புத்தக சர்ச்சை
சென்ற வாரம் வளர்ச்சியின் நாயகர் என்று நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ். இதற்கு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர் என பல தரப்பட்டவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜோ டி குரூஸின் கருத்துக்காக ஆழி சூழ் உலகு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு நிறுத்தி வைத்திருப்பதாக, நாவலை வெளியிடுவதாக இருந்த நவயானா பதிப்பகம் அறிவித்திள்ளது. இது குறித்து பதிப்பகம் ‘‘மாற்று அரசியல் கருத்துகளை கொண்டது நவயானா பதிப்பகம். நல்ல வேளை ஜோ டி குரூஸின் அரசியல் நிலைப்பாடு புத்தகம் வெளிவரும் முன்பே தெரிந்தது. ஜோ டி குரூஸின் நிலைப்பாடு எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறது.
நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெண்ணிய எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான வ. கீதா, ‘‘எழுத்தாளர் ஜோ டி குரூஸ், நரேந்திர மோடியை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்ததை அறிந்து நான் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளானேன். அது அவருடைய அரசியல் நிலைப்பாடாக இருந்தாலும் நரேந்திர மோடியை ஆதரிக்கும் எவருடன் என்னை எந்த விதத்திலும் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. குஜராத்தில் 2002ல் நடந்த இனப்படுகொலைகளை மறந்துவிட முடியாது, அது மீண்டும் நிகழ விடவும் கூடாது. மீனவர்களின் வாழ்க்கையை சித்தரித்த அவருடைய நாவலை நான் மதிக்கிறேன். ஆனால் ஜோ டி குரூஸ் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் மூலம், ஆபத்தான கொடுங்கோலர்களிடமிருந்து பரிசு வாங்க நினைக்கிறார். அதனாலேயே என் மொழிபெயர்ப்பை கைவிட தீர்மானித்தேன்’’ என்று காட்டமாக சொல்கிறார் வ. கீதா.
இதுகுறித்து ஜோ டி குரூஸ், ‘‘ஒப்பந்தம் கையெழுத்தாகி நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் நேரத்தில் மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டதாக வந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. நான் ஏழைகளைப் பற்றி எழுதுவதால் நான் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நான் கடந்த 12 வருடங்களாக குஜராத்திற்கு சென்று வருகிறேன். மோடியின் நிர்வாகத் திறமையை நேரில் கண்டிருக்கிறேன் என்கிற முறையில் தான் மோடியை சிறந்த நிர்வாகியாகப் பார்க்கிறேன். நம் நாட்டிலுள்ள மனித வளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் நரேந்திர மோடி மட்டும்தான்’’ என்கிறார் ஜோ டி குரூஸ்.
‘அந்தக் கும்பல்’ சொல்வது என்ன என்றால், என் நிலைப்பாடே உன் நிலைப்பாடாக இருக்கும் வரை உன்னை ஆதரிப்போம். அடிப்படை வாதிகள்.