செல்வ களஞ்சியமே – 65
ரஞ்சனி நாராயணன்

‘நீ ரொம்ப நல்ல குழந்தை.. சாப்பிடும்மா…’
‘இல்ல….நான் நல்ல குழந்தை இல்ல….!’
நாம் ஒரு குழந்தையை இப்படி ‘புகழும்’ போது அந்தக் குழந்தை அதை ஏற்க ஏன் மறுக்கிறது. ஏன் நான் நல்ல குழந்தை இல்லை என்று சொல்லுகிறது?
இதற்கு பதில் இரண்டு விதங்களில் சொல்லலாம்.
ஒன்று: நீ சொன்னபடி கேட்டு, உன்விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு நான் நல்ல குழந்தையாக இருக்க விரும்பவில்லை….’
இரண்டாவது: யாரவது புகழ்ந்தால் அதை ஏற்றுக் கொள்வது என்பது பெரியவர்களுக்கே சிலசமயங்களில் கடினம். குழந்தைகளுக்குப் புரிகிறதோ, இல்லையோ, நம் விருப்பத்தை சொல்லி அதை புகழ்வது தான் பெற்றோர்களின் பலவீனம்.
நாம் எப்படிக் குழந்தைகளைப் ‘புகழ்கிறோம்’ என்று சில உதாரணங்களைப் பார்ப்போம்:
‘நம்ம வீட்டுல நீதாண்டா பிஸ்தா….!’ (வேறு யாரும் அந்த இடத்திற்கு வராமல் பார்த்துக்கொள்)
‘அருமையான வேலை!’ (எல்லா வேலையையும் இதேபோல செய்)
‘எனக்கு உன்னை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு!’ (பெருமை எனக்கு!)
‘உன்னைப் போல குழந்தை எனக்கு கிடைத்தது ரொம்ப பெருமை!’ (உனக்கு என்னைப்போல அம்மா/அப்பா கிடைத்தது உனக்கும் பெருமையாக இருக்கவேண்டும்!)
‘அந்தக் கவிதையை நீ வாசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!’ (இதேபோல எப்பவும் வாசி)
‘வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சுட்டேன்னா, நீ விளையாடலாம். அம்மாவுக்கு அதுதான் பிடிக்கும்!’ (அம்மாவுக்குப் பிடித்ததை மட்டுமே நீ செய்ய வேண்டும்!)
இந்தப் புகழ்ச்சிகள் எல்லாமே உங்களை முன்னிட்டு உங்கள் தேவைகேற்ப உங்கள் விருப்பத்தையும் சேர்த்து சொல்லப்படும் வார்த்தைகள். நம்ம வீட்டு பிஸ்தா எனும்போது, அந்த பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள் என்ற பொருளும் அதனுள் இருக்கிறது, இல்லையா? நான் பெருமைப்படும்படி இனியும் நடந்துகொள். உங்களின் ஒப்புதல் குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் தேவை என்பதுபோல இருக்கின்றன, இந்தப் புகழுரைகள். குழந்தையின் சாதனையை புகழ்வது முக்கியம், இல்லையா? அதைவிட்டுவிட்டு, ‘நான் பெருமைப்படும்படி நடந்துகொள்’ என்பதுதான் நமது புகழ்ச்சியின் பின்னால் இருப்பது.
இப்படிச் செய்வதால் என்ன நடக்கிறது?
- ஒவ்வொரு செயலுக்கும் உங்களின் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறது, குழந்தை.
- நீங்கள் ஒன்றும் சொல்லாத போது குழந்தைக்கு மனதுக்குள் ‘என்ன, அம்மாவின்/அப்பாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லையா? ஏதாவது தவறு செய்துவிட்டோமா?’ என்றெல்லாம் எண்ணங்கள் ஓடுகின்றன.
- உங்களது புகழுரையைக் கேட்டு அதேபோல மற்றவரும் தன்னைப் புகழ வேண்டுமென்று நினைக்கிறது.
- தொடர்ந்த புகழுரை மட்டுமே, அடுத்த வேலையை குழந்தை செய்ய உந்துதலாக இருக்கிறது.
- ஒவ்வொரு வேலை செய்யும்போதும், இது அம்மா/அப்பாவிற்குப் பிடிக்குமா?
- மிதமிஞ்சிய புகழ்ச்சி, குழந்தைகளை தாங்களாகவே ஒரு வேலையை எடுத்துச் செய்ய வைப்பதில்லை என்கிறார்கள், மனவியலாளர்கள்.
- தங்களுக்கு வசதியாக தங்களின் அனுகூலமான நிலையிலேயே எல்லா வேலையையும் செய்கிறார்கள். துணிந்து எதையும் செய்ய முன்வருவதில்லை.
என்னதான் சொல்ல வரீங்க? குழந்தைகளை புகழலாமா, புகழக் கூடாதா? தெளிவாச் சொல்லுங்க என்று நீங்கள் கேட்பது எனக்குக் காதில் விழுகிறது. புகழலாம் அளவாக. உதாரணம் பார்க்கலாம்.
பிறந்தவுடன் எந்தக் குழந்தையும் நம்மிடமிருந்து புகழ்ச்சியை எதிர்பார்ப்பதில்லை. அதன் வளர்ச்சிகள் எல்லாம் தானாகவே நடக்கின்றன. நீங்கள் புகழ்ந்தவுடன் குழந்தை நீந்தத் தொடங்குகிறதா? ‘அடடா! என்னமா நீஞ்சற, தவழு’ என்றவுடன் தவழ ஆரம்பிக்கிறதா? இல்லையே. குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் மகிழ்கிறோம், கை தட்டுகிறோம். ஆனால் குழந்தை இதையெல்லாம் (அந்த நிலையில்) பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஒருவயதுக்குள், நீந்தி, தவழ்ந்து, எழுந்து நின்று, பலமுறை விழுந்து, எழுந்து நடக்கத் தொடங்குகிறது. பேசுவதற்கும் ஆரம்பிக்கிறது.
குழந்தை வளர வளரத்தான் இந்தப் புகழுரைகள் காதில் விழ ஆரம்பிக்கின்றன. தானாகவே எதையும் செய்துபார்க்கும் ஆர்வம் குறைய ஆரம்பிக்கிறது. அம்மாவையும், பிறரையும் திருப்தி படுத்தவேண்டும் என்று நினைக்கிறது. கிட்டத்தட்ட நாம்தான் குழந்தைகளை புகழ்ந்து புகழ்ந்து கெடுத்துவிடுகிறோம் என்று கூடச் சொல்லலாம். புகழ்ச்சியை ஏற்கும் அளவிற்கு தனது தோல்விகளை ஏற்றுக்கொள்ள குழந்தையைப் பழக்க வேண்டும்.
ஆனால் குழந்தையை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே, அதற்கு என்ன செய்வது? என்னமோ போங்க, இந்த வாரம் ரொம்ப குழப்புறீங்க!
இதில் குழப்பமே இல்லை. அளவுக்கு மீறிப் புகழாதீர்கள். அதேபோல ஒருமுறை ஒரு போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கியது குழந்தை என்று வைத்துக் கொள்வோம். ‘குட் ஜாப்! அடுத்தமுறை முதல் பரிசு வாங்கு’ என்று சொல்லாதீர்கள். இப்போது புரிந்ததா? உங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தையின் மேல் திணித்து அதனைப் புகழாதீர்கள். இன்னொன்று: உங்கள் குழந்தை ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்குகிறாள். அடுத்தமுறை நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்: தடுக்காதீர்கள். ‘உனக்கு ஓடத்தான் வரும். நீளம் தாண்டுதல் வராது’ என்று சொல்லாதீர்கள். எப்போதும் பரிசு ஒன்றே குறி என்றிருக்கக் கூடாது. குழந்தையின் முயற்சிகளைத் தடுக்காதீர்கள். அவர்கள் தங்களது எல்லையை அறிந்து கொள்ளட்டும், தாங்களாகவே விழுந்து எழுந்து. அதுதான் ஒரு குழந்தையை தைரியசாலி ஆக்கும். குழந்தையின் திறமைகளை ஒரு வட்டத்திற்குள் அடக்கப்பார்க்காதீர்கள்.
இந்த உலகம் மிகப்பரந்தது. பல்வேறு திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் குழந்தை தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்க்கட்டும். குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சின்ன வயதில் எல்லாமே சுலபமாகத் தெரியும். தனக்கு எதுவும் வராது என்பதை எந்தக் குழந்தையும் சுலபத்தில் ஏற்றுக்கொள்ளாது. அதேபோல நீளம் தாண்டுதலில் வெற்றி பெறாமல் காலில் காயம் பட்டுக் கொண்டு வந்தால், உடனே, ‘நான் சொன்னேன் பார்த்தாயா? உனக்கு வராது…’ என்று அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். எந்த சாதனையாளரும் விழாமல் எழுந்து நின்றதில்லை. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பல தோல்விகள் இருக்கின்றன. இதனை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் முதலில். பிறகு குழந்தைக்கும் உணர்த்துங்கள்.
அடுத்த வாரம்…
ம்ம். இதைச்செய்தால் நான் இதை உனக்கு இதைச் செய்வேன் என்கிற மனநிலை வளர்வது தவறு. ஆனாலும் நம் காரியத்தைக் குழந்தையிடம் சாதிக்க அந்தத் தவறைச் செய்கிறோம்.
வாங்க பாண்டியன்!
லஞ்சம் கொடுப்பது வீட்டிலேயே ஆரம்பித்துவிடுகிறது, இல்லையா? வீட்டிலேயே லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் நாட்டில் எப்படி ஒழிப்பது?
குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் நம் புகழுரை இருக்க வேண்டும். இதுதான் நான் சொல்ல விரும்புவது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
தனக்கு எதுவும் வராது என்பதை எந்தக் குழந்தையும் சுலபத்தில் ஏற்றுக்கொள்ளாது
அதுவே மிகப்பெரிய வரம் அல்லவா.. சரியான ஊக்குவிப்பும் வழிகாட்டுதலும் அளவான புகழ்ச்சியும் தூண்டுகோலாக அமையும் ..!