மாலை நேர சிற்றுண்டி
காமாட்சி மகாலிங்கம்

முன்பு நான் அரிசி நொய்யில் புளி பொங்கல் எழுதியிருந்தேன். இப்போது உப்புமாவை எழுதுகிறேன். இதுவும் வெளியில் எங்காவது போய்விட்டு வரும்போது அவஸரத்திற்கு இதைச் செய்து சாப்பிடலாம். வயிறு நிறைந்த உணவாக அமையும். மனதில் இதையும் ஒரு வகையாக இருத்திக் கொள்வோம். கோதுமை ரவையிலும் இப்படித் தயாரிக்கலாம். வெங்காயம் வேண்டாதவர்கள் போடாமற் செய்யுங்கள்.
வேண்டியவை:
பச்சரிசி நொய் – 2 கப்
தேங்காய் துருவல் -அரைகப்
மிளகு – 7 அல்லது 8
மிளகாய் – 2 (பச்சையோ,வற்றலோ)
பெரிய வெங்காயம் – 2 நறுக்கிக் கொள்ளவும்
தாளித்துக் கொட்ட
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை,பெருங்காயம்.
ருசிக்கு – உப்பு
செய்முறை:
அரிசி நொய்யைத் தண்ணீர் விட்டுக் களைந்து கல் இல்லாமல் அரிச்சிட்டு தண்ணீரை நீக்கவும். வெண்கலப்பானையோ, அல்லது குக்கரோ எது உங்களுக்கு வழக்கமோ அதில் செய்யுங்கள். குக்கரானால் வாணலியில் தாளித்துக் கொட்டிச் செய்யவும். வெண்கலப்பானையில் எண்ணெயைக் காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு,பெருங்காயம், முழு மிளகுசீரகம்
தாளித்துக்கொட்டி, வெங்காயம்சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, ஆறு கப் தண்ணீரைச் சேர்க்கவும். வேண்டிய உப்பும்,தேங்காயும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன்,களைந்து வைத்திருக்கும் அரிசி நொய்யைச் சேர்க்கவும். கிளறிவிட்டு வேக வைக்கவும். நிதான தீ அவசியம். நொய் வெந்து இறுகி வரும்போது, மூடிவைத்து சிறிதுநேரம் கழித்து இறக்கி உபயோகிக்கவும்.
ஒரு ஸ்பூன் நெய்விட்டால் வாஸனையாக இருக்கும். எது இஷ்டமோ அதைக் கூட சேர்த்து ருசிக்கவும். எளிமையான உணவுப்பண்டம். ப்ரஷர் குக்கரில் செய்தால் 2 விஸில் விட்டு 2 நிமிஷம் ஸிம்மில் வைத்து இறக்கினால் போதும். ரைஸ் குக்கரில் தானாகவே பதமாகிவிடும். வெண்கலப்பானையில் செய்தால் சுடச்சுட,கமகம.