
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த சிறப்பு பேட்டி…
ஜிகிர்தண்டா மதுரையை களமாகக் கொண்ட மற்றொரு படமா?
“நிச்சயம், இது அந்தவகையில் வரும் படம் அல்ல. இது கேங்க்ஸ்டர் கதைதான், எந்த ஊரை மையமாகக் கொண்டு எடுத்திருக்கலாம். ஆனால், மதுரை இளைஞர்கள் எளிதாக வன்முறை பாதைக்கு திரும்பிவிடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அதனாலேயே மதுரையைத் தேர்ந்தெடுத்தேன்.
பீட்சா வுக்கு முன்பே நான் எழுதிய கதை ஜிகிர்தண்டா கதையை எழுதிவிட்டேன். பட்ஜெட் அதிகம் என்பதால் முதல் படமாக அதை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் இருந்தது. பீட்சா பட்ஜெட்டை விட ஜிகிர்தண்டாவின் பட்ஜெட் 10 மடங்கு அதிகம்.’’
பாபி சிம்ஹாவின் கேரக்டர் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்களே?
“இது முக்கோண காதல் கதை. ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இது அவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை நிச்சயம் தரும். இந்தக் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை யோசித்தோன். நேரம் படம் பார்த்துவிட்டு பாபி சிம்ஹாவை முடிவெடுத்தோம்.’’
இவ்வளவு சீக்கிரம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறீர்களே?
“நல்ல கதைகளை, திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனத்தில் வேறு வகையான பணிகளையும் செய்ய இருக்கிறோம். குறும்படங்களை வாங்கி வெளியிடுவதற்கும் காஸ்டிங் எனப்படும் நடிகர்களை தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனமாகவும் இது செயல்படும். தமிழ் சினிமாவில் இவை புதிய முயற்சிகளாக இருக்கும்.’’
“ஜிகிர்தண்டா – மதுரையை மையமாகக் கொண்ட மற்றொரு கேங்க்ஸ்டர் படமா?” இல் 2 கருத்துகள் உள்ளன