நோய்நாடி நோய்முதல் நாடி – 48
ரஞ்சனி நாராயணன்

இன்று கிடைக்கும் ஹியரிங் எய்ட் கருவிகள் நவீன தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் இவை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்து வந்தவை தாம்.
1551 Girolama Cardano (1501-1576) என்கிற இத்தாலிய மருத்துவர், தத்துவஞானி மற்றும் கணிதமேதை எப்படி ஒலியை காதுக்குள் அனுப்புவது என்று எழுதுகிறார்: ஒரு ஈட்டியின் தண்டை பற்களின் இடையில் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒலியை – இதனை அவர் bone conduction என்று அழைத்தார் – கடத்தமுடியும் என்றார்.
1555 – Pedro Ponce de Leon (1520-1584) என்னும் ஸ்பானிஷ் துறவி காது கேளாத சில அரச குடும்பக் குழந்தைகளுக்கு வாய்கல்வி சொல்லிக் கொடுக்கும் முறையை ஒரு கன்னிமடத்தில் முயற்சி செய்தார்.
1558 இல் வெளியான நச்சுரல் மேஜிக் என்ற புத்தகத்தில் ஹியரிங் எய்ட் பற்றிய தகவல் வந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் Giovanni Battista Porta, இதில் மிருங்கங்களின் காது வடிவத்திலேயே செய்யப்பட்ட மரத்தாலான ஹியரிங் எய்ட் பற்றி குறிப்பிடுகிறார்.
1600, 1700 களில் டிரம்பட் வடிவ ஹியரிங் எயட்கள் பிரபலமாயின. இந்த டிரம்பட் வடிவ ஹியரிங் எய்ட் ஒரு பக்கம் அகலமாக சப்தங்களை உள்வாங்கவும், இன்னொரு முனை சிறிதாக வாங்கிய ஒலிகளை காதினுள் செலுத்தவும் உபயோகப்படுத்தப் பட்டன. விலங்குகளின் கொம்பு, கிளிஞ்சல்கள், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்டவை இவை. சிறிது காலத்திற்குப் பிறகு தாமிரம், பித்தளை முதலிய உலோகங்கள் பயன்படுத்தப் பட்டன.
1700 களில் எலும்பு மூலம் ஒலியைக் கடத்துதல் முறை பிரபலமாயிற்று. சிறிய விசிறி போன்ற கருவிகள் காதுகளின் பின்புறத்தில் வைக்கப்பட்டன. இவை ஒலியலைகளை வாங்கி காதுகளின் பின்புறம் இருக்கும் சின்ன சின்ன எலும்புகளின் மேல் அதிர்வுகளை ஏற்படுத்தி நேரடியாக மூளைக்கு அனுப்பி வைக்கும்.
1800 களின் இந்தக் காது கேட்க உதவும் கருவியை கண்ணுக்குத் தெரியாமல் மறைக்க முயற்சிகள் நடக்கத் தொடங்கின. அளவில் பெரியதாகவும் ஒரு ஆபரணம் போல சட்டைக் காலர்களிலும், தலையிலும், தலை அலங்காரத்திலும், உடைகளிலும் அணியும்படியும் இருந்தன. சருமத்தின் வண்ணம், தலைமுடியின் வண்ணம் கொண்ட எனாமல் இவற்றின் மேல் பூசப்பட்டிருந்தன. அரச குடும்பத்தினர் தங்கள் ஹியரிங் எய்ட் கருவியை தங்கள் கிரீடத்திலேயே அணிந்து கொண்டனர். இந்த சமயத்தில் தான் காது குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குழாய்களின் ஒருமுனை பேசுபவர்களின் வாய் அருகிலும், இன்னொரு முனை கேட்பவரின் காதிலும் இருக்கும். ரொம்பவும் நேர்த்தியாக இல்லாவிடினும், மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
1900 களின் ஆரம்பத்தில் மின்சாரம் வந்தது; பின்னாலேயே அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவையெல்லாம் ஹியரிங் எய்ட் கருவியை புதிய தலைமுறைக்கு இட்டுச் சென்றன. புதிய ஹியரிங் எய்ட் கருவிகளில் மின்னணு கார்பன் ஒலிவாங்கி, ஒரு பேட்டரி ஆகியவை இருந்தன. இவை கழுத்தில் மாலை போல அணியப்பட்டன. இசைகேடான பெட்டிகள், வெளியில் தெரியும் ஒயர்கள், கனமான பேட்டரிகள் என்று பெரிய தொல்லையாக இருந்தன. அது மட்டுமின்றி பேட்டரி சில மணிநேரம் மட்டுமே உயிருடன் இருந்தது. இன்னும் அதிக நேரம் பேட்டரியை இயக்க இன்னும் கனமான பேட்டரி பேக் தேவைப்பட்டது.
நல்லவேளையாக பேட்டரிகள் சிறிய அளவுகள் வர ஆரம்பித்தன. 1950 களில் ட்ரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஹியரிங் எய்ட் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டது. ட்ரான்சிஸ்டர் சுவிட்ச்சில் இரண்டே அமைப்புகள் தான்: ஆன் மற்றும் ஆஃப். பல ட்ரான்சிஸ்டர்களை இணைப்பதன் மூலம் நிறைய ஆன்/ ஆஃப் சுவிட்ச்சுகளை வைத்து நிறைய செயல்பாடுகளை செய்ய முடியும். இதில் வியப்பு என்றவென்றால் ட்ரான்சிஸ்டர்கள் ரேடியோவில் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன்பே ஹியரிங் எய்ட் கருவியில் பயன்படுத்தப் பட்டன.
சிலிக்கனில் ட்ரான்சிஸ்டர்கள் உருவாகத் தொடங்கியபின் ஹியரிங் எய்ட் கருவி இன்னும் சின்ன அளவில் தயாரிக்கப் படலாயிற்று. முதலில் உடலில் பொருத்தப்பட்ட இவை பின் பயனர்கள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் காதின் பின்புறம், காது மடல், கடைசியில் காதினுள் செவிகுழாய்குள்ளும் பொருத்தப்பட்டன.
1990 களில் ஹியரிங் எய்ட் கருவியில் டிஜிட்டல் தொழில் நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஒலிகளை குறைத்தும், கூட்டியும், வடிகட்டியும், தேவைகேற்ப செய்ய முடிந்தது. அதிக சத்தமில்லாத வீடுகளில் ஒலியை குறைத்தும், மக்கள் நிறையக் கூடும் இடங்களில் அதிகரித்தும், கோல்ப் மைதானத்தில் வீசும் காற்றை சத்தமில்லாமலும் என்று பலவிதங்களில் பயனாளரின் தேவைகேற்ப ஹியரிங் எய்ட் கருவியை வடிவமைக்க முடிந்தது. இப்போதைய ஹியரிங் எய்ட் கருவிகள் மிகவும் சிறிதாகவும், இலேசானதாகவும் முன்னைவிட அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கின்றன. விரல் நுனியில் பதித்துக் கொள்ளலாம் போல இருப்பதே தெரியாமல் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்திருப்பவரின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் வண்ணம் வடிவமைக்கப் படுகின்றன. தொலைபேசி, தொலைக்காட்சி, கணிணி இவற்றிலிருந்து வரும் சப்தங்களை வயர்கள் இல்லாமல் பெற்றுக் கொள்ளும்படி புதிய ஹியரிங் எய்ட் கருவிகள் தயாரிக்கப் படுகின்றன. இக்கருவிகளின் மேல் ஒலிவாங்கிகளை பாதுகாக்கும்
கவசங்கள் பொருத்தப்படுவதால் இவற்றை பராமரிப்பது சுலபமாகிறது, அத்துடன் இவற்றின் ஆயுளும் நீடிக்கிறது.
பேரிரைச்சலிலிருந்து நம் செவிகளை பாதுகாப்பது எப்படி? அடுத்த வாரம் பார்க்கலாம்.
சிறந்த உளநல வழிகாட்டல்
தொடருங்கள்!
சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.
நிறைய விஷயங்கள் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள். நன்றாக உள்ளது.அன்புடன்