பண்டிகை சமையல்
காமாட்சி மகாலிங்கம்

இதுவரை நான் சர்க்கரை சேர்த்து பூரணம் செய்யும் போளிகளைத்தான் எழுதியிருக்கிறேன். இங்கு என் பெண் வீட்டில் வெல்லம் போட்ட போளி கேட்பதால் அவளையே வெல்லம் போட்டு தேங்காய்ப் பூரணம் செய்து இடுபோளி தயாரிக்கச் சொன்னேன். உடன் பாதாம் பருப்பையும் சேர்த்துச் செய்ததை படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயிற்று, தமிழ்ப் புத்தாண்டிற்கு இந்த வகைப் போளியையும் செய்து பாருங்கள். வெல்லத்தில் செய்வது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. கலர் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றுகிறதே தவிர போளி என்றால் வெல்லப்போளிதான் ஞாபகம் வரும். பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யும் வகையில், இது பாதாம் பருப்பு சேர்த்துச் செய்தது. அதனால் ருசியும் கூடுதலாக இருந்தது.
அவசியம் பாதாம் பருப்பு சேர்த்துத்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தேங்காயும் வெல்லமும் சேர்த்து தேங்காய்ப் போளியும் நல்ல ருசிதான். ஆக பயத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு என எல்லா பருப்புகளும் சேர்த்துப் போளி செய்யலாம். பழக்கம்தான் காரணம். நாம் இப்போது பாதாம் கலந்த தேங்காய்ப் போளி செய்கிறோம்.
வேண்டியவை:
நல்ல முற்றிய தேங்காய் – ஒன்று
பொடித்த பாகு வெல்லம் – 2 கப்
பாதாம் பருப்பு – 10
ஏலக்காய் – 4 பொடித்துக் கொள்ளவும்.
நல்ல கோதுமைமாவு – 2 கப்
மாவில் சேர்த்துப் பிசைய – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
போளியை ஒற்றி இட – அரிசி மாவு வேண்டிய அளவு
நெய்யோ, எண்ணெயோ போளி செய்ய – வேண்டிய அளவு
செய்முறை:
இரண்டு மூடி தேங்காயையும் மெல்லியதாகத் துருவிக் கொள்ளவும். பொடி செய்த வெல்லத்தை, ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்துச் சற்றுக் கொதிக்கவிட்டு, இறக்கி நன்றாக வடிக்கட்டவும். மண், சக்கைகள் இருந்தால் நீங்கி விடும்.
மிக்ஸியில் பாதாம் பருப்பைப் பொடிக்கவும். நன்றாகப் பொடியானபிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும். அவசியமானால், வடிக்கட்டிய வெல்லத் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்தெடுக்கவும். கோதுமை மாவில் எண்ணெய்,துளி உப்பு சேர்த்து, தண்ணீர் திட்டமாக விட்டு மென்மையாக பிசைந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து நன்றாக ஊறவிடவும்.
வடிக்கட்டிய வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் வைத்து நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும். சற்றுக் குருகியதும். அரைத்த தேங்காய்ப் பாதாம் கலவையைச் சேர்த்துக் கிளறவும். அடி பிடிக்காமல் நிதான தீயில் சுருளக் கிளறவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கிளறலாம். கெட்டியாகச் சேர்ந்து வரும்போது, ஒரு டேபிள் ஸ்பூன்,பொட்டுக் கடலைமாவோ,அல்லது கடலைமாவோ,தூவிக் கிளறினால் சீக்கிரமாக இறுகும். ஏலப்பொடி சேர்க்கவும். குங்குமப்பூ, ஜாதிக்காய்ப்பொடியும் சேர்க்கலாம். துளி பூரணத்தைத் தட்டில் போட்டு, ஈரக்கையினால் பூரணத்தைத் தொட்டால் கையில் ஒட்டாது. கையில் ஒட்டாத பதத்தில் பூரணத்தை தயாரிக்கவும். ஆறினவுடன் பூரணத்தை சற்று நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்தெடுத்தால் இடும் போது ஸரியாக இருக்கும்.
மற்றவை யாவும் இடுபோளி தயாரித்த மாதிரிதான். நம்முடைய நான்கு பெண்கள் தளத்தில் மார்ச் 31 ஆம் தேதி வெளியான கோதுமை மாவு இடுபோளி வகையில்தான். அதையும் படித்தால் அதன் தொடர்ச்சியாகவே தோன்றும். படித்துச் செய்யுங்கள்.
தமிழ்ப் புத்தாண்டு போளியுடன் கொண்டாடுங்கள்!
எனக்கு மிகவும் பிடித்த அயிட்டம் இது பெங்களூரில் இருக்கும் என் தோழி இதை செய்வதில் மிகவும் எக்ஸ்பர்ட் உங்களின் செய்முறையும் வெகு சுலபமாக உள்ளது. ஆந்திராவில் வந்த யுகாதிக்கு போனவாரம் பூர்ண்போளி இங்கு பிரபலம் நானும் செய்தேன் நன்றி அம்மா உங்களுக்கும் எங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும்
ஆசிகள்.உங்களுக்கு பிடித்த அயிட்டம் என்று குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தட்டும் போளியைவிட இடுவது சற்று வேலை அதிகமாகத் தோன்றினாலும், பழக்கத்தில் ஸகஜமாகிவிடும். புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. நானும் வருகிறேன், உங்கள் பதிவிற்கு. இன்னும் நான் நார்மல் நிலைக்குத் திரும்பவில்லை. அன்புடன்