நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம், மூக்கு

தொண்டைக்குத்தான் எத்தனை வேலை?!

நோய்நாடி நோய்முதல் நாடி- 44

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

நாம் பேசுவதற்கும், பாடுவதற்கும், மூச்சு விடுவதற்கும், சுவாசிப்பதற்கும் பயன்படுவது தொண்டைதான். ENT எனப்படும் மூன்று உறுப்புகளில் மூன்றாவதாக இருப்பது இந்தத் தொண்டை. அதுமட்டுமல்ல; துக்கத்தில் தொண்டை அடைக்கும். பேச்சு வராது. மிளகாய் தாளித்தால் தொண்டை கமரும். ஜலதோஷம் வந்தால் தொண்டை கட்டும். இரண்டு மூன்று குரல்களில் பேசுவோம். தொண்டையிலே ‘கீச், கீச்’ தான்! நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவை (ஐஸ்க்ரீம், குளிர்ந்த பொருட்கள்) சாப்பிட்டால் தொண்டை வலிக்கும்.

இத்தனை பெருமை வாய்ந்த தொண்டை நமது கழுத்துப் பகுதியின்  பின்புறத்தில், முதுகெலும்பின் முன்புறத்தில் அமைந்திருக்கிறது. நமது மூக்கு, உணவுக்குழாய், மூச்சுக்குழாய், நாசித் துவாரம் ஆகியவற்றை இணைக்கும் பாதையாக இது இருக்கிறது. நமது உணவு செரிப்பதற்கு இந்தத் தொண்டையின் பங்கும் மிகவும் முக்கியமானது. மேலண்ணம் (நமது தொண்டைக்கு அருகில் இருக்கும் மெத்தென்ற பகுதி) குரல்வளை மூடி இரண்டும் கூடத் தொண்டையின் பகுதிகள்தான். இந்தக் குரல்வளை மூடிதான் நாம் சாப்பிடும் உணவு மூச்சுக் குழலுக்குள் போய்விடாமல் கட்டுப்படுத்துகிறது. உணவு, நாம் உள்ளிழுக்கும் மூச்சு இரண்டுமே தொண்டை வழியாகத்தான் நம் உடலுக்குள் போகிறது. அதனால் இந்தத் தொண்டையை ஜீரண உறுப்புகளிலும் சேர்க்கலாம். சுவாச உறுப்புகளிலும் சேர்க்கலாம்.

நாம் உண்ணும் உணவு இந்தத் தொண்டை வழியே தான் நம் உடலுக்குள் போகவேண்டும். அப்போது நமது மேலண்ணம் நாசித்துவாரத்தை மூடுகிறது. இதனால் நமது மூக்கிற்குள் உணவு செல்வது தடுக்கப்படுகிறது. எப்போதும் இது நடக்கிறது. ஆனால் சிலசமயங்களில் நாம் நீரையோ அல்லது வேறு திரவப் பொருளையோ வாயில் வைத்துக் கொண்டு சிரித்துவிட்டால் என்ன நடக்கிறது? திரவம் நமது நாசித்துவாரம் வழியே வெளியே வருகிறது! இதனால் அறியப்படுவது யாதெனில் நமது வாய் மூக்கு இரண்டுமே தொண்டையுடன் இணைக்கப்பட்டு இருக்கின்றன என்பதுதான்.

அதேபோல சிலசமயம் நாம் உண்ணும் உணவு சிறிதளவு மூச்சுக் குழாயில் போய்விட்டாலும் கூட, நாம் தும்முகிறோம், இருமுகிறோம், எப்படியோ மூச்சுக் குழாயில் புகுந்த உணவுத் துகள் வெளியே தள்ளப்பட்டு விடுகிறது. என்னே கடவுளின் படைப்பு!

IMG_9999_401

உணவை விழுங்குவது என்பது நம்மைப் பொறுத்தவரை ரொம்பவும் எளிய செயல். நம் கை உணவை எடுக்கிறது; வாயில் போடுகிறது. உணவு உள்ளே தள்ளப்படுகிறது – அவ்வளவுதான். ஆனால் நான் இந்த தொடர் எழுதுவதற்காக தேடி எடுத்த ஒரு புத்தகம் என்ன சொல்லுகிறது தெரியுமா? விழுங்குவது என்பது ஒரு சிக்கலான செயல் என்று! உடலியலாளர்கள் சுமார் நூறு வருடங்களாக ஆராய்ந்து இது என்ன மாதிரியான தொழில்நுட்பம் என்று சமீப காலத்தில் அதாவது பத்து பதினைந்து வருடங்களாகத் தான் இதைப் பற்றி நன்றாக புரிந்துகொண்டிருக்கிரார்களாம்! இந்த புத்தகத்தின் ஆசிரியர் லூயிஸ் எல்ஸ்பெர்க் தொண்டையைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்:

நம் வாய்க்குள் நம்மால் எதையெல்லாம் பார்க்க முடியும்? வாயின் கீழ்த்தளம், நாக்கு, கெட்டியான மேலண்ணம், அதனுடனேயே இணைந்து அமைந்திருக்கும் சிறிய திரை போன்ற மெத்தென்று இருக்கும் பகுதி, நடுவில் சின்னதாக ஊசலாடிக் கொண்டிருக்கும் உள்நாக்கு.  இந்த மெத்தென்ற மேலண்ணத்திலிருந்து இரண்டு கோழை மென்படலங்கள் ஒன்று நாக்கிற்கு பக்கவாட்டிலும், ஒன்று பின்பக்கத்திலும் அமைந்திருக்கின்றன. இவைகளுக்குப் பின்னால் pharynx எனப்படும் உணவுக் குழாயையும், வாயையும் இணைக்கும் பகுதி இருக்கிறது. இங்கு தான் இரண்டு பக்கங்களிலும்  பாதம் வடிவ டான்சில்ஸ் அமைந்திருக்கின்றன.

விழுங்குதல் என்பதில் இரண்டு நிகழ்வுகள் இருக்கின்றன. முதல் நிகழ்வு உணவு வாய்க்குள் செல்லுதல், இரண்டாவது அங்கிருந்து வயிற்றுக்குள் செல்லுதல். நாக்கு தனது இடைவிடா அசைவினால் உணவை வாயினுள் தள்ளுகிறது. இங்கு இருக்கும் இரு குழிகளில் தான் நாம் சாப்பிடக் கூடாதவை நிறுத்தப் படுகின்றன. அதேசமயம் நாசித்துவாரம் மூடப்பட்டு உணவு மேலே போகாமல் தடுக்கப்படுகிறது. உணவுக் குழாயை உணவு அடைந்துவிட்டால் பிறகு அங்கிருந்து வயிற்றை அடைவது சுலபமாகிவிடுகிறது. உணவுக் குழாய் என்பது இரண்டு வரிசை தசை நார்களினால் ஆன ஈரப்பசையுள்ள சவ்வினால் உட்பூச்சு கொண்ட ஒரு நீண்ட குழல். இது உணவு செல்லாதபோது விரிவதில்லை. இந்த உணவுக் குழல் பற்றிய ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஒரு வருடத்தில் இரண்டாயிரம் பவுண்டுகள் எடையுள்ள உணவை வயிற்றுக்குக் கொண்டு சென்றாலும், தனக்கென எதுவும் வைத்துக் கொள்வதில்லை என்பதுதான். எப்படி நல்லவர்கள் ஊருக்கு உழைத்து தமக்கென எதுவும் வைத்துக் கொள்வதில்லையோ அதைப்போல என்கிறார், இந்த ஆசிரியர்.

நாம் சாப்பிடும் உணவு, உணவுக் குழலை அடைந்ததும் ஒரு முட்டை வடிவத்தை – கூர்மையான பகுதி மேலே – எடுத்துக் கொள்கிறது. நாம் பருகும் நீர் கூட இந்த வடிவை எடுத்துக் கொள்கிறது. உணவுக்குழாயின் மேல்பகுதி உணவு வந்தவுடன் விரிந்து சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த செயல் தான் உணவு வயிற்றை அடைய உதவுகிறது. இப்படி விரிந்து சுருங்கும் போது ஏற்படும் ஒலியை வைத்து நமது உணவுக் குழலின் ஆரோக்கியத்தை அறியலாம்.

இந்த விழுங்கும் செயல் நடைபெறும் ஒழுங்கும், இதில் சம்மந்தப்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் – பெரிய பெரிய உருண்டைகளாக உணவை உள்ளே தள்ளினாலும், சின்னச்சின்ன மாத்திரைகளை விழுங்கினாலும் -அதிசயம் என்கிறார் லூயிஸ். இதில் ஏதாவது ஒன்று நடைபெறத் தவறினாலும், தொண்டையின் செயல்பாடு நின்றுவிடும். உணவுத் துகள் மூச்சுக்குழலுக்குள் சென்றுவிட்டால், உடனே நாம் இருமி, அல்லது தும்மி உள்ளே புகுந்திருக்கும் துகளை வெளியே தள்ளிவிடுகிறோம்.

அடுத்த வாரம் சுவாசித்தல் பற்றிப் பார்ப்போம்.

 

“தொண்டைக்குத்தான் எத்தனை வேலை?!” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. தட்டிலிருப்பதை காலி செய்கிறோம் என்று நினைத்தால் அதில் தொண்டை இத்தனை வேலை செய்கிறதா என்று ஆச்சர்யமாக உள்ளது. சில சமயம் டி வி பார்த்துக்கொண்டே என்ன சாப்பிட்டோம் எவ்வளவு சாப்பிட்டோம் என்று கூட நமக்குத் தெரியாத நிலையில் தொண்டை இத்தனை வேலை செய்து நம்மைக் காப்பாற்றுகிறதே அதியம்தான் கடவுளின் படைப்பை எத்தனைப் புகழ்ந்தாலும் முடியாது அருமையான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்

  1. வாங்க விஜயா!
   நீங்கள் சொல்வது உண்மை, உண்மை, உண்மை!
   கடவுளின் படைப்பைபோல உண்டா?
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க பாண்டியன்!
   இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்ததிலிருந்து தினமும் ஒரு நூறு முறையாவது இந்த அற்புதம் பற்றி வியந்து போகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.