காய்கறிகளின் வரலாறு – 21
நெல்லிக்காய்
பழம்பெரும் இலக்கியங்கள் பலவற்றில் நெல்லிக்காய் பாடல் பெற்றுள்ளது. காட்டு நெல்லி, அரு நெல்லி என இரண்டு வகையான நெல்லிக்காய்கள் உள்ளன. காட்டு நெல்லி சாப்பிடும்போது கசப்பு சுவையையும் சாப்பிட்டு முடித்தபிறகு இனிப்புச் சுவையையும் தரக்கூடியது. அருநெல்லி புளிப்புச் சுவையுடையது. காட்டு நெல்லிக்காய் மருத்துவ குணம் மிக்கதாக சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. நெல்லிக்காய் மலைப் பாங்கான பகுதிகளில் விலையக்கூடியது. ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் நெல்லி மரங்கள் வளரக்கூடியவை. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக காட்டு நெல்லிக்காய் விளைவிக்கப்படுகிறது. அருநெல்லி எனப்படும் நாட்டு நெல்லிக்காய் தனிப்பட்ட முறையில் வீட்டு மரமாகவே வளர்க்கப்படுகிறது.
சாப்பிட உகந்த நெல்லிக்காயை தேர்ந்தெடுப்பது எப்படி?
இரண்டு வகையான நெல்லிக்காயிலும் நன்கு வளர்ந்த காய்களே சாப்பிட உகந்தவை. நன்கு வளர்ந்த காட்டு நெல்லிக்காய் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாட்டு நெல்லியின் வளர்ந்த காயும் வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர் நிறைந்ததாக இருக்கும். இந்தக் காய் சமைக்காமலும் சமைத்தும் உண்ணக்கூடியவை. இரண்டு காய்களையும் பதப்படுத்தி ஊறுகாயாக பயன்படுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்
காட்டு நெல்லிக்காயி(100கி)ல் கார்போஹைட்ரேட் 10கி, புரதம் 0.9கி, நார்ச்சத்து 4.3கி, கொழுப்பு 0.6கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும் வைட்டமின் சி(46%), வைட்டமின் ஏ,வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்சியம்,இரும்பு, பொட்டாசியம், சோடியம்,மக்னீசியம் போன்ற தனிம சத்துக்களும் சிறிதளவில் உள்ளன.
நெல்லியில் ஒரு ரெசிபி…
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை:
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – இரண்டு
புளிப்பில்லாத தயிர் – ஒரு கிண்ணம்
மிளகாய் வற்றல் – ஒன்று
தேங்காய் துருவல் – இரண்டு மேஜைக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
பெருங்காயம் – துளி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக் காயை சிறிது வதக்கிக் கொண்டு மிளகாய் தேங்காய்,சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துத் தயிரில் கலக்கவும். இதில் பெருங்காயம், கடுகை தாளித்துக் கொட்டி கொத்தமல்லியைத் தூவவும். வெங்காயம் விரும்புவர்கள் சிறிது எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.