புத்தக அறிமுகம், புத்தகம்

புத்தக அறிமுகம் : ஈழத்தை நினைவுபடுத்தும் ஈராக்கின் கதை `அப்பாவின் துப்பாக்கி’

புத்தக அறிமுகம்

நாகரத்தினம் கிருஷ்ணா

அப்பாவின் துப்பாக்கி
(தன்வரலாறு)
ஆசிரியர் : ஹினெர் சலீம்
தமிழில் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி. சாலை,
நாகர்கோவில் – 629 001.
பக்கங்கள் : 112 | விலை ரூ.90

பிரெஞ்சு மொழியிலிருந்து நண்பர் வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்துள்ள தன்வரலாறு ‘அப்பாவின் துப்பாக்கி’ அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராளியின் துப்பாக்கி, ‘போரைப் பற்றி மட்டுமே அறிந்த’ ஓர் அப்பாவின் துப்பாக்கி.

போராளிகள், தீவிரவாதிகள் என முன்மொழியப்படும் அநேகர் அப்பாவிகள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து வாழ்வுரிமைகளைப் பறிக்கிறபோது கூச்சல்கள் எழாது. அதேவேளை அடக்குமுறைக் கனவான்களின் காலை மிதித்தால்கூட அவர்களுடன் சேர்ந்துகொண்டு உலகம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும். கையறுநிலையில் வாழப்பழகிக் கொண்ட இம்மனிதர்களுக்குள்ளும் ஒரு தகப்பனாய், சகோதரனாய், பிள்ளையாய், தங்கையாய் வாழ்க்கையைச் சுவைக்க, உயிர் வாழ்க்கையின் சூட்சமங்களைப் புரிந்துகொள்ள கனவுகள் இல்லாமலில்லை. பலருக்கு குர்தின மக்களின் அவல நிலை தெரியாதிருக்கலாம். துருக்கியில் ஆரம்பித்து, ஈரான், ஈராக், சிரியா என மேற்கு ஆசியா முழுவதும் பரவிக் கிடக்கும் குர்தின மக்கள் அகதிகளாக உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறவர்கள். தங்கள் தங்கள் நிலப்பகுதியை இழக்கவேண்டிவரும் என்பதால் மேற்கண்ட நாடுகள் குர்திஸ்தான் உருவாக்கத்தை எதிர்க்கின்றன. 1946இல் சுன்னி இனத்தவரான இந்த இஸ்லாமியமக்கள் தங்களுக்கென ஒரு நாடு வேண்டித் தாங்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மஹாபத் நகரில் (ஈரான்) குர்து குடியரசைப் பிரகடனம் செய்தார்கள். அதே ஆண்டு டிசம்பர் மாதம் மன்னர் ஆட்சியின் கீழ் ஈரான் ராணுவம் தலையிட்டு அதை முற்றாக அழித்தது. அதன்பின் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த முல்லாக்களும் குர்தின மக்களின் பண்பாட்டழிப்பிற்குக் காரணமானார்கள். இன்றைக்கு மஹாபத் நகரம் 60000 குர்தின மக்களைக் கொண்டிருந்தும் ஈரான் ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டின்கீழ், இருந்துவருகிறது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறியப்படுகிறது. குர்தின மக்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் திட்டிவாசல்தான் அப்பாவின் துப்பாக்கி. ஹினெர் சலீம் (Hiner Saleem) என்ற குர்திய திரைத்துறை வல்லுநரின் சுயகதை. ஈராக் நாட்டிலிருந்து சதாம் உசேன் காலத்தில் தப்பிவந்த அறிவு ஜீவி. பிரான்சு நாட்டில் வாழ்கிறார். பல திரைப்படங்களை எழுதித் தயாரித்திருக்கிறார்.

“அப்போது எனக்கு விபரம் தெரியாத வயது” என ஆரம்பிக்கிற ஆசாத் ஷெரொ செலீம் என்ற ஈராக்கைச் சேர்ந்த குர்தினச் சிறுவனே கதை சொல்லி. தொடக்க வரியூடாகச் சொல்லவிருக்கும் செய்தியின் அவலத்தைப் பூடகமாகத் தெரிவிக்கிறான். “பழைய வீடு, முசுக்கொட்டை மரமொன்று இருந்தது. அதன் கீழே உட்கார்ந்தபடி என் அம்மா மாதுளம் பழங்களை உரித்துக்கொண்டிருந்தாள். என் மாமா மகன் வீட்டின் மொட்டை மாடிக்குப் போய்ச் சேர்ந்தேன் . . . அங்கு, ஷெத்தோவையும் அவர் வளர்த்து வந்த மூன்று புறாக்களின் கூண்டுகளையும் பார்த்தேன். தன் கையில் வைத்திருந்த புறாவைப் பெருமை பொங்க என்னிடம் காட்டிவிட்டு, அவர் அதை வானில் பறக்கவிட்டார். பறக்கும் விசையைப் பெற்ற அப்பறவை ஆகாயத்தின் உச்சியை நோக்கி, எழும்பிப் பறந்தது. பிறகு, வெற்றிடத்தில் பெரிய சுமைபோல் கீழே இறங்கி வட்டமடிக்க ஆரம்பித்தது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம். மேலே எழும்பிய புறாவை, அண்ணாந்து வாயைப் பிளந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தேன்”, என அமைதியானதொரு காட்சிச் சித்திரத்துடன் நாவல் தொடங்குகிறதென நினைத்தால் அதுதான் இல்லை. அந்த அமைதிச் சூழலைக் குலைப்பதுபோல அடுத்த ஓரிரு நிமிடங்களில் வேறு சம்பவங்கள்:

“எங்கள் வீட்டுக்கு மிக அருகில் பதற்றமான குரல்கள் கேட்டன. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள வேகமாக ஓடினேன் . . . பெண்கள் பயந்து எழுப்பிய கூக்குரல் எனக்குக் கேட்டது. யாராவது இறந்து விட்டார்களா? . . . பச்சைத்துணியால் உறைபோடப்பட்ட குரானுடன் என் அம்மா பரபரப்பாகக் கத்திக்கொண்டே வெளியே ஓடியதைப் பார்த்தேன். அங்குப் பதற்றத்துடன் நின்றிருந்த ஆயுதம் தாங்கிய ஆட்களிடம் அந்தக் குரானைக் காட்டி, கலக்கமான குரலில் அவர்களைப் பார்த்துக் கெஞ்சினார். “குரான்மேல் சாட்சியாக, என் வீட்டை ஒன்றும் செய்துவிடாதீர்கள்”. என் கண்முன்னே அவர்மேல் உருட்டுக் கட்டையால் அடி விழுந்தது. அப்படியே பூமியில் சாய்ந்துபோனார். முட்டிபோட்டபடி சமாளித்து எழுந்திருக்கப் பார்த்தார். என்னைப் பார்த்துவிட்ட அம்மா பயந்து போய், “போய்ப் பதுங்கிக்கொள்’’ என்று கத்தினார். காரணம், சிறியவரோ? பெரியவரோ? ஆண் என்றால் கொல்லப்படக்கூடும். நான் அம்மாமேல் போய் விழுந்தேன். அவரோ எழுந்து என்னைத் தள்ளிவிட்டார். உடனே வேகமாகத் தோட்டத்துப் பக்கம் ஓடிப்போய் ஒரு மரத்துக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டேன். எங்கள் பகுதியெங்கும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது” என்ற விவரிப்பை வாசித்தபோது ஆசாத் ஷெரோ எனக்கோர் ஈழத் தமிழ்ச் சிறுவனாகத் தோன்றினான்.

“அவரை உடனடியாகக் கொன்றுவிடவில்லை…..கால்களைப் பிணைத்து ஒரு ஜீப்பின் பின்புறம் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள்” (பக்கம் . . .12)

“அம்மா முகத்திலிருந்த சிரிப்பு எப்போதோ மறைந்து போய்விட்டது” (பக்கம் . . .14)

“அம்மாவிடம் அப்பா அடிக்கடி மீசையைத் தடவியபடி “ஹேமத் நான்தான் தளபதியின் அந்தரங்கத் தகவற் தொடர்பாளன்” எனப் பெருமையாகச் சொல்வதுண்டு.” (பக்கம் 16)

“ஓ நண்பர்களே! தைரியமாக இருங்கள். குர்திய இனம் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்தம் மொழியை யாரும் வீழ்த்த முடியாது.” (பக்கம் . . .16)

“நம்பிக்கையோடு பேசினார். எங்கள் உடம்பு முழுவதும் சற்றே சிலிர்த்தது. இன்னும் ஒரு வருடத்தில் குர்திஸ்தான் எங்களுடைய நாடாகிவிடும்” (பக்கம் . . . 19)

“எங்களுக்கு மேலே ஆகாயத்தில் இரண்டு விமானங்கள் தாழ்வாக வந்து வட்டமடித்தன. சிலர் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். இன்னும் சிலர் தரையில் பதுங்கிக்கொண்டார்கள்.” (பக்கம் . . . 23)

“உணவுத் தட்டுப்பாடுகளால் எல்லோரும் மெலிய ஆரம்பித்தோம்.” (பக்கம் . . .25)

“கருகிய சுவர்களின் இடிந்த பாகங்கள் மட்டுமே மீதியிருந்தன” (பக்கம் . . .30)

சொந்த மண்ணிற்காகப் போராடுகிற மக்கள் உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவராக இருப்பினும் எதிர்கொள்கிற அவலங்கள் இவை. ஈழம், பாலஸ்தீனம், செச்சென், திபெத், சிரியா, காஷ்மீர் என்று உலகின் எப்பகுதிப் போராட்டத்துடனும் இவ்வரிகளை இடைச்செருகலாக வைத்து எழுத முடியும்.

அபாயம் மிகுந்த இக்கட்டான குர்தியர்களின் அன்றாட புற வாழ்க்கையன்றி, தன்னிலையில் சொல்லப்படும் கதையில், விடுதலை யுத்தகளச் சூழலில் உள்ள ஒரு சிறுவனின் ஏக்கங்கள், கனவுகளுங்கூட, நமது மனதை விட்டு அகலாவண்ணம் சொல்லப்பட்டிருக்கின்றன.

‘அண்ணன் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்தான். என் நாக்கில் எச்சில் ஊறியது . . . அந்தப் பாக்கெட்டை வைத்திருந்த அண்ணன் கை திரும்பும் பக்கமெல்லாம் என் கண்களும் கூடவே சென்றன.’

“என்னைப் பொறுத்தவரை குர்தியர் என்றால் அது அந்தக் கவிதைகளும் (மலெ லெஸிரியன் கவிதைகள்) நான் கற்ற பாடல்கள், பச்சை நிறத்திலோ மாதுளை நிறத்திலோ சந்தனப் பூப்போட்ட பெரிய ஆடைகளை அணிந்த அந்தப் பெண்கள்தான்”

“யூதரோ, கிருத்துவரோ, இஸ்லாமியரோ அதைப் பற்றி என் அம்மாவுக்குக் கவலை இல்லை – புனிதர் புனிதர்தான்.”

“நான் நாள்தோறும் ஒரே பிரார்த்தனைதான் செய்து வந்தேன். அந்தப் பிரார்த்தனை, வகுப்புகள் குர்திய மொழியில் தொடங்க வேண்டும்.”

போன்ற வரிகள் ஊடாக விரியும் காட்சியும் உரைக்கும் செய்தியும் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.

ஒரு பக்கம் அடக்குமுறை அதிகாரத்தின் வேட்டுகள், மறுபக்கம் போராளிகளின் துப்பாக்கிக் குண்டுகள் இடையில் உயிர்வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ள குர்தின மக்களின் அவல வாழ்க்கை – கதை சொல்லி பதினேழு வயதில் சிரியாவுக்கு தப்பிச்செல்லும்வரை நீள்கிறது. நூல் முழுக்கத் துப்பாக்கிக் குண்டுகள் ஓயாமல் வெடிக்கின்றன.நாதியற்ற மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். ‘ரேடியோ மாஸ்கோவும்’, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவும்கூட ‘குர்தின மக்களை விட்டுவைப்பதில்லை. தங்கள் பங்கிற்கு அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள், அவர்கள் தலைவிதியைத் திருத்த முற்படுகிறார்கள். நூலாசிரியர் அடிப்படையில் ஓர் திரைப்பட இயக்குநர் என்பதாலும் தேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதாலும் மனதிற் பதிவுசெய்திருந்த காட்சிகளை எழுத்தூடாகத் தெளிவாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

நூலாசிரியரின் இளவயது அனுபவம், ஓர் ஆவணம்போலப் பதிவாகியுள்ளது. அடிப்படை உரிமைகளுக்காக சாத்வீகப் போராட்டக்காரர்கள்மீது அடக்குமுறை (காவல்துறை, ராணுவம், ரகசியப் போலீஸார், குண்டுவீச்சுகள் . . .), அவலக்குரல்களுக்கு செவி சாய்க்கிறவர்கள் இல்லை. பிற விடுதலைப் போராட்டங்களைப் போலவே, குர்தியப் போராளிகளின் தலைவராகத் தளபதி முஸ்த்தபா பர்ஸானி, போராளிகளின் கட்டுப்பாட்டில் பிலே கிராமம். உரிமைக்காகப் போராடும் குடும்பங்களின் ஓட்டைவாழ்க்கை, சின்னச்சின்ன சந்தோஷங்கள், அர்த்தமற்ற உயிரிழப்புகள், அதனை அதிகம் கணக்கில்கொள்ளாமல் என்றாவதொரு நாள் சொந்தநாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த நொடியைப் பதற்றத்துடன் எதிர்கொள்ளும் வாழ்க்கைமுறை. ஆட்சிமாறினாலும் ஆளும் வர்க்கம் மாறினாலும் சிறுபான்மை மக்களின் கொடூர வாழ்க்கையில் எள்முனை அளவிற்குக்கூட மாற்றங்கள் நிகழ்வதில்லை. ஹினெர் சலீம் உடைய சுயசரிதை பல மொழிகளில் வந்துள்ளது. தற்போது தனது விடுதலைக் குரலை திரைப்படங்கள் ஊடாகச் சர்வதேச அளவில் முழங்கி வருகிறார்.

நண்பர் நாயகர் வழக்கம்போலவே மிக எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். வாசகர்கள் தாகசாந்தி செய்வதுபோல நூலை வாசித்துப் போகலாம் அப்படியொரு அனுபவத்திற்கு வழியுண்டு. தானொரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் என்பதை நாயகர் மீண்டும் தமது உழைப்பூடாக தெரிவித்திருக்கிற படைப்பு. நவீன தமிழிலக்கியம் ஊட்டம் பெற பிரெஞ்சு, ஸ்பானீஷ் மொழி இலக்கியங்கள் தமிழில் நிறைய வரவேண்டும். பிரான்சு நாட்டில் செயல்பட்டுவரும் முக்கியப் பதிப்பகங்கள், இலக்கிய மொழிபெயர்ப்புக்கென இரண்டு நெறிகளைப் பின்பற்றுகிறார்கள்.

1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்க வேண்டும். 2. எந்த மொழிக்குக் கொண்டுசெல்லப்படுகிறதோ அந்த மொழி, மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழியாக இருக்கவேண்டும். இதனடிப்படையில் பார்க்கிறபோது நாயகர் போன்ற நவீன இலக்கியத்தில் ஆர்வம்கொண்ட மொழியாசிரியர்கள் பங்களிப்பு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த இன்றியமையாதது. நண்பர் நாயகர் மேலும் பல நல்ல படைப்புகளைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக் கொண்டுவர வேண்டும்.

நன்றி : நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம்.

“புத்தக அறிமுகம் : ஈழத்தை நினைவுபடுத்தும் ஈராக்கின் கதை `அப்பாவின் துப்பாக்கி’” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. குர்திஸ்தான் குறித்து இரண்டு புத்தகங்களை வாசித்தேன் , உடனே நினைவில் வந்தது மறைந்துபோன ஈழப்போர் . சர்வதேச அரசியலில் சிக்குண்டு காணாமற்போன மூன்று தசாப்தகாலத் தவம் . உலகின் இருவேறு பாகங்களில் நடந்த , நடந்துகொண்டிருக்கிற குர்தி மற்றும் தமிழ் மக்களின் சுயநிர்ணயம் தேடிய உரிமைப் போராட்டங்களின் பொதுமையைக் கண்ணுற்ற பிறகு குர்திஸ்தான் குறித்து தமிழில் ஒரு மொளிபெயர்ப்பையோ ஒரு புத்தகத்தையோ எழுதவேண்டும் என்ற ஆவல் மனதில் எழுகிறது. ஆனால் தமிழில் ஏற்கனவே எத்தனை புத்தகங்கள் இத்தலைப்பில் எழுதப்பட்டுவிட்டன என்று எனக்குத் தெரியவில்லை . உங்களில் யாருக்காவது குர்திஸ்தான் குறித்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை தெரிந்திருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
    குர்திஸ்தான் குறித்து ஆங்கிலமொழியில் நான் படித்த புத்தகங்கள் கீழ்வருமாறு:
    1. Invisible Nation by Quil Lawrence
    2. A Poisonous Affair by Joost R . Hiltermann

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.