நோய்நாடி நோய்முதல் நாடி – 41
ரஞ்சனி நாராயணன்

ஒருமுறை கடுமையான ஜலதோஷம். மூக்கிலிருந்து அருவி போல நீர்! ஜலதோஷம் என்ற காரணத்திற்காக எனது வகுப்புகளை ரத்து செய்யவும் முடியாது. என்ன செய்வது? வீட்டிலேயே மூக்கை ‘நன்றாக’ சிந்திவிட்டு போகலாம் என்று நினைத்தேன். இரண்டு முறை சிந்தியவுடன் குப் பென்று காதில் ஒரு சத்தம்! வலது காது அடைத்துக் கொண்டுவிட்டது. எப்படி வகுப்பு நடத்துவது? ஒரு யோசனை வந்தது. அதன்படி மாணவர்களை எனக்கு இடதுபுறம் (எல்லோரையும்!) அமரச் செய்தேன். ஏன் என்று கேட்டவர்களுக்கு எனது சோகக்கதையைச் சொன்னேன். வகுப்பு அன்று வழக்கத்தைவிட சிரிப்பும், கலகலப்புமாக நடந்து முடிந்தது. அது மட்டுமா? ரஞ்சனி மேடமிற்கு காது கேட்கவில்லை என்ற செய்தியும் எனது மாணவர்களால் BBC யில் இலவசமாக ஒலிபரப்பப் பட்டது!
சுமார் ஒருமாதம் ஆயிற்று இந்தக் காது அடைப்பு போக. ‘இதற்கெல்லாம் மருந்து கிடையாதும்மா; கொடுத்தாலும் எங்கு போடுவீர்கள். இந்த அடைப்பு மூக்கிற்கும், காதிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கிறது. மூக்கினுள் காற்று புகுந்திருக்கிறது. இதை எப்படி எடுக்க முடியும்? இனிமேலாவது உங்கள் உறுப்புகளின் மேல் கருணை வையுங்கள். கடவுள் கொடுத்திருக்கும் உறுப்புகளை சரிவர கையாளுங்கள்’. எனது ஈஎன்டி மருத்துவர் பாதி கோபம், பாதி கிண்டல் – மீதிக்கு ‘இவங்கெல்லாம் படிச்சவங்க…’ என்ற ஒரு பார்வையும் பார்த்தபடி என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்தால் என் பிள்ளை, ‘பாவம் அம்மா, வயதாகிவிட்டது. பழைய கார்களுக்கெல்லாம் ஒரொரு பாகமாகத் தேய்ந்து போகுமே, அதுபோல அம்மாவுக்கும். இப்போது காதில் ஆரம்பித்திருக்கிறது’ என்று கேலி செய்தான்.
அன்று உணர்ந்தேன் இந்த மூக்கு, காது, தொண்டை மூன்றும் ஆச்சர்யமானவிதத்தில் இணைக்கப்பட்டிருப்பதை. அதுமட்டுமல்ல; பார்க்கிறவர்களிடமெல்லாம் ‘மூக்கை சிந்தாதீர்கள் (காது அடைக்கும் அளவிற்கு) என்று இலவச அறிவுரை வேறு கொடுக்க ஆரம்பித்தேன்.
இந்த வாரத்திலிருந்து காது, மூக்கு, தொண்டை பற்றிய விழிப்புணர்வுப் பதிவுகள் வெளிவரும். அதற்கு இந்த முன்னுரை சரியாக இருக்கும் என்று தோன்றியது. நமது காதுகள், மூக்கு, தொண்டை இவையெல்லாம் ஒன்றுகொன்று இணைக்கப்பட்டவை. நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் இது. அதனால் தானே ஜலதோஷம் பிடித்தால் நாக்கிற்கு ருசி தெரிவதில்லை; மூக்கினால் வாசனையை உணர முடிந்தால்தான் நாக்கிற்கு ருசி தெரியும். காது சரியாகக் கேட்பதில்லை. தொண்டையிலே கீச் கீச்!
இவை மூன்றும் நமது உணர்வுப் புலன்கள் மட்டுமல்ல; நமது சமநிலைக்கும், நமது சுற்றுபுறத்தில் நாம் நம்மை நிலைநிறுத்திக் கொண்டு வாழவும் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பவை. காதால் கேட்பதைத் தான் நாம் பேசுகிறோம். காது கேட்காதவர்களுக்கு பேச்சு வருவதில்லை என்றால் இதுதான் காரணம். ஐம்புலன்களில் எந்த ஒரு புலன் சரியில்லை என்றாலும் நம் வாழ்வு கடினமாகிவிடுகிறது. எல்லா புலன்களும் ஒருங்கிணைந்து வேலை செய்தால் தான் இந்த மனித வாழ்க்கைக்கு ஒரு பொருள் கிடைக்கிறது, இல்லையா?
முதலில் காதுகளைப் பற்றிப் பார்ப்போம்.
பூனையின் கால் ஒலியிலிருந்து, யானையின் பிளிறல் வரை நமக்குக் கேட்பது இந்தக் காதுகளினால்தான். ஒலிகளை உள்வாங்கி அவற்றை ரகம் பிரித்து நமது மூளைக்கு அனுப்புவது இந்தக் காதுகள்தான். அடடா! என்ன ஒரு இனிமையான இசை, என்பதிலிருந்து ‘எங்களுக்கே வாக்களியுங்கள்’ என்று காது கிழியும் ஓசையுடன் வரும் வண்டியைப் பார்த்து ‘கையால் காதுகளைப் பொத்திக்கொள்’ என்று மூளை நமக்கு சொல்வது வரை இந்தக் காதுகளின் பயன்பாடுதான். (தேர்தல் சமயம், அதற்குத் தகுந்தாற்போல உதாரணம் சொல்ல வேண்டாமா?)
ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது;
அம்மா கூப்பிடுகிறாள்; கேட்காத மாதிரி உட்காந்திரு;
ஆம்புலன்ஸ் வருது; பாவம் யாருக்கு என்னவோ!
அரசுப் பேருந்து….சட்டென்று நடைபாதையில் ஏறு; இல்லையென்றால் பேருந்து உன் மேல் ஓடும்!
காலையில் எழுந்திருக்கும்போது பறவைகள் ஒலி..
‘பால்….’ பேய்ய்ப்பர்……! (ஓடிப் போய் எடு. முதலில் சுடச்சுட தலைப்பு செய்திகளைப் படி…)
கோவிலில் நுழைந்தவுடன் கோவில் மணி…’ஆஹா! நல்ல சகுனம்…அந்தப் பொண்ணு இன்னிக்கு நம்மள பார்த்துடுவா….!
உலகில் எத்தனை விதமான ஒலிகள் உண்டோ அத்தனை ஒலிகளையும் உள்வாங்கி அவற்றை இதுபோல பிரித்து அவைகளுக்கு மூளை தரும் கட்டளைகளை மற்ற உறுப்புகளின் துணையுடன் உடனுக்குடன் நிறைவேற்றி… எத்தனை வேலைகளைச் செய்கிறது இந்தக் காதுகள்! ஒளி இல்லாத உலகம் என்பதை நினைத்தே பார்க்கமுடியாது நம்மால்.
இவை மட்டுமல்ல; நமது உடலின் சமநிலையைக் காப்பது நமது காதுகள் தான். இதனால் தான் நாம் குனிந்தாலும் பின்பக்கமாக வளைந்தாலும், பக்கவாட்டில் சாய்ந்தாலும் நிலை தடுமாறாமல் எழுந்து நிற்கிறோம் இந்த காதுகளின் உள்ளே இருக்கும் திரவத்தினால்.
கடவுளின் படைப்பில் மனிதன் ஒரு அற்புதம். நமக்காகக் கடவுள் கொடுத்திருக்கும் அவயவங்களை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தி எத்தனை சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம்! ஆனால் நாம் செய்வது என்ன? காதுகளில் எப்போதும் ஒரு கைபேசியை வைத்துக்கொண்டு யாருடனோ பேசிக்கொண்டு, அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல்…. அல்லது காதுகளில் ஒலிவாங்கியை மாட்டிக் கொண்டு.. பாட்டு என்றால் உயிர் அவருக்கு அதனால் எப்போதும் பாட்டு கேட்டுக் கொண்டே நடப்பார்; சாலையை கடப்பார்; கார் ஓட்டுவார்; அட, இது என்னங்க, பெரிய விஷயம், இரு சக்கர வாகனமே ஓட்டுவார்! பின்னால் மனைவி, முன்னால் குழந்தை என்று உட்கார்ந்திருந்தாலும் அலைபேசியில் பேசிக்கொண்டே போவார். தன் உயிரைப் பற்றியும், மனைவி மக்களைப் பற்றியும் கவலையில்லை; அதேபோல சாலையில் செல்லுபவர்களின் உயிரைப்பற்றியும் கவலை இல்லாத மனிதன் இவர்! நம்மில் பலருக்கு இதுபோல ஒரு அலட்சியம். வேதனையாக இருக்கிறது இவர்களையெல்லாம் நினைத்தால்.
இப்படியெல்லாம் நமது காதுகளை துஷ்பிரயோகம் செய்வதால் எத்தனை தீமைகள் ஏற்படுகின்றன என்பதை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
அடுத்த வாரம் தொடர்ந்து கேட்போம்!
ஐம்புலன்களில் இது தானே முதன்மை… தீமைகளை அறிய தொடர்கிறேன்…
“தகுந்தாற்போல உதாரணம்” நன்றாக இருந்தது அம்மா…
வாங்க தனபாலன்,
வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி!
இந்த காது, மூக்கு, தொண்டை இவற்றின் உள்ளே இருக்கும் ரகசியம் எனக்கு தெரிந்தே ஆக வேண்டும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இதே போல மூக்கை சிந்தியதில் காது அடைத்து ஒரு வாரத்திற்கு காதில் ஒலி சரி வர கேட்காமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன் அம்மா அந்த சிதம்பர ரகசியத்தை அறிந்து கொள்ள 🙂
வாங்க மஹா!
எங்கே ரொம்ப நாட்களாகக் காணும்? முகநூலில் மூழ்கிவிட்டீர்களோ?
நானும் அப்படித்தான் ஒருமுறை அவஸ்தை பட்டேன், மஹா.
வாருங்கள் இருவருமாக அந்த சிதம்பர ரகசியத்தை அறிவோம்!
நன்றி!
மூக்கை ‘நன்றாக’ …… எனக்கு அந்த அபாஸ்டபி பிடித்தாருக்கிறது 😃😃
ஹா….ஹா…. வாங்க பாண்டியன்!
நன்றி!