நோய்நாடி நோய்முதல் நாடி – 45
ரஞ்சனி நாராயணன்

சென்ற வாரம் தொண்டையின் வேலையாக விழுங்குதல் என்பதைப் பார்த்தோம். என்ன ஒரு அற்புதம், இந்த மனித உடல் என்று வியந்து போனோம். இன்னும் இன்னும் என்ன அற்புதங்கள் நிகழ்கிறது நம் உடலில் என்று தொடர்ந்து பார்ப்போம்.
கார்க்ளிங் என்று ஒன்று செய்வோமே, அது எப்படி என்று பார்ப்போம். தொண்டை வலி என்று மருத்துவரிடம் போனால் அவர், வெந்நீரில் உப்பு போட்டு கார்க்ளிங் செய்யுங்கள் என்கிறார். நாமும் வாயில் உப்பு நீரை ஊற்றிக் கொண்டு ‘களகள’ என்று சப்தம் எழுப்பி விட்டு பிறகு அந்த நீரை வெளியே துப்புகிறோம். வாயில் போட்ட திரவம் எப்படி தொண்டைக்குள் இறங்குவதில்லை? எப்படி அந்த சப்தம் வருகிறது? யோசித்திருப்போமா என்றைக்காவது? நீங்கள் மட்டுமில்லை நானும் இதுவரை யோசித்ததில்லை – கீழ்கண்ட விளக்கத்தைப் படிக்கும் வரை:
விழுங்குதலில் சற்று மாறுபட்ட வேலை இங்கு நடக்கிறது. குரல்வளை மூடி குரல்வளை துவாரத்தை முழுவதும் முடுவதில்லை. நாம் சுவாசித்து வெளிவிடும் காற்று வாயில் இருக்கும் உப்புத் தண்ணீரை அசைக்கிறது. அதனால் வருவதுதான் இந்த களகள சப்தம். வாந்தி எடுத்தல் போன்ற சமயங்களில் காற்றுக்குழாய் மற்றும் நாசித் துவாரங்கள் எல்லாம் மூடப்பட்டுவிடுகின்றன.
சுவாசித்தல்:
மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றை நுரையீரலுக்குக் கடத்துவதும், உள்ளே வரும் காற்றின் அளவு மற்றும் அதன் தன்மையை வெளியில் இருக்கும் சீதோஷணத்திற்குத் தக்கவாறு ஒழுங்கு படுத்துவதும் நமது தொண்டையின் வேலை. அத்துடன் காற்றில் ஏதாவது நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் வந்தால் அவை தொண்டையை தாண்டி உள்ளே போகாமல் பார்த்துக் கொள்வதும் தொண்டையின் வேலை.
பொதுவாக நாம் சுவாசிக்கும்போது நமது வாய் மூடி இருக்கிறது. காற்றானது நாசித் துவாரத்தின் மூலம் காற்று குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது. அதேபோலவே நுரையீரல்களினால் வெளியேற்றப்படும் காற்றும் வெளியே வருகிறது. ஆனால் நாம் வாயினால் மூச்சுவிடும்போது உள்உறுப்புகளின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எப்போது நாம் வாயால் சுவாசிக்கிறோம்? எப்போதெல்லாம் மூக்கினால் நாம் உள்ளிழுக்கும் காற்று போதுமானதாக இல்லையோ அப்போது; மற்றும் தீவிர ஜலதோஷத்தினால் மூக்கு அடைத்துக் கொண்டு நம்மால் மூக்கினால் சுவாசிக்க முடியவில்லையோ அப்போது. பாடும்போது, பேசும் போது அதாவது நம் வாய் திறந்திருக்கும் போது, நமது உள்நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும்போது வாயால் சுவாசிக்கிறோம்.
வாயால் சுவாசிக்கும்போது இன்னொன்றும் நிகழ்கிறது. அதுதான் குறட்டை! இரவில் நாம் தூங்கும்போது ஏற்படும் குறட்டையும் நாம் வாயால் சுவாசிப்பதால் தான் ஏற்படுகிறது. வெளிநாடுகளில் கணவனின் / மனைவியின் குறட்டை தாங்காமல் விவாகரத்துகளும் நடப்பது உண்டாம். நம் இந்திய மனைவியரின் (என்னையும் சேர்த்து!) பொறுமையை ரொம்பவும் பாராட்ட வேண்டும். ஒவ்வாமை, சைனஸ் தொற்று, டான்சில்ஸ், போன்றவற்றினால் நாம் பாதிக்கப்படும்போதும் குறட்டை விடுவோம்.
பேசுதல்:
பேசுவதற்கு நமது தொண்டை பயன்பட்டாலும், அதற்கு உண்டான சக்தி நமது நுரையீரலிலிருந்து கிடைக்கிறது. அதிர்வுப் பொறியாக நமது குரல் பெட்டி வேலை செய்கிறது. ஒலி அதிர்வு உண்டாக்க நமது தொண்டை, மூக்கு, வாய் மற்றும் சைனஸ் ஆகியவை உதவுகின்றன.
இத்தனை உறுப்புகளும் சரியாக வேலை செய்தால் தான் நாம் பேசுவது பிறருக்குப் புரியும். நாம் பேசுவதற்கு தேவையான சக்தி நாம் உள்ளிழுக்கும் காற்றிலிருந்து வருகிறது. நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது நமது உதரவிதானம் அதாவது டையாபரம் கீழிறங்குகிறது; பக்க எலும்புகள் விரிவடைந்து காற்று நுரையீரலுக்கு செல்லுகிறது. காற்று உள்ளேபோவதும் வெளியே வருவதுமான இந்த நிகழ்வின் மூலம் நம் மூச்சுக் குழலில் எப்போதும் காற்றுசுழல் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த காற்றுசுழல் தான் நமது குரல் நாண்களுக்கு வலுவூட்டி நாம் பேச உதவுகிறது.
குரல் பெட்டி
குரல் பெட்டி நமது மூச்சுக்குழலின் மேல் உட்கார்ந்திருக்கிறது. இதில் இரண்டு குரல் நாண்கள் இருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது திறந்து விழுங்கும்போதும், குரல் கொடுக்கும்போதும் மூடிக் கொள்ளுகின்றன. இரண்டு குரல் நாண்களுக்கிடையே காற்று புகுந்து வரும் போது நாம் பேசுகிறோம். இவை மிகவும் மென்மையாக இருப்பதால் காற்று உட்புகுரும் போது அதிருகின்றன. நாம் உண்டாக்கும் ஒளியின் தன்மையைப் பொறுத்து இவை ஒரு நொடிக்கு 100 முதல் 1000 தடவைகள் அதிருகின்றன. நமது குரலின் சுருதி குரல் நாண்களின் நீளம், அழுத்தம் இவைகளைப் பொறுத்து அமையும்.
குரல் பெட்டியில் உண்டாகும் ஒலி நமது வாய், மூக்கு, தொண்டை மூலம் பேச்சாக உருவாகிறது. நாம் குரல் என்று சொல்வது பேசுவதும், பாடுவதும் மட்டுமல்ல; புத்தகம் படிப்பதற்கும், சிரிப்பதற்கும், அழுவதற்கும், கூச்சல் போடுவதும் கூட இந்தக் குரல் பெட்டியினால்தான் உண்டுபண்ணப் படுகிறது.
ஆண் குரல், பெண் குரல் என்று எப்படி கண்டுபிடிக்க முடிகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் குரல் நாண்கள் வித்தியாசமானவை. ஆணின் குரல் நாண்கள் 17 X 25 மிமீ நீண்டதாகவும் பெண்களின் குரல் நாண்கள் 12.5 X 17.5 மி.மீ நீண்டதாகவும் அமைந்திருக்கும். வளர்ந்த ஆணின் குரல் நாண் பொதுவாகவே சுருதி குறைந்ததாகவும் விசாலமான நாண்களாவும் இருக்கும். இதன் காரணமாகவே ஆண் பெண் குரல்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.
அடுத்த வாரம் …
குறட்டை விடுவது ஏன் என்பது பற்றி எழுதுவதில் தானும் ரொம்ப பொறுமைசாலி என்ற தற்பெருமை எதற்கு? ஒரு குறட்டைதானா கணவர்கள் செய்யும் எத்தனையோ காரியங்களுக்கு நாம் பொறுத்து போகவேண்டித்தான் உள்ளது. குறட்டைக்கே விவாகரத்து என்றால் நமது நீதிமன்றங்கள் எல்லாம் விவாகரத்து கேஸ்களைமட்டுமே கவனிக்க இன்னும் சில ஆயிரம் நீதிமன்றங்கள் இந்தியாவில் வேண்டும் எனினும் அருமையான பதிவு ரஞ்சனி