நோய்நாடி நோய்முதல் நாடி – 46
ரஞ்சனி நாராயணன்

எங்கள் உறவினர் ஒருவர் கனடா நாட்டில் இருக்கிறார். ஒருமுறை அவருடன் பேசும்போது சொன்னார்: அங்கிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தத்தைவிட அதிகமானதாம். இதை வைத்து ஒரு பயண வழிகாட்டி நயாகரா பார்க்க வந்தவர்களிடம் சொன்னாராம்: ‘இந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்களின் சப்தத்தைவிட அதிகமானது. அதனால், லேடீஸ்! பேசுவதை நிறுத்துங்கள். அருவியின் சத்தத்தைக் கேட்கலாம்!’
எங்களையெல்லாம் எங்கள் அம்மா ஒருமுறை கூப்பிடுவார்; இரண்டு முறை கூப்பிடுவார். ஏன் என்று கேட்கவில்லை என்றால் ‘ஏ! செவிடு! என்பார். உடனே ‘மா…..கூப்பிட்டாயா? என்போம். அம்மா சொல்லுவார் சரியான காரியச்செவிடு என்று. அதாவது வேலை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று காது கேட்காததுபோல இருப்பது காரியச்செவிடு!
சில வருடங்களுக்கு முன் எனக்கு கொஞ்சம் காது கேட்பதில் பிரச்னை இருந்தது. அதற்காக பல பரிசோதனைகள் செய்துகொண்டேன். இவைகளை audiometric பரிசோதனைகள் என்கிறார்கள். இதெல்லாம் முடிந்த பிறகு ஒருமுறை என் அம்மா கேட்டார்: இப்போது நன்றாகக் காது கேட்கிறதா? என்று. பரவாயில்லைம்மா என்றேன். என் அம்மா விடாமல் கேட்டார்: ‘நீ மருத்துவரிடம் சொல்வதற்கு என்ன? இன்னும் சரியாகக் கேட்பதில்லை என்று?’
‘மருத்துவர் என்னைக் கேட்டார்: மகன் இருக்கிறானா? திருமணம் ஆகிவிட்டதா? என்று. நான் ஆமாம் என்றவுடன் ‘மருமகள் வந்தபின் மாமியார்களுக்கு காது கேட்காமல் இருப்பது நல்லது. உங்களுக்கு இத்தனை காது கேட்டால் போதும், இதுகூட அதிகம்தான்’ என்றார் என்றேன் சிரித்துக் கொண்டே. என் அம்மாவிற்கு என் மேல் பாதி கோபம், பாதி சிரிப்பு.
ஜோக்குகள் ஒருபக்கம் இருக்கட்டும்.
மனிதர்கள் பேசுவதற்கு கூட இந்த கேட்கும் திறன் மிகவும் முக்கியம். குழந்தையாக இருக்கும்போது பிறர் பேசுவதைக் கேட்டே நாம் பேசக் கற்கிறோம். இதன் காரணமாகவே காது கேட்காதவர்களுக்கு பேசும் திறனும் இருப்பதில்லை.
காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
- யாராக இருந்தாலும் எப்போதுமே பலத்த இரைச்சல்களுக்கு இடையில் இருந்தால் காது கேட்கும் திறன் முழுதுமாக பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இதனை சத்தத்தினால் தூண்டப்பட்ட கேட்கும் திறன் இழப்பு என்கிறார்கள். உலகத்தில் சுமார் 30 மில்லியன் மக்கள் இந்த மாதிரியான இரைச்சல் மிகுந்த இடங்களில் வேலை செய்வதால் கேட்கும் திறனை இழக்கிறார்கள். 22 மில்லியன் அமெரிக்கர்கள் 20-69 வயதில் இருப்பவர்களுக்கு இதைபோல இரைச்சலினால் காதுகேட்கும் திறனை இழந்துவிட்டார்கள் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
- சிலசமயங்களில் பிறக்கும்போதே காது கேட்காமல் போனாலும், பிற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப் படுகிறது. இவ்வகை காது கேளாமையை பிறவி கோளாறு என்று சொல்லமுடியாது.
- குழந்தை பிறந்தவுடன் காது கேட்கும் திறனை பரிசோதிப்பது நல்லது. முதலிலேயே என்ன காரணத்தால் காது கேட்கவில்லை என்று தெரிந்தால் நிவாரணம் தேடுவதும் எளிது.
- வீட்டில் யாருக்காவது காது கேட்காமல் இருந்தால் இது பரம்பரையாகவும் வர வாய்ப்பு உண்டு. இப்படி காது கேட்கும் திறனில் பழுது இருப்பவர்கள், குழந்தை பிறந்தவுடன் இந்தக் குறை இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் அவசியம்.
- வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது. 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- பிறந்த குழந்தையால் பேச முடியாததால், குழந்தைக்கு இந்தக் குறை இருப்பது குழந்தை பிறந்த உடனே மருத்துவருக்கோ அல்லது பெற்றோருக்கோ தெரிய வருவதில்லை.
- பிறவிக்குறையாக இருந்தாலும் அதை பரம்பரையாக வரும் குறை என்று சொல்ல முடியாது. கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு ஏதேனும் தொற்றுநோய் (ருபெல்லா வைரஸ்) ஏற்பட்டிருந்தாலும் குழந்தையின் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.
- காதுக் குரும்பி அடைத்துக் கொண்டாலும், காதில் தொற்றுநோய் வந்தாலும், சிலவகை மருந்துகளினாலும் தற்காலிக காது கேளாமை ஏற்படும்.
காது கேளாமையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை காதில் உள்ள கேட்பதற்கு உதவும் உறுப்புகளில் குறை ஏற்படலாம் இதை ஆடிட்டோரி சிஸ்டம் குறைபாடு என்கிறார்கள். இன்னொருவகை நாம் கேட்கும் ஒலிகளை
மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் காது கேளாமை.
காது கேளாமையின் அறிகுறிகள்:
- உயர் அலைவரிசையில் வரும் சப்தங்கள் கேட்காமல் போவது;
- காதில் மணியோசை அல்லது சப்தம் கேட்பது.
- காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் பேசும்போது அதிக கவனம் செலுத்தாமல் இருப்பார்கள்.
- அதேபோல சுற்றிலும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
- தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் சத்தத்தை அதிகப் படுத்துவார்கள்.
- நாம் சொல்வதை மறுபடி மறுபடி திருப்பி சொல்லச் சொல்லுவார்கள்.
- காதுக் குரும்பியை மருத்துவரிடம் சென்று அகற்றிக் கொள்ளுவது.
- காது தொற்றினை மருந்துகள் மூலம் குணப்படுத்திக் கொள்ளுவது.
- சிலசமயங்களில் அறுவை சிகிச்சையின் மூலமும் சரி செய்யலாம்.
அடுத்த வாரம்…
சப்தமான பகிர்வுகள்..!
பயனுள்ள பகிர்வு
குறிப்பாக இது விஷயத்தில் கொஞ்சம்
குழம்பிக்கிடக்கும் என் போன்றோருக்கு…
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சிறந்த உளநல வழிகாட்டல்