சினிமா, சினிமா நேர்காணல்

புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் : நடிகர் ஷாம் சிறப்பு பேட்டி

சிறப்பு நேர்காணல்

ஜான்

DSC_0149
பூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் ‘ரேஸ் குர்ரம்’ ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வெற்றி செய்திகளின் கதகதப்பிலிருக்கும் ஷாமுடன் பேசியபோது.
தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது?
” தெலுங்கில் என்னை ‘கிக்’ படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர்.அந்த’கிக்’ படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான ‘ஊசுற வல்லி’ படத்தில் எனக்கு ஒரு சிறு ரோல் கொடுத்திருந்தார். அது என் மேல் வைத்துள்ள அன்புக்காகக் கொடுத்த வாய்ப்பு. அடுத்து அவர் கொடுத்த அர்த்தமுள்ள வாய்ப்புதான் ‘ரேஸ் குர்ரம்’. அப்படி என்றால் வேகமாக ஓடும் குதிரை என்று அர்த்தம். இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகம்’ எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. “.
அந்தப் படம் பற்றி..?
”இது அண்ணன் தம்பி பற்றிய கதைதான். நான் அண்ணன். என் தம்பியாக அல்லு அர்ஜுன் நடித்திருப்பார். ஏற்கெனவே ‘கிக்‘ படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்த நான், இதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்திருக்கிறேன். இப்படி இரண்டு பேர் நடிக்கும் போது இருவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்படி கதாபாத்திரங்கள் உருவாக்குவதில் சுரேந்தர் ரெட்டி திறமைசாலி.
இதில் நாங்கள் அண்ணன் தம்பிகள் என்றாலும் படத்தின் முதல் பாதியில் எங்கள் உறவு அக்னி நட்சத்திரம் போல் சுட்டெரிக்கும். ஆம், நாங்கள் இருவரும் நேரெதிராக இருப்போம் மறுபாதியில்தான் எங்களுக்குள் இருக்கும் பாச வுணர்வு வெளிப்படும்.
திரைக்கதையை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கமர்ஷியலாகவும் சுரேந்தர் உருவாக்கி யிருப்பார். அதற்கான பலனாக படம் வெற்றி பெற்றிருக்கிறது. படத்தில் எனக்கு ஜோடி தலோனி. அல்லு அர்ஜுனுக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார். அண்ணன் தம்பி கதையில் இப்படி வித்தியாசமாக காட்ட முடியுமா என்று எல்லாரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் டைரக்டர். ”
பொதுவாக தெலுங்கு திரையுலக அனுபவம் எப்படி உள்ளது?
”தெலுங்கில் எனக்கு இது 3 வது படம். இரண்டாவது ஹிட் படம். அங்கு தமிழ் நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதற்கான அடித்தளம் கமல்சார், விக்ரம்சார் ஆகியோரால் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள பாதையில் என்னைப் போன்றவர்கள் சுலபமாக நடக்க முடிகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் பாணி அங்கும் தொடங்கியுள்ளது. இது ஆரோக்யமான அறிகுறி. ரவி தேஜாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி இணைந்து நடித்த போது ஈகோ பார்க்காமல் பேசிப் பழகி அன்பு காட்டினார்கள்.’’
தமிழில் கூட ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளீர்களே?
”ஆம். ‘புறம் போக்கு’ படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் ‘இயற்கை‘. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் ‘புறம்போக்கு‘. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ”
புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?
”புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே ‘மெக்காலே; சட்டத்தின் ஆட்சி ‘என்று வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி. சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண் தான் எனக்கு ஜோடி.  போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இதுவழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும். நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர்தொடர்பில் இருப்பவர் .படத்தில் எங்கள் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக் கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி,செய்வதே சரி என்று இருப்பவர்கள் ”

உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?
”மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.”

IMG_6408
ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?
‘உள்ளம் கேட்குமே’ படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன்.
ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. ‘மதராசபட்டினம்’ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ‘ராஜாராணி’ என அவனது வளர்ச்சிகள்,வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பலவருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை ‘பீட்சா’ ‘சூதுகவ்வும்’ படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது
.’புறம்போக்கில்’ ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானது. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்.”
‘6 மெழுகு வர்த்திகள்’ படத்தில் நடித்ததில் உழைப்புக் கேற்ற பலன் கிடைத்ததா?
”சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. ‘6’ படத்துக்கு முன் என்னைப்பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப் படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது. பலவிதங்களில் திறமைகாட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை’6′ படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. முன்பெல்லாம் கண்ணில் படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது. ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று ‘6’ படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிகரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.”
சொந்தமாக ‘6’ படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?
”படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்க வில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.”
சரியான வாய்ப்புகள் அமையாத போது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி…?
”அப்படி ஒரு சூழல் வரும் போது நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாத போது நம்மை நாமே நிரூபித்துதான் ஆகவேண்டும்.”
மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா?
”தேவைப் பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம் கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.”
சிசிஎல். கிரிக் கெட்டில் ஆடிய அனுபவம்.. பற்றி?
உண்மையிலேயே சிசி எல்லால் பல நன்மைகள் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. விஷால், ஸ்ரீகாந்த், பரத், விக்ராந்த், விஷ்ணு, ரமணா எல்லாரும் நல்ல நண்பர்களாகி இருக்கிறார்கள். தமிழ்மொழி கடந்து சுதீப் அண்ணன், வெங்கடேஷ்அண்ணன், தருண் மட்டுமல்ல சலமான்கான் நட்பும் எனக்கு கிடைத்துள்ளது. சினிமா.
நடிகர்களை தமிழ்மொழி கடந்து தென்னிந்தியா கடந்து இந்திய அளவில் ஒருங்கிணைத்துள்ளது சிசி.எல். அண்மையில் வட இந்தியாவில் ராஞ்சியில் போய் ஆடியது மறக்க முடியாது. ”
இயற்கை 2, கிக். 2. எடுக்கப் படவுள்ளதாமே?
”எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம்’இயற்கை 2 ம் பாகம்’.. மட்டுமல்ல ‘கிக். 2’ ம்பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.”
நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?
”இது ஸ்கிரிட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். ”
எது உங்களுக்கான இடம்?
”யார் யார் எங்கே எப்போது இருப்பது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. காலம்தான் முடிவு செய்யும். ஆனால் காலத்தின் மீது பழிபோட்டு விட்டு சும்மா இருக்கக் கூடாது. நம் கடமையை, முயற்சியை, முன்னோக்கி வைக்கும் அடியை, சிறப்பாகச் செய்ய முடிந்ததை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலன் நிச்சயம் உண்டு.எனக்கான இடம் எது என்பது பற்றி ஆராய்ச்சி செய்து யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. அது வேண்டாத வேலை.இப்போது தேவை உழைப்பு,உற்சாகம், ஊக்கம், ஓட்டம்” தெளிவாகச் சொல்கிறார் ஷாம்.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.