கடந்த வாரம் வெளியான ஆனந்தவிகடனில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளிகளை பட்டியல் இட்டிருந்தார். இதழ் வெளியானதிலிருந்து இந்த பட்டியல் குறித்து சர்ச்சை நடந்தபடியே இருக்கிறது. அதில் சில எழுத்தாளர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்திருக்கிறோம்.
“நாஞ்சில் நாடன் – நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் அல்ல! தமிழின் உன்னதப்படைப்பான ‘எரியும் பனிக்காடு’ நாவலை இயக்குநர் பாலாவுடன் சேர்ந்து சின்னாபின்னப்படுத்தியவர். டேனியல் என்ற மாபெரும் கலைஞனை ஒரு நகைச்சுவைப்பாத்திரமாக்கி இதைவிட அதிகமாய்க் கேவலப்படுத்தமுடியாது.
‘எரியும் பனிக்காடு’, ஏற்கெனவே ஒரு திரைப்படக்கதை போலவே அது எழுதப்பட்டிருக்கிறது. அதில் செய்யவேண்டியது வேறெதுவுமில்லை.
‘பரதேசி’ படத்தில், எரியும் பனிக்காட்டில் இல்லாத மதவிடயங்களைப் புகுத்தி, அதை இந்துத்துவச் சார்புடையது ஆக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகச் சித்திரித்திருந்தார்.
ஒரு மாபெரும் கலைப்படைப்பை, இவ்வாறு சிதைக்க ஒரு நல்ல எழுத்தாளனால் எப்படி முடியும்? அறம் தொலைத்த எழுத்தாளனால் மட்டுமே இது இயலும்.
அவரே ‘நம்பிக்கைக்குரிய’ எழுத்தாளராக இல்லாத நிலையில், ‘நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்’ பட்டியலுடன் வந்திருக்கிறார். அதீத நகைச்சுவைக்குரியது. கண்டனத்திற்குரியது.
தமிழ் நவீன இலக்கியத்தின் கதை, கவிதை, கருத்தியல் தளங்களில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டுமானச் சலனத்தையும் படைப்பாற்றல் வீச்சையும் நவீனத்தையும் கண்டுணர இயலாத அல்லது புறக்கணிக்கும் பழமை மனப்போக்குப் படிந்த அவரது பட்டியலைப் புறக்கணிப்பதே, இலக்கியத்தின் வழி சமூகநீதி, அறம், மானுடம், மனித வாழ்வின் சுக துக்கங்கள், அகம், புறம் பேசும் எவரும் ஆற்றும் சரியான செயலாக இருக்கமுடியும்!’’ என்று காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார் எழுத்தாளர் குட்டி ரேவதி.
இதுபோன்று சர்ச்சை எழுந்துள்ளதற்கு எழுத்தாளர் தமிழ்நதி,“ஆனந்த விகடனில், நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று நாஞ்சில் நாடன் பட்டியல் போட்டபிறகு எதற்காக ஆளாளுக்கு “பட்டியல்… பட்டியல்“ என அதகளம் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை.என் பெயரும் அதில் இருப்பதால் சொல்கிறேன்… அவர் படித்தவற்றிலிருந்து அவருக்குப் பிடித்தவர்களை அவர் பட்டியல் இட்டிருக்கிறார். தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் அத்தனை பேரையும் படித்துவிட்டுத்தான் அவர் பட்டியல் போடவேண்டுமென்று அவசியம் ஒன்றுமில்லையே…! அவரவருக்குப் பிடித்த பெயர்களைச் சொல்வதற்கான குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இல்லையென்றால் எப்படி?
என்னளவில், பட்டியலில் என் பெயர் வரவேண்டுமென்பதற்காகவோ, விருதுகளுக்காகவோ, அடையாளப்படுத்தலுக்காகவோ எழுதவில்லை. மேலும், அப்படியொன்றும் நான் அறியப்படவுமில்லை. எனினும் ஒன்றைச் சொல்ல இயலும். நான் வரித்துக்கொண்ட தமிழ்த்தேசிய அரசியலுக்காக எந்தளவுக்கு இருட்டடிக்கப்பட்டேன் என்பதைக் குறித்து ஒருநாள் விரிவாக எழுதுவேன். ஒருவரது தலையில் ஒற்றை முத்திரை குத்தி ஒழித்துக்கட்டும் உள்ளரசியல் பற்றியும், அவரது எழுத்தைப் படிக்காமலே, அவரைக் குறித்து மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு, தமக்குள் பிம்பமொன்றை உருவாக்கிவைத்திருக்கும் so-called ”அறிவுஜீவி”களது பக்கச்சார்பு பற்றியும் நிச்சயம் பேசுவேன்.
எழுதுவதனால் நான் உயிர்வாழ்கிறேன். என்றைக்கு எழுத்து என்னைக் கைவிடுகிறதோ அன்றைக்கு எனது வாழ்வு முடிந்துபோகும். இதை அறிந்தவர் அறிவர்; அறியாதவர் துாற்றிக்கொண்டே இருக்கட்டும்!’’
கவிஞரும் பதிப்பாளருமான மனுஷ்யபுத்திரன், “தமிழ் இனி 2000 மாநாட்டில் ஒரு பிரபல மூத்த நவீன கவிஞர் ஒருவர் சமகால கவிதைப் போக்குகள் பற்றி ஒரு கட்டுரை வாசித்தார். அதில் முக்கிய்மான இளம் கவிஞர்கள் என்று ஒரு பட்டியல் இருந்தது. என் பெயர் இல்லை. எனக்கு வருத்தம். அவரிடம் போய் கேட்டேன். அவர் சொன்னார். ‘ உங்க புக் எதுவும் எங்கிட்ட இல்லை’ என்று. அந்தப் பட்டியலில் இருந்த பலர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறரகள் என்று தெரியாது. ஆனால் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். கா.நா.சு தொடங்கி இன்றுவரை வெளியிடபட்ட ஏராளமான் பட்டியல்களுக்கு இது பொருந்தும். நானும் பட்டியல்கள் சொல்லியிருக்கிறேன். எல்லாமே தற்காலிகமானவை. பெரும்பாலான பட்டியல்கள், விருதுகளுக்குள் மனச் சாய்வுகளும் விபத்துகளும் இருக்கிறதே தவிர அதில் மதிப்பீடுகள் எதுவும் இல்லை.’’ என்று சொல்கிறார்.
“ஆனந்தவிகடனில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என எழுதிக் களைத்தவர்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். புதிதாய் நன்றாய் எழுதுகின்றவர்களின் பெயர்களைச் சுட்டியிருந்தால் மகிழ்ந்திருக்கலாம். இதே பட்டியலில் உள்ளவர்களை அவர்கள் எழுத வந்தபோது நம்பிக்கை நட்சத்திரங்கள் என விளித்திருந்தால் மேலும் நல்ல படைப்புகைளைத் தந்திருக்கக்கூடும்.
இங்கு எப்பவுமே செத்த பிறகு வயதான பிறகுதான் மரியாதை செய்வார்கள். இப்படிப்பட்ட ஊரில் ஏன் எழுத்தாளாராய் இருக்கவேண்டும்.’’ என்று எழுத்தாளர் அய்யப்ப மாதவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்