வடாம் போடலாம் வாங்க – 4
காமாட்சி மகாலிங்கம்

எல்லா வடாங்களையும் விட இந்த ஜவ்வரிசி வடாம் சுலபமாகத் தயாரிக்கலாம். ஆனால் நன்றாக உலர்வதற்கு நேரம் எடுக்கும். தயாரித்து வைத்து விட்டோமானால் குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொள்ளை குதூகலம். நேரமிருந்து, பலவித ரகங்களில் தயாரிக்கலாம். ஜவ்வரிசி கஞ்சி, பாயஸம் போல. உப்பு, காரம், புளிப்பு சேர்த்து சற்று கெட்டியான ஜவ்வரிசிக் கூழ் என்றே இதைச் சொல்லலாம். சின்ன அளவில் வேண்டியதைச் சொல்லுகிறேன். செய்து ருசியுங்கள். இந்த வெயில் இருக்கும்போது, இவற்றைச் செய்து ஸ்டாக் செய்து கொள்ள வேண்டும்.
உஸ் அப்பாடா என்று சொல்லாமல், நல்ல வெயில் ஆரம்பிக்கு முன்னரே அதி காலையில் வடாத்தை இட்டு விட்டால் சிரமம் தெரியாது. வடாத்திற்கும் பூரண வெயில் கிடைக்கும்.
வேண்டியவை:
ஜவ்வரிசி – 2 கப்
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சம் பழம் – 1
சீரகமோ,ஓமமோ – அரை டீஸ்பூன்
ருசிக்கு – உப்பு
செய்முறை:
சாயங்காலமே ஜவ்வரிசியைக் களைந்து நல்ல தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நீக்கி வடியவிடவும். பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். அடிகனமான அகன்ற பாத்திரத்தில் 7 கப்பிற்கு அதிகமாகவே தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில், ஊறிய ஜவ்வரிசியைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக்கி,ஸிம்மில் வைத்துக் கிளறி வேக விடவும். அடி பிடிக்காமலும்,பொங்கி வழியாமலும் நன்றாகக் கிளறி, ஜவ்வரிசியை வேகவைக்கவும். வெந்த ஜவ்வரிசிக் கூழில் அரைத்த பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து இறக்கவும். சீரகமோ, ஓமமோ சேர்க்கவும். ஜவ்வரிசி பாயஸத்திற்கு வேக வைப்பது போலதான். இறக்கி வைத்த ஜவ்வரிசிக் கூழில் லேசாக எலுமிச்சை சாற்றைப் பிழியவும். அதிகம் புளிப்பு, காரம், உப்பு இவைகளை ஜவ்வரிசி தாங்காது.நன்றாக மூடி வைக்கவும். இரவே இந்தக் கலவையை தயாரித்து வைத்து விட்டோமானால் காலையில் இட சௌகரியமாக இருக்கும்.
அடுத்த நாள் காலையில் தளர்வான தயிர் சாதம்போலத் தோன்றும். அதிகாலையிலேயே வடாத்தைப் பரப்ப திக்கான ஷீட்டுகளைத் தயார் செய்யவும். ஷீட்டை ஈரத் துணியினால் நன்றாகத் துடைக்கவும். வடாக்கூழ் ஆறி இருக்கும். மிகவும் திக்காக இருந்தால், சிறிது தண்ணீரோ,மோரோ சேர்த்துச் சுலபமாக கையினால் வடாத்தைச் செய்யும்படியான பதத்தில் கலந்து கொள்ளவும்.
வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு கையினாலோ,அல்லது ஸ்பூனினாலோ ஒரு ஸ்பூன் அளவிற்கு கூழை ஷீட்டில் விட்டால் அது தானாகவே சற்று பரவிக்கொண்டு ஒரு வடிவத்தைக் கொடுக்கும். அந்த அளவிற்கு கூழின் தளர்ந்த நிலை இருக்க வேண்டும். அதன் பக்கம் சற்று தள்ளி இன்னொரு வடாம். இப்படிசெய்து கொண்டே போனால் கூழ் காலியாகி விடும். ஷீட் கொள்ளளவிற்கு வடாம் எங்கும் வியாபித்திருக்கும். நல்ல வெயிலில் காய்ந்தால், வடாம்கள் மறுநாளே திருப்பிப் போடவரும். சமயங்களில் வடாம் நன்றாகக் காய மூன்று நாட்கள் ஆகிவிடும்.
திருப்பி விட்டுக் காயவைக்கவும். நன்றாகக் காய்ந்த பின் வடாங்களைப் பத்திரப் படுத்தவும். காரத்தைக் குறைத்துப் போட்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து இட்டோமானால்க் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எலுமிச்சை சாற்றிற்குப் பதில் நான்கு தக்காளிப் பழத்தை, அரைத்துச் சேர்த்தும் செய்யலாம். கலரும்,ருசியும் வேறாக அமையும். சீரகம், ஓமம் முதலானது சேர்த்தால் மிகவும் வாஸனையாக இருக்கும். புதினா பிடித்தவர்கள், மிளகாயுடன் சிறிது புதினாவை சேர்த்து அரைத்தும் செயயலாம்.நன்றாகக் காயவைப்பது மிகவும் அவசியம்.
காய்ந்த வடாம்கள் எண்ணெயில் பொரிக்கும் போது ஓசையுடன் சீறிப் பொரியும். எண்ணெயும் சிலவாகும். பரிமாற அழகானது. சாப்பிடவும் ருசிதான்.
வணக்கம்
அம்மா
தெளிவானவிளக்கம்… செய்து பார்க்கிறோம் அம்மா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சூப்பர் சிஸ்டர் .