செல்வ களஞ்சியமே, குழந்தை வளர்ப்பு, பாட்டி கதைகள், குழந்தை இலக்கியம்

குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!

செல்வ களஞ்சியமே – 68

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

குழந்தைகளுக்குப் பிடித்த விஷயம் கதை கேட்பது. பெற்றோர்கள் யாரவது ஒருவருக்கு கதை சொல்லத் தெரிந்திருந்தால் போதும் வெகு சுலபமாக குழந்தையை சமாளித்து விடலாம். உங்கள் சின்ன வயசு அனுபவங்களையே கதையாகச் சொல்லலாம். இல்லை பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தையை நாயகன், நாயகியாக வைத்து எண்ணற்ற கதைகளைப் புனையலாம்.

உங்கள் குழந்தை சாப்பிட படுத்துகிறதா? அடுத்த வீட்டுக் குழந்தை அதேபோலச் செய்கிறது என்று கதை அளக்கலாம் (அவர்கள் காதில் விழாதவாறு!) என் பேரனுக்கு பக்கத்து வீட்டில் இருந்த ரத்தன் தான் ஹீரோ. ‘இந்த ரத்தன் அண்ணா என்ன பண்ணினானாம் தெரியுமா ஒரு நாளு?’ என்று அவனுக்கு சாதம் ஊட்டும்போது – முதல் கவளத்திலிருந்து – ஆரம்பித்தால் சாப்பிட்டு முடியும்வரை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டேஏஏஏ போவேன். அவனது கவனம் சாப்பாட்டில் வராதபடி என் கதையும் வளர்ந்து கொண்டேஏஏஏ போகும். பிற்காலத்தில் இப்படி வளைத்து வளைத்து எழுதுவதற்கு அப்போதே பயிற்சி எடுத்தேனோ, என்னாவோ?

இன்னொரு கதை எங்கள் அம்மா, பாட்டி எல்லோரும் சொல்லுவார்கள். அதை எங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன், கேளுங்கள்:
‘ஒரே ஒரு ஊரில ஒரு ஈ இருந்துதாம். ஒருநாள் அதுக்கு திடீர்னு அதோட பேரு மறந்து போயிடுத்தாம். என்ன பண்றதுன்னே தெரியலை. வீட்டுக்கு வெளியே வந்து பார்துதாம். அங்கே ஒரு கன்னுக்குட்டி நின்னுண்டு இருந்துதாம். உடனே இந்த ஈ அதுகிட்ட போயி
‘கொழு கொழு கன்னே! எம்பெரென்ன?’ அப்படின்னு கேட்டுதாம்’
அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் அம்மாவ கேளு’ ன்னு.
அந்த ஈ உடனே அதோட அம்மாகிட்ட போயி,
‘கொழு கொழு கன்னே, கன்னுந்தாயே எம்பெரென்ன? அப்படின்னு கேட்டுதாம்.
அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் மேய்க்கற இடையன கேளு’ அப்படீன்னு.
அந்த ஈ உடனே அந்த இடையன் கிட்ட போயி,
‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா, எம்பெரென்ன? அப்படீன்னு கேட்டுதாம்.
அவன் சொன்னானாம்: எனக்கு தெரியாதுப்பா, என் கைல இருக்கற கோலக் கேளு’
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, எம்பெரென்ன?’ அப்படீன்னு கேட்டுதாம.
கோல் சொல்லித்தாம்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல இருக்குற கொடிமரத்த கேளு’
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே! எம்பெரென்ன?’
கொடிமரம்: எனக்குத் தெரியாதப்பா, என் மேல இருக்குற கொக்க கேளு!
ஈ:  ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே, கொடிமரத்துல இருக்குற கொக்கே! எம்பெரென்ன?

கொக்கு: எனக்குத் தெரியாதுப்பா, நான் திங்கற மீன கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! எம்பெரென்ன?

மீன்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை பிடிக்கிற வலையன கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! எம்பெரென்ன?

வலையன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற சட்டிய கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! எம்பெரென்ன?

சட்டி: எனக்குத் தெரியாதுப்பா, என்ன பண்ற குயவன கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! எம்பெரென்ன?

குயவன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற மண்ணை கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! எம்பெரென்ன?

மண்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல வளர புல்லைக் கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! எம்பெரென்ன?

புல்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை திங்கற குதிரைய கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு திங்கற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! புல்லத் திங்குற குதிரையே! எம்பெரென்ன?

குதிரை ஈ யைப் பார்த்து ‘ஹிஈ…ஈ..ஈ… ஹி..ஈ…ஈ.. ன்னு சிரிச்சுதாம்! உடனே ஈக்கு தன் பேரு நினைவுக்கு வந்துடுத்தாம்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் இத்தனை பேரையும் நினைவு வைத்துக் கொள்ளும் ஈக்கு தன் பெயர் மறந்து போகுமா? என்று கேட்கத் தோன்றும்.

இந்தக் கதையை எல்லாக் குழந்தைகளும் விரும்பிக் கேட்பார்கள். பேச்சு வரும் சமயத்தில் இந்தக் கதையை சொன்னால் நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

என் நாத்தனாரின் பெண் சமீபத்தில் வந்திருந்தபோது சொன்னாள்: ‘நீங்க நளினி (என் பெண்) க்கு சொன்ன ‘கோல்டி லாக்ஸ்’ கதைய நான் என் பெண்ணுக்கு இப்போ சொல்றேன்’. நான் அவளிடம் சொன்னேன்: உங்க அம்மா ‘ஊசிப்பிள்ளை’ கதை சொல்லுவார். அதை நான் என் பேரன்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று. என் பாட்டி மிகப்பெரிய கதைசொல்லி. அவர் சொன்ன பலகதைகளை – சுண்டுவிரல், மண்பானை – ஆகிய கதைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. என் பேரன்களுக்கும், என் அக்கா பேத்திகளுக்கும் இவற்றை சொல்லுவேன். என் இரண்டாவது பேரன் ஒருமுறை சொன்ன கதையை இன்னொரு முறை சொல்லாதே என்பான். அவனுக்காக நான் ‘இட்டுகட்டிய’ கதைகளை பிறகு சொல்லுகிறேன்.

இவற்றையெல்லாம் கூட எங்காவது பதிந்து வைக்க வேண்டும். பொக்கிஷங்கள் அல்லவா?

Advertisements

8 thoughts on “குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!”

 1. இந்த வெய்யிலில் உங்கள் கட்டுரைகள் மிகவும் குளுமையாக உள்ளன ரஞ்சனி படித்து முடித்ததும் ஒரே மலரும் நினைவுகள்தான். நாங்களும் இதெல்லாம் பாடியிருக்கிறோம் ஆனால் இப்போது மற்ந்து விட்டது இப்போதெல்லாம் பாட்டி சொல்லும் பழைய கதைகளை யார் கேட்கிறார்கள் என் பேரன் சாப்பிட ரைம்ஸ் சிடியோ அல்லது டேபில் சோட்ட பீமும்தான் நம் கதைகளைக் கேட்க அவர்களுக்கு போர் என்ன செய்வது கலிகாலம்.

  1. வாங்க விஜயா!
   சோட்டா பீமும், மற்ற ஹீரோக்களும் வந்து குழந்தைகளின் கற்பனையை முடக்கி விடுகிறார்கள். என்ன செய்ய?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. ஹலோ ரஞ்சனி…நலமா? எனக்கு தெரிந்த இந்த ‘ஈ’ கதை பாட்டு உங்களுக்கும் தெரியுமா? நானும் இதை என் குழந்தைகள், பேரன், பேத்திகளுக்கு சொல்லுவேன். நான் சொல்லும் முறை இப்படி….

  கொழு கொழு கன்றே ..
  கன்றின் தாயே…
  கன்று மேய்க்கும் ஆயனே…என்று வரும்.

  இதில் கொக்குக்கு பிறகு …
  கொக்கு நீராடும் குளமே ….(இதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போலும்.)
  குளத்தில் இருக்கும் மீனே..
  மீன் பிடிக்கும் வலையா..
  வலையன் கைக் கலயமே… .
  கலயம் செய்யும் குயவா…
  குயவன் கை மண்ணே..
  மண்ணில் வளரும் புல்லே…
  புல்லைத் தின்னும் குதிரையே ..என்று வரும்.

  எவ்வளவு அழகான, ஒன்றிலிருந்து இன்னொன்று என்பதை எவ்வளவு வரிசையாகக் கூறும் பாட்டு.

  1. வாங்க ராதா!
   ரொம்பவும் நலம். நிறையப்பேர்கள் இந்தப் பாட்டுடன் கூடிய கதையை மறந்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லுவீர்கள் என்பது சந்தோஷமான விஷயம்.
   கொக்குக்குப் பிறகு நீங்கள் சொல்லியிருப்பது சரி. மறந்துதான் விட்டேன். நினைவு படுத்தியதற்கு நன்றி!

 3. அருமையான கதை. பாட்டிகள் எல்லோரும் நல்ல கதைசொல்லிகள் தான். பேரக்குழந்தைகளுக்கு .
  எல்லாமே பொக்கிஷ பகிர்வுகள் தான்.
  வாழ்த்துக்கள்.

  1. வாங்க கோமதி!
   நீண்டநாளைக்குப் பிறகு உங்கள் கருத்துரையைப் பார்க்க சந்தோஷம். பாட்டிகளே பொக்கிஷங்கள்தான், இல்லையா?

 4. எ வ்வளவு காலமானாலும்,மறக்காத, ஞாபக சக்தியைக் கூட்டும் கதை. கேட்ட சொன்ன கதையைப் படிக்கும்போது நாமே குழந்தையாக மாறிவிட்டது போன்ற உணர்ச்சி. அதிகம் வலைப்பக்கம் வரமுடியவில்லை. மீண்டும் குழந்தைப்பருவம்
  வந்து விட்டது போன்ற ஒரு உணர்ச்சி. அன்புடன்

  1. வாங்க காமாக்ஷிமா!
   உண்மையிலேயே இந்தக் கதையை சொல்லும்போதெல்லாம் நானும் குழந்தையாக மாறிவிடுவேன்.
   நீங்கள் வந்தது மிகவும் சந்தோஷம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s