குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனரான R.விஜயகுமார், இயக்குனர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் R.விஜயகுமார் கூறியதாவது, “நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என தலைப்பு வச்சதுக்குக் காரணம் ஹீரோவோட கேரக்டர்தான். ஹீரோ எதை செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குரு நாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்புக்குக் காரணம். முழுக்க முழுக்க வட சென்னையிலயே நடக்கிற கதை. சென்னை மக்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘ஏடா கூடம்’. அதுவும் படத்துக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு. ‘பாக்சிங்’ விளையாட்டுதான் படத்தோட மையக் கரு. வட சென்னையில நடந்த ஒரு பாக்சிங் மாஸ்டரோட உண்மைக் கதைதான் இந்த படம். பொதுவா, பாக்சிங்ல ஜெயிச்சி பெரிய ஆளாகிட்டாங்கன்னா, அவங்களைப் பார்த்து ஊரே பயப்படும். ஆனால், அதை பலரும் ரவுடியிசத்துக்குத்தான் பயன்படுத்துவாங்க. ஆனால், படத்துல வர்ற பாக்சிங் மாஸ்டர், பாக்சிங்கை ஒரு விளையாட்டால் பார்க்காம ஒரு கலையா பார்க்கிறாரு, தர்மமா பார்க்கிறாரு. இந்த கலை பலருக்குப் போய்ச் சேரணும்னு நினைக்கிறாரு. வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த பாக்சிங் கத்துக் கொடுக்கும்னு சொல்றவரு.
படத்துல ஹீரோயினா நடிக்கிறவங்க வீணா நாயர். இவங்க கேரளாவுல பிரபலமான விளம்பர மாடல். படத்துல ஒரு சாப்ட்வேர் இன்ஜினயரா நடிக்கிறாங்க.
இந்த படத்துக்காக வட சென்னை பகுதியான ராயபுரம், காசிமேடு, எர்ணாவூர், திருவொற்றியூர் ஆகிய இடங்கள்ல படப்பிடிப்பு நடந்தது. யாருமே போகாத பல இடங்களுக்குப் போயி படமாக்கியிருக்கிறோம்.
அது மட்டுமில்லாம பாக்சிங், வட சென்னை பகுதியில எப்படி நடந்ததோ அதை அப்படியே யதார்த்தமா படமாக்கியிருக்கிறோம். உதாரணமா பாக்சிங்ல கலந்துக்கிறவங்களுக்கு கையில கிளவுஸ் கூட இருக்காது. வெறும் ‘காடாத் துணியை’தான் கிளவுஸ் மாதிரி சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க. இப்படிப் பல விஷயங்களை பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கோம்,” என்கிறார் இயக்குனர் விஜயகுமார். படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – குருந்துடையார் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – நிர்மல் தேவதாஸ்
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – சார்லஸ் மெல்வின்
பாடல்கள் – இளைய கம்பன், லோகன்
ஒளிப்பதிவு – சரவணன் பிள்ளை
படத்தொகுப்பு – தேவராஜ்
கலை – கலை முருகன்
சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
நடனம் – ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை – வேல் மணி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்