வெள்ளரிக்காய்
அணில்வரிக் கொடுக்காய் வாள் போழ்ந்தட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கை பிழிபிண்டம்
என்கிற புறநானூறு 246 4-6 பாடலில் அணில்வரிக் கொடுக்காய் எனக் குறிக்கப்படுகிறது வெள்ளரிக்காய். அணிலின் உடம்பின் இருக்கும் கோடுகளை போன்ற கோடுகள் இருப்பதால் இந்தக் காயை அணில்வரிக் கொடுக்காய் என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். இது நம் மண்ணிற்கே உரித்தான ஒரு நீர்க்காய். குளம்,ஏரிவற்றிக்கிடக்கிற வறண்ட ஏப்ரல், மே மாதங்களில் இது விளைந்து மக்களின் தாகம் தீர்க்கிறது. வணிகம் செய்ய வந்த கிரேக்க, ரோமானியர்கள் மூலமாக இங்கிருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு பயணமான வெள்ளரிக்காய், ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்க கண்டங்களுக்குச் சென்றது. இன்று வெள்ளரிக்காயை இந்தியர்களைவிட அதிகம் பயன்படுத்துவது அமொ¢க்கர்களும் ஐரோப்பியர்களும்தான்.
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்
சமைத்து உண்ண வேண்டிய அவசியம் இல்லாத இந்தக் காயில் (100கிராம் காயில்) 95.23 கிராம் தண்ணீர் சத்து உள்ளது. இதுதவிர, கார்போஹைட்ரேட் 3.63 கி, புரதம் 0.65 கி, நார்ச்சத்து 0.5 கி ,கொழுப்பு 0.11கி அளவில் அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,சோடியம், ஜின்க், மக்னீஷியம், ஃபுளோரைடு போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளன.
நல்ல வெள்ளரிக்காயைப் பார்த்து வாங்குவது எப்படி?
வெள்ளரிக்காயின் இருமுனைகளும் சுருங்கியிருந்தால் அந்தக் காய் பறித்து பல நாளாகியிருக்கும். இதனால் உள்ளே இருக்கும் சதைப்பற்று தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிருக்கும், உண்ண ஏற்றதாக இது இருக்காது. அதேபோல் தோலில் தடித்த புள்ளிகள் மேலே தோன்றியிருந்தாலும் வாங்கக்கூடாது. காயைக் கையில் எடுத்தால் கனமாகத் தெரியவேண்டும். அப்படிப்பட்ட காய்தான் சத்தும் நிறைந்து உண்ண ஏற்றதாக இருக்கும்.
வெள்ளரியில் ஒரு குளிர்ச்சியான ரெசிபி…
வெள்ளரி வெங்காய மோர்
தேவையானவை:
மோர் – 2 கிண்ணம்
துருவிய வெள்ளரி – அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் – 3
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரி, வெங்காயம், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் மோரை கலந்து ஒரு நிமிடம் மிக்ஸியில் அடித்து வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும்.