காய்கறிகளின் வரலாறு – 24
பலாக்காய்
முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா இன்றும் மிகப் பிரபலமான மரம். மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடக்கமான கேரளா மாநிலத்தின் கனி பலா. மலையாள மக்கள் எல்லா விழாக்களிலும் பலாவைப் பயன்படுத்தி செய்த உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மலையாள மொழியின் சக்க என்னும் சொல்லிருந்தே போர்த்துகீசியர்கள் மூலமாக ஆங்கிலத்தில் jackfruit என்று பலாப்பழம் பெயர் பெற்றது. பல கனி(சுளை)கள் சேர்ந்த தொகுப்பாக இதைப் பார்த்த தமிழர்கள் இதை பலா என்று பெயரிட்டு அழைத்தனர். பழத்தை மட்டுமல்லாது பலாவின் காயை குழம்பு கறிகளில் சேர்த்து பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இன்னமும் பலாவின் காய்களை சமைக்கும் வழக்கம் தொடர்கிறது. பலாவின் கனியைப் போல, காயும் சத்து மிக்க ஒன்றுதான்.
எது சமைக்கத்தக்க பலாக்காய்?
பிஞ்சுக்காய்களில் அதிக பால் போன்ற பிசுபிசுப்பான திரவம் இருக்கும். அதனால் சற்றே பெரிதான பலாக்காய் சமைப்பதற்கு ஏற்றது. பலாக்காயின் தோலில் முற்கள் அடர்ந்து இல்லாமல், வளர ஆரம்பிக்கும் பருவத்தில் இருக்கும் காயே சமைக்க ஏற்றது. சமைக்கும்போது லேசாக தோலை சீவிவிட்டு மற்றதை துண்டுகளாக்கி அப்படியே சமைக்கப் பயன்படுத்தலாம்.
பலாக்காயில் உள்ள சத்துக்கள்
பலாக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் கால்சியம்,சோடியம், இரும்பு போன்ற தனிம சத்துக்களும் உள்ளன.
பலாக்காய் கூட்டு
தேவையானவை:
நறுக்கிய பலாக்காய் – ஒரு கிண்ணம்
காய்ச்சிய பால் – ஒரு கிண்ணம்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
பலாக்காயை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். வேகும்போது தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு இவைகளை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காயில் கொட்டவும். பின்னர் நன்றாக கொதித்ததும், பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்
நன்றி