பாலகல்யாணி
கணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தப் பெண்மணியை சந்திக்கிறான் டேவ்.
கிரிஸ்டி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவள், அன்பும் கருனையும் கொண்டவள். கணவர் இல்லையென்றாலும் சொத்து சுகத்துக்கு கவலை இல்லை. ஆடம்பரமான வீடு, அளவுக்கு அதிகமான பொருட்கள் என்று வாழ்கிறாள்.
ஒருநாள் அவளது வீட்டில் டேவ் அவளை முத்தமிட முயல்கிறான். கிரிஸ்டிக்கு அதில் விருப்பமில்லை.
தான் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏற்கெனவே கனவு கண்டிருப்பதாக கிரிஸ்டி, டேவிடம் கூறியிருந்தாள். டேவ், தானொரு நாத்திகன் என்று கிரிஸ்டியிடம் கூறியிருந்தான்.
அடுத்தநாள், பூங்கா ஒன்றில் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
“நாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. அதில் எனக்கு விருப்பமில்லலை” என்கிறாள் கிரிஸ்டி. டேவுக்கு கண்கள் கலங்கிவிட்டதை அவளால் உணரமுடிந்தது.
“நான், நாத்திகன் என்று சொன்னேன் அல்லவா? அது பொய். நான், கடவுள் நம்பிக்கை உள்ளவன்” என்கிறான் டேவ்.
“அதுமட்டுமல்ல, நீ கனவில் கண்டதாக சொன்னாயே, தேவதூதன். அது நான்தான்” என்கிறான்.
கண்கள் அகல விரிய, “உண்மையாகவா? இதை எப்படி நம்புவது? போகட்டும், நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை ஏன் மறைத்தீர்கள்?” எனக் கேட்கிறாள் கிரிஸ்டி.
“நீ நம்பித்தான் ஆகவேண்டும். இது கடவுளின் கட்டளை. சில கடமைகளை செய்து முடிப்பதற்காக, சில உண்மைகளை மறைத்தாகவேண்டியது கட்டாயம்”
“ம்ஹூம். நான் நம்பமாட்டேன்”
“சரி, கிளம்பலாம். நான், தேவனது சில கட்டளைகளை மொழி பெயர்த்தாகவேண்டும். அவற்றுள் சிலவற்றை நாளை உனக்கு இமெயில் செய்கிறேன். இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள். நீயும் நானும் சேர்ந்து வாழவேண்டும் என்பதும் ஆண்டவரின் விருப்பம்.”
அடுத்தநாள், டேவிடமிருந்து அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. வாயடைத்துப் போனாள் கிரிஸ்டி.
“சாத்தியமே இல்லை. தேவனைத் தவிர வேறு யாராலும் இப்படிச் சொல்ல முடியாது. நிச்சயம் இவர் தேவதூதனாகத்தான் இருக்கவேண்டும்.”
ஒரு தேவதூதனுக்கு தான் மனைவியாகப்போவதை நினைத்தபோது, கிரிஸ்டிக்கு உடலெங்கும் சிலிர்த்தது. அவள், வெகுவாக மகிழ்ச்சியடைந்தாள்.
சில நாட்களில், அவர்கள் ரகசியத் திருமணம் செய்துகொண்டு முதலிரவைக் கொண்டாடினார்கள். முதலிரவின்போது, டேவ் குறித்து லேசான ஐயம் ஏற்பட்டாலும், தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.
கிரிஸ்டிக்கு நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தபடியால், அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பதென முடிவு செய்தாள்.
“நான் ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சிருக்கேன். அதற்கு செகரட்ரியா சிஸ்டர் மேரியை நியமிச்சிருக்கேன்”
பின்னாலிருந்து அவள் தோளில் சாய்ந்தபடி, இடுப்பைத் தடவியபடியே சொன்னான் டேவ்.
கிரிஸ்டிக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்தப் பணம் முழுவதையும் டேவின் அறக்கட்டளைக்கு திருப்பிவிட்டாள்.
சில நாட்கள் ஓடியது. “வீட்டில் உனக்கு ஏன் இத்தனை ஆடம்பரப் பொருட்கள்? இதை விற்று, அந்தப் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே” என்கிறான் டேவ்.
அரைமனதோடு அதையும் செய்த கிரிஸ்டி, அந்தப் பணத்தையும் டேவின் அறக்கட்டளைக்கு மாற்றுகிறாள்.
அடுத்த சில நாட்கள்.
“நீ உன் குழந்தைகளை விட்டு பிரிந்தாகவேண்டும். நாம், எதன் மீதும் பற்றற்றவர்களாக இருக்கவேண்டும்” என்கிறான் டேவ்.
இதையும் ஒப்புக்கொள்ளும் கிரிஸ்டி, நல்லவேளையாக, குழந்தைகளை அதன் தந்தையிடமே ஒப்படைக்கிறாள்.
“நான் சொல்லப்போவது சத்தியசோதனை. நீ, எந்த ஒரு தியாகத்திற்கும் தயாரானவள். உன்னைக்கூட நீ சொந்தம் கொண்டாடமாட்டாய் என்பதை நிரூபித்தாகவேண்டும்” என்கிறான் டேவ்.
அதாவது, கிரிஸ்டி பிற ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும், இதற்கு கைமாறாக அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அதை ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என்றும் உபதேசம் செய்கிறான்.
கிரிஸ்டி, நடுங்கியபடியே இதற்கும் உடன்படுகிறாள். படுக்கையை பகிர்ந்துகொண்ட பணமும் டேவின் அறக்கட்டளைக்கு போகிறது.
அடுத்த சில நாட்கள்…
“தனி ஒருத்திக்கு ஏன் இத்தனை பெரிய வீடு? இதை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, நீயும் ஏழைகளைப்போலவே வாழலாமே..?” என ஆலோசனை கூறுகிறான்.
வீடு விற்ற பணமும் டேவின் கைக்குப் போகிறது.
மோசமான நான்காம்தர லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்குகிறாள் கிரிஸ்டி. அந்த லாட்ஜ் முழுவதும் சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளிகளால் நிரம்பியிருக்கிறது.
இரண்டொரு நாட்களில் டேவிடமிருந்து போன். தான், தற்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், தனது முன்னாள் மனைவி அளித்த பொய்ப்புகார்தான் இதற்கு காரணமென்றும் கூறுகிறான். கூடவே, இது ஏற்கெனவே எழுதப்பட்ட விதி என்றும் கூறுகிறான்.
சிறைக்குச் சென்று டேவை சந்திக்கும் கிரிஸ்டியிடம், “உன்னைத் தேடி நிறைய பேர் வருவார்கள்” என்றும், “அவர்களுக்கு உன்னால் முடிந்த சேவைகளை செய்” என்றும் அறிவுரை கூறுகிறான்.
டேவ் சொன்னபடியே கிரிஸ்டியின் அறைக்கு ஏராளமான பேர் வருகிறார்கள். அவளின் படுக்கையறையை பகிர்ந்துகொள்கிறார்கள். வருகை தரும் அத்தனை பேரிடமிருந்தும் சிறைக்குள் இருந்தபடியே பணம் வாங்கிக்கொள்கிறான் டேவ். இது, கிரிஸ்டிக்கு தெரியாது.
அவள், இதை கடவுளின் கட்டளை என்றெண்ணி இலவச சேவை செய்துகொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் உடலும் மனமும் வெகுவாக சோர்வடைந்துவிட, தேவதூதன் இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்தவில்லையே என அச்சம் கொள்கிறாள். இது குறித்து டேவை சந்தித்து முறையிடுகிறாள்.
சிறையில் இருக்கும் சக கைதி ஒருவனை சந்திக்கும்படி டேவ் அவளை பணிக்கிறான்.
அந்தக் கைதி அவளிடம், “அவன் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வீசுவதை ஒருநாள் கண்டு நான் அதிசயித்தேன். அவன் தேவதூதன்” என்கிறான். கிரிஸ்டி, மகிழ்ச்சியோடு அறைக்குத் திரும்புகிறாள்.
சில நாட்களுக்கு பிறகு இதே கைதி, கிரிஸ்டியை அவளது அறையில் வந்து சந்திக்கிறான். அவளை அனுபவிப்பதுதான் அவனது நோக்கம்.
தேவதூதனைப் பற்றி தெரிந்த ஒருவனுக்கு தன்னை ஒப்படைப்பது குறித்து, கிரிஸ்டி மனதார மகிழ்ச்சிகொள்கிறாள்.
காமம் முடிந்த பிறகு அந்த அறையை நோட்டம்விடுகிறான், கைதி. அறை முழுவதும் குழந்தை படங்கள்.
“யார் இந்தக் குழந்தைகள்?”
“எல்லாம் என்னுடையவை. இறைவனுக்காக தியாகம் செய்துவிட்டேன்”
கிரிஸ்டியின் இந்த வார்த்தைகளும் குழந்தைகளின் அந்தப் புகைப்படங்களும், கைதியை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
நன்பகல் அறைக்கு திரும்புவதாகச் சொல்லிவிட்டு அவன் வெளியேறுகிறான்.
இதனிடையே, டேவ், சிஸ்டர் மேரியை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கிரிஸ்டிக்கு ஒரு கடிதம் வந்ததில், கிரிஸ்டி மிகுந்த மன உளைச்சலோடு இருந்தாள்.
நன்பகலைக் கடந்தாகிவிட்டது. வருவதாகச் சொன்ன டேவின் சக கைதி வரவே இல்லை. தன் மனதில் உள்ள துயரங்களைக் கொட்ட அவன் ஒருவன்தான் ஆறுதலானவன், தேவதூதனை அறிந்தவன்.
தவிப்போடு இருந்த நிலையில், படபடவென யாரோ கதவைத் தட்டும் ஓசை. சேவை கேட்டு யாரேனும் வந்திருக்கக்கூடும் என்ற பதற்றத்துடனேயே, கதவை லேசாக திறக்கிறாள் கிரிஸ்டி.
எதிரில், டேவின் அந்த சிறை நண்பன். அவனுக்குப் பின்னால் இளம் வயது பெண் ஒருத்தி.
“இவள்தான் சிஸ்டர் மேரி. டேவ் சொன்னது அத்தனையும் பொய். அவன் தேவதூதனும் அல்ல, அவனது தலையைச் சுற்றி ஒளிவட்டமும் வீசவில்லை. அப்படி வீசுவதாக பொய் சொல்லச் சொன்னான். அவனுக்கு விபச்சாரமும், பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பதும்தான் தொழில். என்னால், உங்களைப் பார்த்த பிறகு நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. அதனால்தான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.”
கிரிஸ்டி அழுவதில் ஒரு நன்மையும் இல்லை. காவல் நிலையம் போகிறாள்.
“எல்லாவற்றையும் நீங்கள் மனமுவந்து செய்ததாக நீதிமன்றத்தில் சொல்வார்கள். அவனுக்கு தண்டனை வாங்கித்தர சாத்தியமில்லை” என்கிறார் வழக்கறிஞர்.
உண்மை சுடுகிறது. டேவுக்கு, இதுவரை எந்த தண்டனையும் அளிக்கப்படவில்லை. கிரிஸ்டியும் புகார் அளிக்கவில்லை. கிரிஸ்டியை புரிந்துகொண்ட ஒருவர், இப்போது அவளை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இப்போது அவர் தன் குழந்தைகளுடன் சேர்ந்தும்விட்டார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் கிரிஸ்டி, தன் வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார். கூடவே அவரது மகனும்.
History tv-யில்தினமும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும் Dangerous persuasions என்ற நிகழ்ச்சியில் வந்த உண்மை ஒரு சம்பவம் இது.
கிரிஸ்டி, கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார்.
“நான், இப்போதும் கடவுளை நம்புகிறேன்.”
*பெயர்கள் மாறி இருக்கலாம். நினைவில்லை. இது, ரத்தமும் சதையுமான கடவுள் நம்பிக்கையாளர் ஒருவரின் உண்மைக் கதை.
கட்டுரையாளர் பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.
//கிரிஸ்டி, கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார்.
“நான், இப்போதும் கடவுளை நம்புகிறேன்.”//
இந்த மனுஷியை நல்ல பைத்தியகார மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்.
சிறந்த பகிர்வு