கவிதா சொர்ணவல்லி

தன்னை மிக கேவலமாக விமர்சிப்பதாக கூறி, கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக, அவர் பணிபுரியும் பத்திரிகை குழுமத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் “கருத்து சுதந்திரதிற்காக” போராடி வரும் லீனா மணிமேகலை.
மூன்று அல்லாது நான்கு வருடங்களுக்கு முன், லீனா மணிமேகலையின் அந்த “மார்க்சிய” கவிதைக்கு ம.க.இ.க-வினவு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்று, அதை சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு அ.மார்க்ஸ் தலைமையில் இக்சா-வில் நடந்த சமாதான கூட்டம் லீனாவுக்கு இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன்.
அந்த கூட்டத்தில் “மார்க்சிய” கவிதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன்னுடைய வீட்டு முன் வந்து, ம.க.இ.க-வினவு அமைப்பினர் போராட்டம் நடத்துவதாகவும், வாடகை வீட்டில் குடியிருக்கும் தனி மனுஷியான தான், இத்தகைய போராட்டங்களை எதிர்கொண்டே வாழ்வதாகவும், நீளம் நீளமாக லீனா பேசியது அவருக்கு நினைவில் இருக்கலாம்.
அந்தக் கூட்டத்தில் லீனா மணிமேகலை சொன்னது உண்மை என்றால், அன்று ம.க.இ.க-வினவு அமைப்பினர் லீனாவுக்கு செய்ததைத்தான், இன்று, லீனா, கார்டூனிஸ்ட் பாலாவுக்கு நிகழ்த்தி கொண்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஒருவர் வெளியிடும் கருத்துகளுக்காக, அவர் பணி புரியும் நிறுவனங்களிடம் புகார் தெரிவிப்பதும், சமூக வலைதளங்களில் எழுதுவதற்காக கைது செய்து சிறையில் அடைப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். துப்பட்டா அணியாமல் கல்லூரி உள்ளே வரக் கூடாது என்று சொன்ன லயோலா கல்லூரிக்கு எதிராக பெரும் கருத்து சுதந்திரப் போரை நடத்திய லீனாவுக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஒரு கள செயற்பாட்டளாராக, லீனாவின் பணிகள் குறித்து, தேவையான அளவில் ஊடகங்கள் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், பெயர் எதுவும் குறிப்பிடாமல் ” ஒரு டாக்குமென்டரி வியாபாரி” என்று கார்டூனிஸ்ட் பாலா எழுதியதை, “டாக்குமென்டரி வியாபாரி என்று தன்னையே குறிப்பிட்டு கூறியதாகவும், அது மட்டுமல்லாமல் தன்னை ஒரு விபச்சாரி” என்று கார்டூனிஸ்ட் பாலா எழுதியதாகவும், இட்டுக்கட்டும் அளவுக்கு லீனாவுக்கு அப்படி என்ன ஒரு Attention Seeking DisOrder திடீரென வந்துவிட்டது என்று தெரியவில்லை.
பெயர் குறிப்பிடாவிட்டாலும் ” உத்திகளை பயன்படுத்துகிறார்” என்று கார்டூனிஸ்ட் பாலா எழுதியது எத்தனை கண்டனத்துக்குரியதோ, அது போல “கார்டூனிஸ்ட் பாலா பணிபுரியும் நிறுவனத்திற்காக தான் கதைகள் எழுதியதாகவும், அதே நிறுவன பத்திரிக்கைகளில் தன்னுடைய பேட்டிகள் வந்திருக்கின்றன” என்று அக்குழுமதிற்கும் தனக்குமான உறவை சுட்டிக்காட்டி ஒரு புகார் கடிதம் எழுதியுள்ள லீனாவும் கண்டனத்திற்குரியவர்தான்.
கார்டூனிஸ்ட் பாலாவின் கருத்துக்களுக்காக, அவர் பணிபுரியும் குழுமத்திற்கு கடிதம் எழுதியதன் மூலம், சமூக வலைதளங்களில் சுற்றி கொண்டிருக்கும் நிஜமான social media trolls, fringe elements-களுக்கு ஒரு அடையாள முன்னோடியாக மாறி இருக்கிறார் லீனா மணிமேகலை.
உண்மையான அடையாளங்களுடன் கருத்துக்கள் கூறும், போராடும், வாதங்கள் முன்வைக்கும் அனைவர் மீதும், அவர்கள் பணி புரியும் அலுவலங்களுக்கு புகார் அளிக்கும் வேலைகளை, அடையாளமற்ற social media trolls, fringe elements-கள் லீனாவை பின்பற்றி தாக்குதல் தொடுப்பார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. நல்லது.
பின் வரும் காலங்களில் உண்மையான களப் போராளிகள் Fake ID-களிலும், social media trolls, fringe elements–கள் உண்மையான அடையாளங்களுடனும் வாழ வாழ்த்துகிறேன் லீனாவின் இந்த புது முயற்சியின் மூலம்.
மாச சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள் எல்லாம், இனி கருத்து சொல்லக் கூடாது என்கிற நிலையை பிரயத்தனப்பட்டு மேற்கொண்டிருக்கிறார், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி கொள்ளும் லீனா மணிமேகலை. இந்த சூழல் தொடர்ந்தால், அரசு உதவியுடன் விமானங்களில் பறப்பவர்கள் மட்டும்தான் இனி கருத்து சொல்ல முடியும் போல.