பிந்தங்கிய இரண்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துவருகிறார்.
சாந்தி வசிக்கும் பகுதியைச் சுற்றியிருக்கும் இந்திரா நகர், பெசண்ட் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தூக்கி வீசப்படும் சமையலறை கழிவுகளை வாங்கி அதன் மூலம் மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் கிடைத்த மண்புழு உரத்தை ஆரம்பத்தில் தெரிந்தவர்களுக்கு விற்று, பிறகு படிப்படியாக விற்பனையை விரிவுபடுத்தியிருக்கிறார். இன்று வங்கிகளின் உதவியுடன் வெற்றிகரமான சுய தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்.
மண்புழு உர உற்பத்தி தொழில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் மேற்கண்ட உண்மைச் சம்பவத்தின் வாயிலாக மண்புழு குறித்த புத்தெழுச்சியை நம்மிடையே ஏற்படுத்துகிறது மண்புழு என்னும் உழவன் நூல். மண்புழுக்கள் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்களில் தொடங்கி, நம் மண்ணை உயிர்புள்ளதாக வைத்திருக்கும் மண்புழு வகைகள், நச்சு உரங்களால் அழிக்கப்பட்ட அவைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி?, எவ்வகையில் மண்புழுக்கள் விவசாயிகளின் நண்பனாக கருதப்படுகிறது?, மண்புழுக்களை வளர்ப்பது எப்படி? மண்புழுக்கள் மண்ணுக்குள் நிகழ்த்தும் வளமாக்கும் சுழற்சி, மண்புழு உரத்தால் பயனடையும் விவசாயம், மண்புழு வளர்ப்பின் பல்வேறு பயன்பாடுகள் (உதா: மண்புழுக்களை கோழி தீவனத்துக்காக வளர்ப்பது, மனிதர்களின் உணவுக்காக வளர்ப்பது, மண்புழு உரத் தயாரிப்பு), இறுதியாக நகரங்களில் கழிவுகளின் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு என மண்புழு குறித்த அத்தனை தகவல்களையும் அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நூல் மண்புழு என்னும் உழவன். கிட்டத்தட்ட 35 வருடமாக மண்புழு குறித்த ஆய்வில் சேகரித்த தகவல்களின் களஞ்சியமாக இருக்கிறது இந்த சிறு நூல். பூவுலகின் நண்பர்கள் மற்றும் எதிர் வெளியீடு மூலமாக கிடைத்திருக்கும் இந்த நூல் நம் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு நூல்.
எதிர் வெளியீடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம். தமிழகத்துக்குள் நூல் வாங்குவோருக்கு கூரியர் செலவு இலவசமாக தருகிறார்கள்.
How to maitain a Pomegranate tree???????????