குட்டி ரேவதி
தமிழகத்தில், பிரசன்ன விதானகேவின், “With You Without You” படத்தின் வெளியீடும் அதன் மீதான தடை என்ற வதந்தியும் திரையிடலும் என ஒட்டுமொத்தமாக எல்லாமே, “கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை”யாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலத்தில், இது போன்று அரசியல் + கலை இரண்டின் ஆரோக்கியமான இணைதல்கள் இவ்வளவு சிறப்பாகத் தமிழ்ச்சூழலில் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும்.
பிவிஆர் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிகள், அதன் மீது தடை என்பதாக வதந்தி, தடை மீதான மறுப்பு குறித்த சமூகவலைத்தள விவாதங்கள், பின் தமிழ் ஸ்டுடியோவின் திரையிடல், அங்கு நிகழ்ந்த உரையாடல் எனக் கோர்வையான சம்பவங்களின் தொகுப்பைத் தான், “கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை” என்கிறேன்.
நாம், கிளப்புகளில் திரையிடவோ அல்லது கேளிக்கை விடுதிகளில் திரையிடவோ மட்டுமே திரைப்படச்சங்கங்கள் நடத்தவில்லை, இது அரசியல் கூட்டம் இல்லை என்பதற்கு.
சமூகக்குறுக்கீடுகள் செய்யவும், வணிக சினிமாக்களின் பேரங்கள், சமரசங்களுக்கு எதிராகவும், ‘சினிமா என்பதே பொழுது போக்கிற்கான கலை’ என்பதை மாற்றியமைக்கும் முயற்சியிலும் தாம் திரைப்பட இயக்கங்கள் மற்றும் சங்கங்களைத் தொடங்குகிறோம், என்பதை நாம் நம் கவனத்திலும் புரிதலிலும் ஆழமாகக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அடிப்படையில் இது சமூக அரசியலை உள்வாங்கியதன் நிகழ்வு. இது எப்படி ஓர் அரசியல் செயல்பாடாக இல்லாமல், வெறும் கலைச்சேவையாக மட்டுமே இருக்கமுடியும்.
ஆர்விகே ஸ்டுடியோவில், பார்வையாளர்கள் ஒன்று திரண்டு பார்த்த அனுபவம், பிவிஆர் திரையரங்கிலோ எஸ்கேப் திரையரங்கிலோ கூட வாய்த்திருக்காது. இது ஒரு நிகழ்த்துக்கலையின் வடிவமாய் இருந்தது.
பிரசன்ன விதானகே, நமது எம்மாதிரியான அரசியல் கேள்விகளுக்குமான பதிலை பொறுப்புடனும் பொறுமையுடனும் சொல்ல முன்வந்தது, அவரது கடப்பாட்டை இன்னும் அதிகமாக நிரூபிக்கிறது. அரசியல்பூர்வமான ஒரு கலைப்படைப்பு, எந்த அளவிற்கு ஒருமித்த தாக்கத்தையும் எழுச்சியையும் கொந்தளிப்பையும் ஊக்கத்தையும் ஒரே சமயத்தில் தரமுடியும் என்பதை இத்திரையிடலில் கண்ணுறமுடிந்தது. இது அபூர்வமானதொரு காலத்தருணம். இதை நாம் செம்மையாகப் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும், நண்பர்களே.
இங்கிருந்து நாம் முற்றிலும் வேறு மாதிரியான கலைத்திசையைத் தேர்ந்தெடுக்கும் துணிவையும் முயற்சியையும் கொள்ளவேண்டும் என்றும் தோன்றுகிறது, நண்பர்களே!
“With You Without You” திரையிடல் அனுபவத்தையும், இப்பட அனுபவத்தையும் முன்வைத்த புரிதல்களுடன், நாம் முற்றிலுமான புதிய கலை முயற்சிகளில் இறங்கவேண்டும். அரசியல் சிந்தனையும் சமூகப்பார்வையும் கொண்ட சினிமாக்களையும் இலக்கியங்களையும் கலைவெளிப்பாடுகளையும் செய்வதில் முனைவுடன், ஒரே கவனத்துடன் மூர்க்கமாகச் செயல்படுவோம்.
இலங்கையிலும், இந்தியாவிலும், ஏன் தமிழக நிலப்பரப்பிலும் கூட, திட்டமிட்டு நம் மீது இயக்கப்படும் இனப்படுகொலைச் சதியைக் கூட்டமாக நாம் முறியடிக்கவேண்டும்.
“With You Without You” படம், ஓர் ஆழமான பாடம். நம்மைப்புதுப்பித்துக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். கலையும் அரசியலும் ஒன்றுக்கொன்று சமரசமின்றி ஒன்றாக இயங்கமுடியும் என்பதற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம். இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். புற்றீசல்கள் போல கிளம்புவோம்.
கட்டுரையாளர் குட்டிரேவதி எழுத்தாளர், பாடலாசிரியர், கள செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
சிறந்த பகிர்வு