நோய்நாடி நோய்முதல் நாடி – 47
ரஞ்சனி நாராயணன்

காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம். அல்லது திடீரென்று காது கேட்காமல் போகலாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரை அணுகவும்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்:
- ஒரு காதில் அல்லது இரண்டு காதுகளிலும் வலி
- சமநிலை தடுமாறுதல், அல்லது தலை சுற்றல்
- காதுகளில் மணி சத்தம்
- காதுகளில் அழுத்தம் அல்லது ஏதோ அடைத்துக் கொண்டதுபோல உணர்வு
காது கேளாமையைக் கண்டறிய ஆடியோக்ராம் எனப்படும் ஒரு பரிசோதனை செய்யப்படும். காதுகேளாமையின் அளவு இந்தப் பரிசோதனையில் தெரியவரும். மெல்லிய சப்தங்கள் கேட்கவில்லையா, அல்லது குறிப்பிட்ட ஒரு பக்கத்திலிருந்து வரும் சப்தங்கள் கேட்பதில்லையா என்பதும் அறியப்படும்.
இயல்பாக இருப்பவர்களுக்கு மெல்லிய சப்தங்களும் கேட்கும். காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக சப்தம் மட்டுமே கேட்கும்.
பொதுவாக இயல்பான காது கேட்பது என்பது 0-25 டெசிபல் வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்றாகக் காது கேட்பவர்களுக்கு மனிதர்கள் மூச்சுவிடும் சப்தம் கூடக் கேட்கும். இந்த மூச்சு விடும் சப்தம் 10 டெசிபல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இலேசான அளவில் காது கேட்கவில்லை என்பது 26-40 டெசிபல் என்றும், மிதமான அளவு 41-55 டெசிபல் என்றும் தீவிரமான காது கேளாமை குறை என்பது 71-90 டெசிபல் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

காதுகேளாமையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
முதல் வகை: செவிப்பறை, செவிக்குழாய், நடுக்காதில் வரும் பிரச்னையால் காது கேட்காமல் போவது. காது தொற்று, மிகுந்த வலி, காது கட்டி, காதில் திரவம் புகுந்திருத்தல், அல்லது ஏதாவது ஒரு பொருள் உள்ளே போயிருத்தல் அல்லது காது குரும்பி அடைத்துக் கொண்டிருத்தல் இவற்றினால் பிரச்னை ஏற்படலாம்.
இரண்டாவது வகை: உட்காதுகளில் உள்ள மயிரிழை திசுக்களில் ஏற்படும் பாதிப்பினால் வருவது. வயதாவதால் ஏற்படும் காது கேளாமை இந்த வகையை சேரும். மிகுந்த இரைச்சல், கீமோதெரபி மருந்துகள், கதிர்வீச்சு, இவற்றினாலும் இந்த வகை காது கேளாமை ஏற்படலாம்.
மூன்றாவது வகை: மேற்கூறிய இரண்டு காரணங்களினாலும் – அதாவது வெளி அல்லது நடுக்காது பிரச்னை, செவிப்புலன் பிரச்னையாகவும் இருக்கக் கூடும்.
காது கேளாமை இரண்டு காதுகளையும் பாதிக்கக்கூடும். சின்னதாக ஒரு சந்தேகம் (காது சரியாக கேட்கிறதா என்ற சந்தேகம்) ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகவும்.
இந்த சமயத்தில் எப்படி நம் காது வேலை செய்கிறது என்று ஒரு சின்ன recap: ஒலியலைகள் நமது வெளிகாதின் வழியே செவிப்பறையை அடைந்து நடுக்காதில் இருக்கும் எலும்புகளை அசைவிக்கிறது. இந்த ஒலியலைகள் உட்காதினுள் புகுந்து நத்தைசுருள் குழாய்க்குள் இருக்கும் திரவத்தில் அதிர்வலைகளை உண்டு பண்ணுகிறது. இந்த அதிர்வலைகள் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான உரோமங்களை அசைவித்து ஒலி அதிர்வுகளாக மாறுகின்றன. இந்த தூண்டுதல்கள் நமது மூளையால் நாம் புரிந்து கொள்ளக்கூடிய சப்தங்களாக உணரப்படுகின்றன. இந்த தொடர் நிகழ்வில் எந்த இடத்தில் பிரச்னை என்றாலும் காது கேளாமை ஏற்படக்கூடும்.
- வயதாக ஆக காதுகளின் இழுதன்மை பாதிக்கப்படுகிறது. காதினுள் இருக்கும் சின்ன சின்ன உரோமங்கள் பாதிக்கப்பட்டு, ஒலியலைகளை சரிவர வாங்கிக்கொள்ள முடியால் போகலாம்.
- விமான நிலையங்களின் அருகில் வசிப்பவர்கள் தினந்தோறும் பேரிரைச்சலைக் கேட்க நேரிடுவதால் காதுகள் பாதிக்கப்படலாம்.
- காது தொற்றுகளால் ஏற்படும் காது கேளாமை பெரும்பாலும் தற்காலிகமானது.
- செவிப்பறையில் ஏற்படும் துளைகள்: நீருக்கடியில் மூழ்குபவர்கள், தலையில் அடி, காது தொற்று, பேரிரைச்சல் இவை செவிப்பறையை தாக்கும்போது அதில் துளை ஏற்படுகிறது. இந்த துளை சிலசமயங்களில் குனமாவதில்லை. இந்த துளையின் அளவைப் பொறுத்து இலேசான அல்லது மிதமான காது கேளாமை ஏற்படக்கூடும்.
- அம்மை, பொன்னுக்கு வீங்கி, மூளைக்காய்ச்சல் இவற்றினால் காது கேளாமை ஏற்படும்.
- புற்றுநோய் கட்டுகள், புற்றுநோய் இல்லாத கட்டிகள் இவற்றினால் காது கேளாமை ஏற்படும்.
- காதினுள் ஏதாவது பொருள் போய்விட்டாலும் காது கேட்காமல் போகும்.
- சிலருக்குப் பிறக்கும்போதே காதுகள் சரியான வடிவில் அமைந்திருக்காது இதனால் உள்ளுறுப்புகளும் சரியானபடி அமையாமல் போகும்.
- சிலவகை மருந்துகள் காது கேளாமையை உண்டுபண்ணும். இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியபின் மறுபடி காது கேட்க ஆரம்பிக்கும்.
- ருமட்டாயடு ஆர்த்தரைடிஸ் நோயினாலும் காது கேளாமை ஏற்படும்.
காது கேளாமைக்கு பலவித சிகிச்சை இருந்தாலும் நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று கேட்க உதவும் சாதனம் அல்லது ஹியரிங் எய்ட். அந்தக் காலத்தில் (இந்தக் காலத்தில் கூட) இதனை சிலர் செவிட்டு மெஷின் என்பார்கள். ஒலிகளை பெரிதுபடுத்தி உட்காதுக்குள் செலுத்துகிறது இந்தக் கருவி. இவை இரண்டு வகைப்படும்.
அனலாக் ஹியரிங் எய்ட்: இவை ஒலியை மின்சார சமிக்ஞைகளாக மாற்றி ஒலி அளவுகளை பெரிது படுத்தி காதுக்குள் அனுப்புகின்றன. இவை ஒரு ஒலிபெருக்கி போல செயல்படுகின்றன. ஒரு சிறிய அறை, அல்லது ஜனசந்தடி நிறைந்த இடம் என்று இடத்திற்குத் தகுந்தாற்போல இவற்றை வடிவமைக்க முடியும்.
டிஜிட்டல் ஹியரிங் எய்ட்: ஒலி எண்களாக மாற்றப்பட்டு மறுபடியும் ஒலியாக மாற்றப்படுகின்றன. இவை மிகவும் சுலபமாகப் பயன்படுத்த உதவும். ஆனால் விலையுயர்ந்தவை.
இவை பல வடிவங்களில் கிடைக்கின்றன. சில காதுகளுக்குப் பின்னால் பொருத்தப்படுகின்றன. சில காதுகளுக்குள்ளும், சில செவிக்குழலுக்குளும் பொருத்தப்படுகின்றன.
சிறந்த உளநல வழிகாட்டல்