காய்கறிகளின் வரலாறு – 27
காலிஃபிளவர்
இன்றைய துருக்கியின் ஒரு பகுதியான ஆசியா மைனரை பூர்வீகமாகக் கொண்டது காலிஃபிளவர். கிபி 600களில் இத்தாலியில் பரவி, 16ம் நூற்றாண்டில் மற்ற நாடுகளில் காலிஃபிளவரின் பயன்பாடு பரவியது. போர்த்துக்கீசியர் மூலமாகவே காலிஃபிளவரும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. காலிஃபிளவர், முட்டைகோஸ், பிரக்கோலி மூன்றும் ஒரே இனத்தைச் சேர்ந்த காய்கறிகள். இலைகளுக்குள் தோன்றும் அகன்ற பூவே சமையலுக்கு உகந்ததாக பயன்படுத்தப்படுகிறது.
காலிஃபிளவரை தேர்ந்தெடுப்பது எப்படி?
காலிஃபிளவரில் வெண்மை, இளம் மஞ்சள், ஊதா நிறங்களில் பூக்கள் உண்டு. ஆனால் அதிகம் விளைவிக்கப்படுவது, விற்பனைக்குக் கிடைப்பது வெண்மையான காலிஃபிளவர் வகையே. பழுப்பேறாத, கரும்புள்ளிகள் தோன்றாத வெண்மையான காலிஃபிளவரே சமைக்கவும் உண்ணவும் ஏற்றது. காலிஃபிளவரில் இளம் பச்சை நிறத்தில் சிறு புழுக்கள் இருக்கும். காலிஃபிளவரை பிரித்து வெட்டும்போதே இந்தப் புழுக்களை வெளியே எடுத்துவிட முடியும். இந்தப் புழுக்கள் உள்ள பூவை நாம் உண்பதால் உடல் நலனுக்கு எந்த தீங்கும் இல்லை.
காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள்
காலிஃபிளவர்(100கிராம்)இல் உள்ள சத்துக்கள்… நீர்ச்சத்து 92 கி,கார்போஹைட்ரேட் 5 கி, புரதம் 1.9 கி, நார்ச்சத்து 2 கி ,கொழுப்பு 0.3 கி,சர்க்கரை 1.9 கி அளவில் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம்,சோடியம், மக்னீஷியம்,மாங்கனீஸ்,ஜிங்க் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி (58 %), வைட்டமின் இ, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் உண்டு.
காலிஃபிளவரை வைத்து காமாட்சி மகாலிங்கம் தந்த ஒரு சுவையான ரெசிபி இதோ…
காய்கறி ஸ்டூ
தேவையானவை:
குடமிளகாய் துண்டுகள் – அரை கப்
நறுக்கிய உருளைக் கிழங்கு – ஒரு கப்
உறித்த பட்டாணி – அரை கப்
நறுக்கிய காலிஃப்ளவர் – ஒரு கப்
நறுக்கிய கேரட் – அரை கப்
நறுக்கிய தக்காளிப் பழம் – முக்கால் கப்
பச்சை மிளகாய் – மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
லவங்கம் – 6
ஏலக்காய் – ஒன்று
மிளகுப் பொடி – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ஒரு துளி
ருசிக்கு – உப்பு
எண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி
செய்முறை:
தேங்காய் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில் பார்ப்போம். ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்து பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காய் பால் கிடைக்கும். பின்னர் ஒரு கப் சூடான நீர் சேர்த்து தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால் தேங்காய் பால் கிடைக்கும்.
பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத் தாளித்து, வெங்காயம், மிளகாயை வதக்கி தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிரட்டி உப்பு ,மிளகுப்பொடி மஞ்சள் சேர்க்கவும். திட்டமாகத் தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும். வெந்த காய் கலவையில் தேங்காய் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்த்து உபயோகிக்கவும்.
கலந்த சாதம், புலவு, சேவை, அடை, தோசை என எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம். தேங்காய் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.
இதை இலங்கையில் கோவாபூ என்போம்.இலங்கையில் மரக்கறியில் அதிக விலை விற்பதும் இதே!
போர்த்துக்கீசியர் கொண்டுவந்த காலிஃபிளவர் என்றாலும் சத்துள்ள உள்ள உணவே!