நோய்நாடி நோய்முதல் நாடி – 43
ரஞ்சனி நாராயணன்

என் பிள்ளை தும்கூரில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒருமுறை அங்கு போயிருந்தேன். நான் அன்று காலையில் தும்கூர் போவதற்குள் அவன் கல்லூரிக்குப் போய்விட்டான். மதியம் அவன் வரும்போது அவனக்குப் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட், தக்காளி ரசம் செய்துகொண்டிருந்தேன். வீட்டிற்குள் வந்தவன், இரண்டிரண்டு படிகளாக தாண்டி தாண்டி மாடியேறுவதைக் கண்ட வீட்டு சொந்தக்காரர் கேட்டார்: ‘என்ன மாதவா! அம்மாவின் வருகையா, இல்லை அம்மாவின் கைசாப்பாடா எது உன்னை இப்படி ஓட வைக்கிறது?’
‘இரண்டும் அங்கிள்…!’ என்றான் அவன். உண்மையில் இரண்டும் அல்ல; அவனது மூக்கு தான் ரோஸ்ட் வாசனையை மோப்பம் பிடித்து அவனை ஓடி வரச் செய்திருக்கிறது.
இப்போது புரிந்திருக்கும், நாம் இந்த வாரம் எதைப்பற்றிப் பேசப்போகிறோம், என்று. கிளி மூக்கு கருட மூக்கு, வளைந்த மூக்கு, தொண்ணை மூக்கு, கூர் மூக்கு, அகல மூக்கு, சப்பை மூக்கு (ஸ்ஸ்ஸ்ஸ்…..அப்பாடா…!) என்று எந்த வடிவத்தில் இருந்தாலும் வாசனையைப் பிடிப்பதில் மூக்குதான் முன்னால் நிற்கிறது. நமது முகத்திற்கு அழகூட்டுவதும் இந்த மூக்குதான். வாசனையை நுகர்வது மட்டுமல்ல; நாம் சுவாசிப்பதற்கும் கூட மூக்கு அவசியம். நமது மூக்கின் அமைப்பை பார்ப்போம்:
நமது மூக்கில் இருக்கும் நாசித் துவாரங்கள் இரண்டையும், நாசிப் பாதையையும் செப்டம் எனப்படும் நாசிச் சுவர் பிரிக்கிறது. இந்த நாசிச் சுவர் மூக்கின் உட்புறம், நமது மண்டையோட்டை ஒட்டி இருக்கும் இடத்தில் மெல்லிய எலும்புகளாலும், மூக்கின் நுனியில் குருத்தெலும்பினாலும் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குருத்தெலும்பு நெகிழ்தன்மை உடையதாகவும், சருமம் மற்றும் தசையை விட அழுத்தமானதாகவும் இருக்கிறது. நமது மூக்கின் பின்புறம், அதாவது நமது முகத்தின் நடுவில் இருக்கும் இடம் நாசி அறை எனப்படுகிறது. இது நமது தொண்டையின் பின்புறத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாசி அறை உட்புற வாயிலிருந்து வாயின் மேல்கூரையால் (அண்ணம்) பிரிக்கப்பட்டிருக்கிறது.
நாம் சுவாசிக்கும் காற்றானது நாசிப் பாதை வழியாக நாசி அறையை அடைகிறது. அங்கிருந்து நமது தொண்டையின் பின்புற வழியாக மூச்சுக் குழலுக்குள் நுழைந்து பின் நுரையீரலை அடைகிறது. ஒரே ஒரு மூக்கு எதற்கு இரண்டு நாசித்துவாரங்கள்? வெறும் வாசனை நுகர்விற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமென்றால் ஒரு நாசித்துவாரம் போதுமே? சாப்பிடுவதற்கு ஒரு வாய் தானே இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், நாம் எப்படி வாசனையை நுகர்கிறோம் என்று பார்ப்போம். நுகர்வு என்பது நமது மூக்கிலிருக்கும் வாசனை உணரும் நரம்புகளுக்கும், நுகரப்படும் பொருட்களிலிருந்து வரும் வாசனையை உண்டு பண்ணக்கூடிய வேதிய பொருட்களுக்கும் இடையில் நடைபெறும் ஒரு இரசாயன மாற்றம். ஒரு பொருளிலிருந்து எந்தவிதமான வாசனையும் இல்லையென்றால் அந்தப் பொருளில் நமது மூக்கிலிருக்கும் வாசனை நரம்புகளைத் தூண்டக்கூடிய இரசாயனக் கலவை இல்லை என்றே சொல்லலாம்.
நுகர்வு என்பது ஒரு இரசாயன மாற்றம் என்றான பின், இரசாயன மாற்றங்களும் ஒரு பொருளிலிருக்கும் மூலக் கூறுகளைப் பொறுத்து, அவற்றிலிருந்து வரும் வாசனைகளும் மாறுபடும். சில வாசனைகள் ரொம்பவும் பலமாகவும், சில வாசனைகள் பலவீனமாகவும் இருக்கின்றன. பலமான வாசனைகள் சட்டென்று நமது மூளைக்குச் செல்லுகின்றன. ஆனால் பலவீனமான வாசனைகள் நிதானமாகவே இரசாயன மாற்றம் பெறுகின்றன. அவைகளை நுகருவதற்கும் நமது மூக்கிற்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. இங்கு தான் இரண்டு நாசித்துவாரங்கள் நமக்கு உதவுகின்றன.
பல பரிசோதனைகளால் நமக்கு ஒரு நாசித்துவாரம் பலமாகவும், இன்னொன்று அத்தனை பலமானதாக இல்லாததாகவும் இருக்கிறது தெரிய வந்திருக்கிறது. எந்த பக்கத்து நாசித் துவாரம் பலமாக இருக்கும், எந்த ஒன்று பலவீனமாக இருக்கும் என்பதும் மாறிக்கொண்டே இருக்கும் விஷயம். பலமாக இருக்கும் நாசித் துவாரம் நம் உடலுக்குத் தேவைப்படும் சக்தியை கொடுக்கும் அளவிற்கு காற்றை உள்ளிழுத்துக் கொள்ளுகிறது. அதேபோல விரைவாக இரசாயன மாற்றம் அடையும் வாசனைகளையும் அடையாளம் கண்டுகொல்லுகிறது. இன்னொன்று மெதுவாக காற்றை உள்ளிழுத்து, மெல்லிய வாசனைகளை நம் மூளை உணர்ந்து கொள்ள உதவுகிறது.
இரண்டு கண்களால் பார்ப்பதால் பொருட்கள் தெளிவாக, எத்தனை தூரத்தில் எந்த அளவில் (பெரியது, சின்னது) எந்தத் தன்மையில் (கெட்டியானதா, திரவமா) என்பதெல்லாம் தெரிவது போல இரண்டு நாசித்துவாரங்களினால் வாசனையை இன்னும் சிறப்பாக உணர முடியும்.
மனித மூக்கு மற்ற விலங்கினங்களின் மூக்குகளைவிட பலம் குறைந்து இருப்பினும், ஒரே ஒரு நாசித்துவாரம் இருப்பதை விட இரண்டாக இருப்பதால் நமக்கு பல நன்மைகளைக் கொடுக்கிறது என்றே சொல்லவேண்டும்.
நமது மூக்கு இரண்டுவழிப் பாதை. காற்றை உள்ளிழுத்துக் கொள்வது மட்டுமின்றி, அசுத்த காற்று வெளியாகும் வழியாகவும் இது வேலை செய்கிறது. நமது மூக்கின் உட்புறத்தில் மெல்லிய சளிச்சவ்வு சற்று ஈரப்பசையுடன் அமைந்திருக்கின்றது. உள்ளே இழுக்கப்படும் காற்றை சற்ற சூடாக்கி அதை ஈரப்பசையுள்ளதாக இந்த சளிச்சவ்வு மாற்றுகிறது. உள்ளே வரும் காற்றில் இருக்கும், தூசி, கிருமிகள், இன்னும் பல நுண்ணிய பொருட்களை வடிகட்டுவதும் இந்த சவ்வு தான். மூக்கினுள்ளே இருக்கும் நுண்ணிய மயிரிழைகள் சற்று பெரிய தூசிகள் மூக்கினுள் போகாமல் காக்கின்றன.
அப்படியும் ஏதாவது மூக்கினுள் நுழைந்துவிட்டால் உடனே வருவது தும்மல்! நமது மூக்கினுள் நுழைந்துவிட்ட அந்நியனை மணிக்கு சுமார் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வெளித்தள்ளுகிறது இந்தத் தும்மல்!
எப்படி கண்கள் நாம் காணும் காட்சியின் மூலமும், காதுகள் நாம் கேட்கும் ஒலிகள் மூலமும் நமது சுற்றுப்புறத்தை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றனவோ, அதேபோல நமது மூக்கு வாசனையின் மூலம் நமது சுற்றுப்புறத்தை நாம் அறிய உதவுகிறது. இதற்கு உதவி செய்பவை நாசி அறையில் இருக்கும் சிறப்பு வாசனை வாங்கிகள். சுமார் 10 மில்லியன் வாசனை வாங்கிகள் நம் மூக்கிற்குள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான வாசனை அறியவும் நூற்றுக்கணக்கான வாசனை வாங்கிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வாசனையும் பல வேறு வேறு வகையான வாசனை வாங்கிகளை தூண்டுகிறது. நமது மூளை இவைகளை அலசி ஆராய்ந்து 10,000 வகையான வாசனைகளை அறிகிறது.
அடுத்த வாரம்…..மேலும் நுகருவோம்!
தக்காளி ரசத்தின் வாசனை ஹைதிராபாத் வரை வந்து மூக்கைத் துளைப்பது என்னவோ உண்மைதான் ஜமாயுங்கள் ரஞ்சனி நாங்களும் உங்களுடன் நுகர தயாராகி விட்டோம் என்பதுதான் நிஜம்.
தலைப்பைப் பார்த்ததும் நான. ஏதோ சமயல் குறிப்பென்று நினைத்துவிட்டேன். ‘வாசனை’யான பதிவென்று இப்போதுதான் தெரிந்தது. மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் பழக்கம் எப்படி வந்தது என்கிற கேள்விக்கும் நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்