காய்கறிகளின் வரலாறு – 25
வெண்டைக்காய்
ஆசிய, ஆப்பிரிக்க வெப்ப மண்டல மழைப் பொழியும் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறி வெண்டைக்காய். பொதுவாக வழங்கப்படும் ஒக்ரா என்கிற சொல் ஆப்பிரிக்க மூலச் சொல்லிருந்து வந்தது. அதனால் இதை ஆப்பிரிக்கர்களே முதலில் இதை உண்ணத் தொடங்கியிருக்கலாம். இன்று உலகம் முழுவதிலும் இந்தக் காயை உண்கிறார்கள். இந்தியா வெண்டைக்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சை நிறத்தில் மட்டுமல்லாது வெளிர் ஊதா நிறத்திலும் வெண்டைக்காய் உற்பத்தியாகிறது. பொதுவாக தக்காளியில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட், சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் என்று அறிந்திருப்போம். வெளியே தெரியாத செய்தி… வெண்டைக்காயில் உள்ள (100கிராமில் 0.05கி)ஆக்ஸாலிக் அமிலம், சமைக்கும்போது கால்சியம் ஆக்ஸலேட்டாக மாறி, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடியது என்பதுதான் அது. அளவோடு பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
வெண்டைக்காயை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
வெண்டைக்காயை உடைத்து பார்த்து வாங்க வேண்டும் என்கிற சொலவடை உண்டு. ஆனால் உடைத்து பார்த்து வாங்குவதற்கெல்லாம் இப்போது கடைகளில் அனுமதிப்பதில்லை. இளம் காய்களை கண்டுபிடிக்க ஒன்றிரண்டு காய்களை எடுத்து அழுத்திப் பாருங்கள் உள்ளே அமுங்கி, உள்ளிருக்கும் வெற்றிடத்தை உணர்ந்தால் அது முற்றிய வெண்டைக்காய், சமைக்க ஏற்றதல்ல. காய்களை அழுத்தும்போது வெற்றிடம் எதுவும் இல்லாமல் கனமாக, விதை, சதைப்பகுதி நெருக்கமாக இருப்பதை உணர்ந்தால் அது சமைக்க உகந்த காய். இளம் காய் அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இதுவும் சமைக்க உகந்த வெண்டைக்காயை கண்டுகொள்ள ஒரு வழி.
வெண்டைக்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
வெண்டைக்காய் (100கிராம்)ல் நீர்ச்சத்து 90.17கி, கார்போஹைட்ரேட் 7.45கி, புரதம் 2 கி, நார்ச்சத்து 3.2கி, சர்க்கரை 1.48கி, கொழுப்பு 0.19கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும் வைட்டமின் சி(27%), வைட்டமின் கே(30%) மற்றம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ்(35%) போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்சியம்,இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் சிறிதளவில் உள்ளன.
வெண்டைக்காய் பச்சடி
தேவையானவை:
வெண்டைக்காய் இளசாக – 8
தயிர் – ஒருகப்
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய் – 1
இஞ்சி – சிறிது
தாளிக்க – கடுகு கால் தேக்கரண்டி
பெருங்காயம் – துளி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அரிந்த கொத்தமல்லித்தழை, தக்காளி – அலங்கரிக்க
செய்முறை:
வெண்டைக்காய்களை அலசி துடைத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி, மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தை தாளித்து வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும். சுருள வதக்கிய காயில் உப்பு சேர்த்து ஆற வைக்கவும்.
தயிரைக் கடைந்து வதக்கிய வெண்டைக்காய் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தக்காளியால் அலங்கரித்து உண்ணலாம்.
குறிப்புக்கு நன்றி