சீசன் சமையல்
காமாட்சி மகாலிங்கம்
ஓம வடாம்

ஓமம் போட்ட வடாமில்லை. ஓமப்பொடி அச்சு உபயோகித்துச் செய்யும் வடாமாதலால் இது ஓமப்பொடி வடாமென்ற பெயரைப் பெற்று விட்டது. பொரித்தாலும் அழகாக தட்டு கொள்ளாமல்ப் பரவி பூரித்துக் கொண்டு இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறது. எல்லோரும் விரும்பிக் கேட்கும் வடாம். எல்லாவகை சாதத்துடனும் பக்க பலமாக விரும்பிச் சாப்பிட உதவுகிறது. என்ன என்னால் இப்போது சற்றுச் செய்ய முடியவில்லை. அந்த வகையில் வடா கச்சேரி இது. உங்கள் சென்னை வெயிலில் ஒரு நாளிலேயே வடாம் பெரும்பாலும் காய்ந்து விடுகிறது. மளமளவென்று மாவு தயாரித்துச் செய்யுங்கள். போட்டோவில் காக்கை கொத்தி விடாமலிருக்க கருப்பு நிறம் கலந்த ஸ்க்கிப்பிங் ரோப், மேலே தொங்குகிறது.
இது நல்ல யுக்தியாகப் பட்டது. இது எனக்குப் புதிது. கருப்புத் துணியை உபயோகிப்பது வழக்கம். இப்போது ரோப்பும் ,இதுவும் அழகாக இருக்கிறது. பாலிதீன் ஷீட். பறக்காமலிருக்கக் கனமான வஸ்துக்கள். எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். வாருங்கள், வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கிலோ.
(அரிசியை ஊறவைத்து வடித்து, உலர்த்தி அரைத்த மாவானால் பின்னும் விசேஷம்.)
நல்ல ஜவ்வரிசி – கால் கிலோ
(சுலபமாக மாவை மெஷினில் அரைத்தால் வேலை எளிது. இரண்டு அரிசிகளையும் மெஷினில் கொடுத்து மெல்லிய மாவாக அரைத்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.)
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3
உப்புப் பொடி – 4 டீஸ்பூன்
செய்முறை:
பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மிக்க மென்மையாக மாவு போல உருத்தெரியாமல் அரைத்துக் கொள்ளவும். மாவை அளந்துக் கொள்ளவும். உதாரணத்துக்கு 4 பெரிய டம்ளர் மாவு என்று வைத்துக் கொள்வோம். ஒரு பங்கு மாவிற்கு அதே அளவையினால் மூன்று பங்கு தண்ணீர் வேண்டுமென்பது கணக்கு. ஆக 12 டம்ளர் தண்ணீர் வேண்டுமென்பதாகிறது. ஒரு டம்ளர் மாவுக்கு 3 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கு. நல்ல அடி கனமான பாத்திரம் என்றால் குக்கர் என்று ஆகிவிட்டது. பச்சை மிளகாய் அரைத்ததை அளந்து வைத்திருக்கும் தண்ணீரில் ஓரளவு எடுத்து அதில் கலந்து தண்ணீரை வடிக்கட்டி எடுக்கவும். டீ வடிக்கட்டி உபயோகிக்கவும். காரம் தண்ணீரில் இறங்க வேண்டும். இரண்டு முறையாவது நீரை சேர்த்து வடிக்கட்டவும். சக்கையை நீக்கிவிடவும்.
அடுப்பில் குக்கரில் அளந்து வைத்திருக்கும் தண்ணீரைக் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும். வடிக்கட்டிய மிளகாய்த் தண்ணீரில் ஒரு கரண்டி மாவைக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். தீயை கட்டுப்படுத்தவும். நன்றாகக் கிளறிவிடவும். சற்று கஞ்சி மாதிரி தண்ணீர் கொதிக்கும் போது, அதில் ஓரளவு தண்ணீரை எடுத்து வைக்கவும்.
காஸை சிம்மில் வைத்து விட்டு மாவைக் கொட்டிக் கிளறவும். நீண்ட கரண்டி உபயோகித்து நான்கு பக்கமுமாக அடியினின்றும் மேலும் கீழுமாக திருப்பிவிட்டு, மாவு இருகி வரும் வரைக் கிளறவும். எடுத்து வைத்திருக்கும் தண்ணீரையும் சேர்த்துக் கிளறவும். மாவு வெந்து விடும். ,தயாராக வைத்திருக்கும் வடிக்கட்டிய எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்துக் கிளறி காஸை
நிறுத்தி விடவும். மாவைத் தட்டினாலோ, குக்கர் மூடியினாலோ மூடி வைக்கவும்.
இதை முதல்நாள் இரவே தயாரித்து வைத்து விடலாம். மாவை ருசிபார்த்து உப்பு சரி செய்யவும். காலையில் வெயில் ஆரம்பிப்பதற்கு முன்னேயே பாலிதீன் ஷீட்டை ஈரத்துணியினால்
நன்றாகத் துடைத்து விடவும். ஒமப்பொடி வில்லையைக் குழலில் பொருத்தி வைக்கவும். கிளறி வைத்த மாவில் குழலின் அளவுக்கு முக்கால் பாகம் மாவை நிரப்பவும்.
மேல் பாகத்தினால் அழுத்திப் பிழியவும். சிறிய வில்லைகளாகப் பிழியவும். மாவு முடிந்ததும், திரும்பத்திரும்ப மாவை நிரப்பிப் பிழியவும். ஈரக்கையினால் மாவை திரட்டிப் போட்டால் கையில் மாவு ட்டாது வரும். ரிப்பன் அச்சு, முருக்கு அச்சு என நமக்குப் பிடித்த வில்லைகளைப் போட்டு விதவிதமான வகைகளில் வடாத்தைப் பிழியலாம். ஹிண்டாலியம் அச்சு உபயோகிக்கலாம். வடாம் இடுவது என்பது இதுதான். ஓமப்பொடி வடாம்களை திருப்பிப் போட்டும் காயவைக்க வேண்டும். நீண்ட வடாம்களை திருப்பி வைத்து காயவைக்கவும்.
நன்றாக இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து வடாம்களை எடுத்து காற்று புகாத டப்பாக்களில் சேமிக்கவும். இந்த வடாம் மாவு பச்சையாகக் கிளறியவுடன் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். காய்ந்தது, காயாதது என்று. வறுக்கும் அளவுக்கு வடாத்தைக் காப்பாற்ற வேண்டும். மாவுக்கு அவ்வளவு ருசி.
வளரும் பிள்ளைகள் அவ்வளவு விருப்பம் காட்டுவார்கள் வடாம் கலவையில் சின்ன அளவில் செய்து பாருங்கள். அவரவர்கள் விருப்பப் படி காரம், உப்பு, புளிப்பு அதிகரிக்கலாம். விவரம் நீண்டதே தவிர செய்முறை க்விக் க்விக்தான்!