சீசன் ஸ்பெஷல் – வற்றல் வடாம் வகைகள்
உருளைக்கிழங்கு வற்றல்
காமாட்சி மகாலிங்கம்

வடாம் வற்றல் வகைகளில் அடுத்ததாக உருளைக்கிழங்கு வற்றல் போடுவது என்பது பற்றி பார்க்கலாம். அதிகம் உருளைக் கிழங்குகளிலும் வற்றல் செய்து வைத்துக் கொண்டால், வடாங்களுடன் இதையும் வறுத்து உபயோகிக்கலாம். சிறிய குறிப்புதானிது. குறைந்த அளவிற்கு செய்முறை கொடுக்கிறேன். முயற்சி செய்யுங்கள். இதைவிட சுலபமானது இருக்க முடியாது.
வேண்டியவை:
உருளைக்கிழங்கு (திட்டமான சைஸ்) – அரை கிலோ
உப்பு – முக்கால் டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்து,தோலைச் சீவி தண்ணீரில் போடவும். சிப்ஸ் சீவும் கட்டையில் எல்லாக் கிழங்குகளையும் மெல்லியதாகக் சீவிக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டங்களை, குக்கரில் அமிழும்படி தண்ணீரை வைத்து, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வரும் வரை வைத்திருந்து, உடனே வடிதட்டில் கொட்டித் தண்ணீரை வடிய வைக்கவும்.
ஆறிய பிறகு தனித்தனியாகப் பிரித்துப் பரத்தி வெய்யிலில் உலர்த்தவும். நன்றாகக் காய்ந்த பிறகு பத்திரப் படுத்தவும்.
தேவைப்படும்போது, எண்ணெயில் வறுத்து உபயோகிக்கவும், வேண்டிய அளவு செய்து ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம்.