அண்மையில் புதிய தலைமுறை வார இதழில் பணத்திற்காகப் போராடுகிறார்களா? என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்
“புதிய தலைமுறை” வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் “பணத்திற்காகப் போராடுகிறார்களா?” எனும் ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். அவர் அணுசக்தி ஆதரவாளர் என்றாலும், என்னைப் பெரிதாக விரும்பாதவர் என்றாலும், கட்டுரையைத் தெளிவாக, நேர்மையாகவே எழுதியிருக்கிறார்.
அரசின் கொள்கைகள், நடைமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை; அவற்றை விவாதிக்கவும், விமர்சிக்கவும் வேண்டும்…”ஆனால் அதை அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செய்வது கண்டிக்க மட்டுமல்ல, தண்டிக்கப்படவும் வேண்டும்” என்று முடித்திருக்கிறார்.
நானும் இந்த முடிவோடு நூறு சதவீதம் உடன்படுகிறேன். கடந்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் தடவைக்கு மேல் சொன்ன அந்த உண்மையை மீண்டுமொருமுறை இங்கேப் பதிவு செய்கிறேன். கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவோ, எனது பிற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவோ நான் எந்த அயல்நாட்டிடமிருந்தும் சல்லிக்காசு கூட வாங்கியதுமில்லை, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாக செயல்படவுமில்லை. என்னை என் பெற்றோர் அப்படிப் பெறவுமில்லை, வளர்க்கவுமில்லை. என் நாட்டிற்காகவும், என் மக்களுக்காகவும் மட்டுமே நான் இயங்குகிறேன். நான் சொல்வது உண்மையல்ல என்று நிரூபித்தால், நான் போராட்டத்திலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும் உடனடியாக விலகத் தயாராக இருக்கிறேன்; எஞ்சியுள்ள என் வாழ்வை சிறையில் கழிக்கவும் தயாராயிருக்கிறேன். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளோடெல்லாம் அணுசக்தி ஒப்பந்தங்கள் போட்டு, கமிஷனும் வாங்கிக் கொண்டு, களவும் செய்து, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளை, அமைச்சர்களை, அதிகாரிகளை, விஞ்ஞானிகளை, இடைத்தரகர்களைப் பற்றியெல்லாம் திரு. மாலன் அவர்கள் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லையே, ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சுப. உதயகுமாரன்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் பு.த. ஆசிரியர் மாலன் ‘’உங்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வித காழ்ப்போ வெறுப்போ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அறிவுலகைச் சேர்ந்தவர் என்ற மதிப்பும் கூட உண்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் “கூடங்குளம் போராட்டத்திற்காகத் தனக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டை உதயகுமார் மறுக்கிறார்.”
நான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார். வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள். கிர்வான் ஆய்வு நிலையத்தின் சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன். இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை” என்கிறார். என விரிவாக உங்கள் விளக்கத்தையும் தந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
உங்களைப் பற்றிய குற்றச்சாட்டை நீங்கள் மறுத்துவிட்டீர்கள். உளவுத் துறை அறிக்கை . கூடங்குளம் போராட்டங்களில் பங்கேற்ற 11 தன்னார்வ அமைப்புக்களில் 8 அயல்நாட்டிலிருந்து நிதி பெறுபவை இந்த எட்டு அமைப்புகளும் 2006-07 நிதியாண்டிலிருந்து, 2010-11 வரை 80 கோடி ரூபாய் பெற்றுள்ளன; இந்த 80 கோடியில் 43 கோடி ரூபாய் (53%) தூத்துக்குடி பன்நோக்கு சமூகப் பணிச் சங்கத்திற்கும், 20 கோடி ரூபாய் (25%) தூத்துக்குடி திருச்சபை சங்கத்திற்கும் சென்றுள்ளன. மீதமிள்ள 22 சதவீதம் ஆறு தன்னார்வ நிறுவனங்களுச் சென்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதைக் குறித்த விளக்கங்களும் கிடைக்குமானால் அதையும் வெளியிடுவதில் எனக்குத் தயக்கமில்லை’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.