குழந்தை இலக்கியம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!

செல்வ களஞ்சியமே – 69

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சென்றவாரம் சொன்ன ‘கொழு கொழு கன்னே’ கதை பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பலர் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். கதை கலந்த பாடல்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாடல் உண்டு.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்;
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துதாம்;
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணே பூ பூத்துதாம்;
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலே பூ பூத்துதாம்;

இரண்டு குழந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கம் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டு, தலைக்கு மேல் இரண்டு கைகளையும் உயர்த்தி ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். மற்ற குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக அந்த கைகளுக்குள் போய்வருவார்கள். முதல் குழந்தை ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே போய் வெளியே வரவேண்டும். இரண்டாவது குழந்தை ரெண்டு குடம், மூன்றாவது குழந்தை மூணு குடம் இப்படி எத்தனை குழந்தைகள் இருக்கின்றனவோ அத்தனை குடம் தண்ணீர் ஊற்றி அத்தனை பூக்கள் பூக்கும். ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்று ஆரம்பிக்கும்போது யாராவது ஒரு குழந்தையை கைகளுக்குள் பிடித்துவிடுவார்கள். அந்தக் குழந்தையும் இன்னொரு குழந்தையும் கூடாரம் பிடிக்க வேண்டும். இப்படியே ஆட்டம் போகும்.

எங்கள் பாட்டி சொல்லும் இன்னொரு கதை: ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தானாம். அவனுக்கு கதை கேட்பதென்றால் ரொம்ப பிடிக்குமாம். தினமும் விடாமல் யாராவது கதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி கதை கேட்டுக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நலனை எப்போது ராஜா கவனிப்பார் என்று மந்திரிக்குக் கவலை. ஒரு மூத்த குடிமகனைக் கூப்பிட்டார். என்ன செய்யவேண்டும் என்று காதோடு சொன்னார். ஒரு நாள் அவை கூடியதும் அமைச்சர் தயார் செய்து வைத்திருந்த ‘கதைசொல்லி’ வந்தார். கதை சொல்ல ஆரம்பித்தார்:

DSC_1511

‘ஒரு நெற்களஞ்சியம். அதில் 1000 நெல்மணிகள் இருந்தன. அந்த ஊரில் 1000 சிட்டுக்குருவிகள் இருந்தன. ஒருநாள் ஒரு குருவி வந்து ஒரு நெல்லை கொண்டு போச்சாம். இரண்டாம் நாள் இரண்டாவது குருவி வந்து இன்னொரு நெல்லைக் கொண்டு போச்சாம். மூன்றாம் நாள் மூன்றாவது குருவி வந்து மூணாவது நெல்லைக் கொண்டு போச்சாம்.
‘கதையை மேலே சொல்லும்,’ என்றான் ராஜா.
‘இதோ சொல்லுகிறேன். நாலாவது நாள் நாலாவது குருவி வந்து நாலாவது நெல்லைக் கொண்டு போச்சாம். ஐந்தாவது நாள் ஐந்தாவது குருவி வந்து ஐந்தாவது நெல்லை கொண்டு போச்சாம்; ஆறாவது நாள்…..’ ராஜாவுக்கு கோவம் வந்துவிட்டது. ‘நிறுத்தும், நிறுத்தும். எல்லாக் குருவிகளும் வந்து எல்லா நெல்லையும் கொண்டு போச்சாம். மேலே என்ன ஆச்சு? அதை சொல்லும்’ என்றான்.

அப்படியெல்லாம் இந்தக் கதையை சட்டுபுட்டுனு முடிக்க கூடாது, ராஜா. ‘ஆறாவது நாள் ஆறாவது குருவி வந்து…..’ என்றவுடன் ராஜா எழுந்துவிட்டான். கதைசொல்லியும் எழுந்து நின்றார். ராஜா நடக்க ஆரம்பித்தான். கதைசொல்லியும் பின்னாலேயே போனார். ‘ஏழாவது நாள் ஏழாவது குருவி வந்து….’ என்று சொல்லிக் கொண்டே போனார். ராஜா ஓட ஆரம்பித்தான். கதைசொல்லியும் ராஜாவின் பின்னாலேயே ஓடிக்கொண்டே, ‘எட்டாவது நாள் எட்டாவது குருவி வந்து….’ என்று கதையை விடாமல் சொன்னான். ராஜா அரண்மனையை விட்டு ஊருக்குள்ளே ஓட ஆரம்பிக்க, கதைசொல்லி விடாமல் ராஜாவை துரத்தி துரத்தி கதையை சொல்லிக் கொண்டே போக….ஊர் மக்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே, ‘விடாதே துரத்து, விடாதே, துரத்து…’ என்று சொல்லிக் கொண்டே அவர்களும் இந்தத் துரத்தலில் சேர்ந்து கொள்ள….

பாட்டி சொல்ல சொல்ல நாங்களும் ‘ஒருகுருவி வந்து ஒரு நெல்லைக் கொண்டு போச்சாம். ரெண்டாவது குருவி வந்து ரெண்டாவது நெல்லைக் கொண்டுபோச்சாம்….’ என்று ஒருவரை ஒருவர் துரத்திப் பிடிக்க ஆரம்பித்துவிடுவோம்.

நமக்கு கற்பனை சிறகுகள் இருந்தால் போதும், எத்தனை கதைகளை வேண்டுமானாலும் சொல்லலாம். மேலே சொன்ன தந்திரக் கதைகளையும் கூட நாமே இட்டு கட்டலாம். உலகத்திலேயே மிகச் சிறிய கதை எது தெரியுமா? ‘ஒரே ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துதாம். அதோட கத சரியாம்’ என்பதுதான்.

விலங்குகள், பறவைகள், பூச்சிகள், கடல், நதி, அருவி, ஆகாயம் என்று எத்தனை விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இவைகள் எல்லாமே கதைக் கருதான். உண்மை நிகழ்வுகளை வைத்து, அதில் கொஞ்சம் கற்பனை சேர்த்து எத்தனை கதைகள் சொல்லலாம், தெரியுமா?

கதை சொல்வது, பாட்டுப் பாடுவது இவையெல்லாம் உங்களுக்கும், குழந்தைக்கும் நடுவில் பாலமாக, உங்கள் இருவரின் உறவையும் இணைக்கும்; ஏன் கதைசொல்லிப் பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள் என்றால் கதைகள் மூலம் இருவரும் இணைவதால் தான். கதை சொல்லும் பாட்டியும், கதை கேட்கும் குழந்தைகளும் அந்த சமயத்தில் ஒரே வயதுடையவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

கதாபாத்திரங்களின் உணர்வுகளை தங்கள் குரலில் கொண்டு வந்து பாட்டி தன் பேரக்குழந்தைகளை கதை நடக்கும் காலத்திற்கு அழைத்துச் செல்லுகிறாள். கதாபாத்திரங்கள் குழந்தைகளுடனும், குழந்தைகள் கதாபாத்திரங்களுடனும் ஒன்றிப் போகிறார்கள், பாட்டியின் கதை சொல்லும் திறன் மூலம்.

கதை சொல்லத் தெரியாத பெற்றோர்கள் என்ன செய்யலாம்? குழந்தைகளுக்கு கதை புத்தகங்களைப் படித்துக் காட்டலாம். நிறைய வண்ண வண்ணப் படங்களுடன் இருக்கும் புத்தகங்களை வாங்கி வந்து படித்துக் காண்பியுங்கள். கொஞ்ச நாட்கள் ஆனவுடன் குழந்தையை அந்தக் கதைகளை திருப்பிச் சொல்லச் சொல்லுங்கள்.

கதைகள் வெறும் சொற்கள் அல்ல; இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலம். குழந்தைகளின் உலகத்தில் நாம் நுழைய நமக்குக் கிடைத்திருக்கும் மந்திரத் திறவு கோல் என்பதை மறவாதீர்கள், பெற்றோர்களே!

 

 

Advertisements

2 thoughts on “குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!”

  1. இந்தக் கதையை என் பெரிய மச்சினர் முதலில் என் பெண்ணிற்கு சொன்னபோது தான் நான் கேட்டேன். ஆச்சரியமாக இருந்தது .நீங்களும் இதையே எழுதியுள்ளீரகள் பாராட்டுக்கள் ரஞ்சனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s