குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, கோடை விடுமுறை

தேவையா இந்த சம்மர் கேம்ப்?

செல்வ களஞ்சியமே – 66

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன.

கிரிக்கெட் பயிற்சி முகாம் என்று ஒரு பள்ளியில். சும்மா போக முடியுமா? வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை, அசல் கிரிக்கெட் மட்டை, அசல் பந்து, அசல் கிரிக்கெட் ஷூக்கள் தான் வேண்டும். குழந்தைகள் அங்கு விளையாடிவிட்டு வர ஒரு செட் உடைகள் போதாதே. வாங்கு இரண்டு மூன்று செட் உடைகள். இதற்கெல்லாம் எவ்வளவு ஆகும் செலவு? யாருக்கென்ன கவலை? பள்ளிக்கு வருமானம். பெற்றோர்களுக்கு குழந்தையை வீட்டில் கட்டி மேய்க்க முடியாது. பணம் போனாலும் பரவாயில்லை. வழக்கம்போல காலையில் எழுந்திருந்து கிளம்பு பள்ளிக்கு என்று துரத்தி விட வேண்டியதுதான். திரும்பி வந்தவுடன் இன்னொரு வகுப்பு. மாலையில் இன்னொரு வகுப்பு.

இதைபோல சிந்திக்கும் ஒரு பெற்றோரின் நடவடிக்கை காரணமாகவே அந்தப் பையன் எங்கள் யோகா வகுப்பில் சேர்ந்திருப்பதும். அவனுக்கு சமமாக பேசவோ, அவனை உற்சாகப்படுத்தவோ யாரும் இல்லை எங்கள் வகுப்பில். பாவம் அந்தக் குழந்தை. அன்று ஒருநாள் நாங்கள் எங்கள் பயிற்சியாளர் சொல்படி செய்துகொண்டிருந்தோம். இந்தக் குழந்தை குறுக்கும் நெடுக்கும் போய்வந்து கொண்டிருந்தான். பொழுதுபோக வேண்டுமே? பயிற்சியாளர் எத்தனை சொல்லியும் அவனால் ஒரு சில நொடிகளுக்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. எப்படியோ வகுப்பு முடியும் நேரம். எங்கள் பயிற்சியாளர் எங்களை சவாசனத்தில் படுக்கச் சொன்னார். இந்தக் குழந்தை ‘மேடம், நான் பாடட்டுமா?’ என்றான். அவரது பதிலுக்குக் காத்திருக்காமல் ஹரிகாம்போதியில் ஸ்வரஜதி பாடுகிறேன் என்று ஆரம்பித்துவிட்டான். நாங்களும் சவாசனத்தில் இருந்தபடியே கேட்டு ரசித்தோம். அதுமுடிந்தும் நாங்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. என்ன செய்வான் குழந்தை? எங்களை மகிழ்விக்க கல்யாணியில் இன்னொரு பாட்டு.

குழந்தைகளை நம்மால் ஏன் கட்டி மேய்க்க முடியவில்லை? அவர்கள் என்ன ஆடுமாடுகளா. கட்டி மேய்க்க? முதலில் அவர்களைக் குழந்தைகளாகப் பார்ப்போம். அவர்களிடம் இருக்கும் அபரிமிதமான சக்திக்கு சரியான வடிகால்கள் நம்மால் கொடுக்க முடிவதில்லை. அன்றைக்கு ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருக்கும். ஒருவருக்கொருவர் விளையாடிக் கொள்வார்கள். பொழுது போய்விடும். சாயங்காலம் வீதியில் போய் விளையாடுவார்கள் – கோலி, பம்பரம், கிட்டுபுள் என்று. அப்போது கிரிக்கெட் இத்தனை பிரபலமாகவில்லை. அதனால் கிட்டுபுள்ளால் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

சம்மர் கேம்பில் குழந்தைகள் நிறையக் கற்கிறார்கள், உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கும் பெற்றோர்களுக்கு: சரி, அனுப்புங்கள். ஆனால் நாள் முழுவதும் குழந்தையை வெளியில் இருக்கும்படி செய்யாதீர்கள். வீடு என்பது குழந்தைளுக்கு நிச்சயம் தெரிய வேண்டிய இடம். நீங்கள் கைநிறைய சம்பாதித்து வீடு வாங்கியிருப்பதற்கு குழந்தைகள் சந்தோஷமாக அங்கு இருக்க வேண்டும் என்பதுதானே காரணம். விடுமுறையில் கூட வீட்டில் இல்லையென்றால் என்ன பொருள்?

பின் என்ன செய்யலாம், குழந்தைகளின் அபரிமிதமான சக்தியை எப்படி செலவழிக்க வைப்பது? வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்களா? அவர்களுடன் குழந்தைகளை பரமபதம், தாயக்கட்டை, பல்லாங்குழி முதலிய விளையாட்டுக்களை விளையாட விடுங்கள். நீங்களே இவைகளை விளையாடலாம். தாத்தாக்கள் ஆடு புலி ஆட்டம் நன்றாக ஆடுவார்கள். செஸ், கேரம் முதலிய ஆட்டங்களைக் கற்றுக்கொடுங்கள். ஒரு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். (இதற்குத்தானே சம்மர் கேம்ப் என்கிறீர்களா?) தாத்தா பாட்டியிடமிருந்து தமிழ் அல்லது வேறு மொழி கற்கலாமே!

சம்மர் கேம்ப் என்பது இன்னொரு பள்ளிக்கூடம். சும்மா ஜாலியாக போய்விட்டு வரமுடியுமா? அப்படி போய்விட்டு வந்தால் நீங்கள்தான் சும்மா இருப்பீர்களா? இத்தனை செலவழித்து உன்னை அனுப்புகிறேன், நீ என்ன கற்றுக்கொண்டு வந்தாய் என்று கேட்பீர்களே! இந்த மாதிரி சம்மர் கேம்ப் குழந்தைகளுக்குத் தரும் மன அழுத்தம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? குழந்தையிலிருந்தே இந்த மன அழுத்தம் குழந்தைகளுக்கு வேண்டாம்.

DSCN0078

வீட்டு வேலைகளில் குழந்தைகளை பழக்குங்கள். படுக்கையை சரி செய்யலாம். அம்மாதான் வந்து செய்ய வேண்டுமா? அவர்களது புத்தகங்கள், விளையாட்டு சாமான்களை அழகாக அடுக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு காலை வேளைகளில் பலவிதமாக உதவலாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து, காய்கறிகளை எடுத்துக் கொடுத்தல், அவைகளை அலம்புதல் போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில் தோட்டம் இருக்கிறதா? செடிகளுக்கு நீர் விடச் சொல்லுங்கள். வாங்கி வரும் காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக பிரித்து வைக்கச் சொல்லலாம்.

சைக்கிள் விடப் பழக்கலாம். வெளியூரிலிருக்கும் தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதச் சொல்லலாம். பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் செய்யச் சொல்லலாம். சின்ன சின்னத் துணிமணிகளை மடித்து வைக்கலாம். வெளியில் போகவேண்டுமா? என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியல் போடச் சொல்லுங்கள். மருத்துவரிடம் போகிறீர்களா? அவரிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியல் போடச் சொல்லுங்கள். ஏதாவது சின்ன சின்ன யோசனை கொடுத்து அதை கதையாக எழுதச் சொல்லுங்கள். பத்துவரிகள் போதும். பட்டன் தைப்பது, சின்ன சின்ன தையல் வேலைகள் என்று கற்றுக் கொடுக்கலாம். பிற்காலத்தில் வெளிநாடுகளுக்குப் போகும்போது இந்தத் தையல் வேலை எவ்வளவு பயன்படும், தெரியுமா?

தாத்தா பாட்டிகள் வெளியூரில் இருந்தால் அந்த ஊருக்கு அனுப்புங்கள், குழந்தைகளை. பெற்றோர்களின் கண்டிப்பான வளர்ப்பிலிருந்து கொஞ்சநாட்கள் விடுதலை கிடைக்கும். குழந்தைகளுக்கு அவர்களின் கொஞ்சல் குலாவல் எல்லாம் கிடைப்பதுடன், உறவுகள் பலப்படும். அன்பான மனிதர்களின் அண்மை குழந்தைகளுக்கு அவசியம் தேவை.

அடுத்த வாரம் சந்திக்கலாம்!

Advertisements

16 thoughts on “தேவையா இந்த சம்மர் கேம்ப்?”

 1. நீங்கள் சொல்லும் யோசனைகள் அனைத்தும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல, நமக்கும் சந்தோசம் தான்…

  ஆனால் இன்றைக்கு தாத்தா பாட்டி – முதியோர் இல்லம் – ? – சுயநலம் ? – காலத்தின் கொடுமை…

  1. வாங்க தனபாலன்!
   காலத்தின் கொடுமையை அப்பா அம்மாக்கள் மனது வைத்தால் நிச்சயம் மாற்றலாம். அப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற ஆசையில் தான் இதை எழுதினேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 3. அருமையான பதிவு ரஞ்சனி உண்மைதான் சம்மர்கேம்ப் என்ற பெயரில் அவர்களுக்கும் தண்டனை நமக்கும் எங்கும் வெளியில் போக முடியாது. உறவுகளை தெரிந்து கொள்ள நல்ல அவகாசம் இந்த ஒரு மாதம் பயனுள்ள முறையில் பயன்படுத்தலாமே நீங்கள் கொடுத்திருக்கும் அத்தனையும் நல்ல ஐடியாக்கள் தான். ஆனால் பெற்றோர்களுக்கே இப்போது பொறுமையும் இல்லை நேரமும் இல்லை குழந்தைகளுடன் செலவழிக்க என்ன செய்வது அதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் சம்மர்கேம்ப் என்ற பெயரில் பணம் பண்ணூகிறார்கள் என்பது தான் நிதர்சனம். உங்களின் ஐடியாக்களுக்கு பாராட்டுக்கள்

  1. வாங்க பாண்டியன்!
   எனக்கும் ஒரொரு சமயம் நீங்கள் சொல்வதுபோலத் தான் தோன்றுகிறது, பாண்டியன்.
   வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 4. சம்மர் கேம்ப் கலாசாரம் என்று ஒழியுமோ தெரியவில்லை.. வகுப்புகளுக்கு கண்டிப்புடன் அனுப்பும் பெற்றோர்கள் வீட்டு வேலைகளை பழக்ககண்டிப்பு காட்டுவதில்லை.
  நல்ல கட்டுரை

  1. வாங்க முரளி!
   நீங்களும் ஒரு ஆசிரியர் ஆதலால் உங்கள் கருத்துக்கள் இங்கே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. பாவம் குழந்தைகளை இப்போதெல்லாம் சுதந்திரமாக விளையாடவிடுவதில்லை பலரும், சம்மர் கேம்ப், பாட்டுக்கிளாஸ், டியுசன், நீச்சல், என்று பலவற்றை திணித்து அதனுடைய சுதந்திரத்தை விளையாட்டுப்பருவத்தை சிதைக்கிறார்கள்! இதை மிக அழகாக சொன்னது இந்த கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s