சினிமா

இனம் படத்தின் இட்டுக்கட்டு கருத்துக்களுக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது? சீமான் கேள்வி

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த ‘இனம்’ படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
‘இனம்’ படம் தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்புப் படம். கொஞ்சமும் உண்மையற்ற விவரங்களோடு இப்படியொரு படம் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு இருக்கிறது. ஈழத்தில் கடைசியாக நிகழ்ந்த நிகழ்வுகளின் கொடூரங்கள் மறைக்கப்பட்டும், தவறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ள இனம் படத்தை எதிர்த்து தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தன‌. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு மதிப்பு கொடுத்து படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். அடுத்தடுத்தும் நடந்த போராட்டங்கள் அவர் மனதை முழுவதுமாக மாற்றி இப்போது எந்தத் திரையரங்கிலும் படத்தைத் திரையிடாதபடி நிறுத்துக் கொள்வதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. நாங்கள் செய்ததே சரி என்கிற வீண் பிடிவாதம் செய்யாமல், தமிழ் உணர்வாளர்களின் மனக்கொதிப்பைப் புரிந்துகொண்டவராகவும், படத்தினால் விளையக்கூடிய தவறுகளை உணர்ந்து கொண்டவ‌ராகவும் லிங்குசாமி எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது.
அதேநேரம் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இதேபோன்ற தவறான திணிப்புகளைப் படைப்பாக்க எவர் துணிந்தாலும் நாம் தமிழர் கட்சி அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கருத்துச் சுதந்திரம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டுமே தவிர, எதையும் திட்டமிட்டுச் சித்தரிப்பதாக இருக்கக் கூடாது. ஈழத்தில் நடந்த துயரங்கள் குறித்து நம்மவர்கள் எடுத்த ‘ஆணிவேர்’, ‘எல்லாளன்’, ‘தேன்கூடு’ ஆகிய படங்களுக்கு தணிக்கைக் கொடுக்க மறுக்கும் தணிக்கைத் துறை ‘இனம்‘ மாதிரியான தவறானத் திணிப்பு கொண்ட படங்களுக்கு எந்த விதத்தில் தணிக்கைக் கொடுத்தது? அண்ணன் புகழேந்தி தங்கராஜின் ‘காற்றுக்கென்ன வேலி’ படத்துக்கு தன்னாலான எல்லாவித தடைகளையும் உண்டாக்கிய தணிக்கைத் துறை இனம் படத்தின் இட்டுக்கட்டு கருத்துக்களுக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கியது? தேன்கூடு படத்தின் வடிவம் ஈழ தேசத்தின் வரைபடம் போல் இருப்பதை நீக்க வேண்டும் எனச் சொல்லும் தணிக்கைத் துறை ‘மல்லி’, ‘டெரரிஸ்ட்’ என சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் சந்தோஷ் சிவனின் ‘இனம்’ படத்துக்கு கொஞ்சமும் கவனம் காட்டாமல் தணிக்கை வழங்கி இருப்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது. இத்தகைய கேள்விகளை எழுப்பினால், கலைத்துறையை அரசியல் ஆக்கிரமிக்கிறதா என அதிபுத்திசாலியாக சிலர் குரல் எழுப்புகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக திரைத்துறைதான் அரசியலை ஆக்கிரமித்திருக்கிறது என்பதை இந்த ஆவேசக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலின் அற்புதத்தையும் அவலத்தையும் சுட்டிக்காட்டும் கருத்துச்சுதந்திர கருவியாக திரைப்படம்தான் காலாகாலத்துக்கும் பங்காற்றி வருகிறது.
படைப்புச் சுதந்திரத்தைக் காட்டிலும் இனத்தின் சுதந்திரம் முக்கியமானது என்பதை படைப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தின் துயரச் சுவடுகள் கொஞ்சமும் மறையாத நிலையில், அது குறித்துச் சொல்கிறோம் என்கிற பெயரில் தவறான இட்டுக்கட்டுகளைப் பரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடூரம். ஓர் தேசிய இனத்தின் விடுதலைக் கனவை விற்பனைக்குக் கொண்டுவருகிற வேலையை யாராக இருந்தாலும் தயவு செய்து கைவிடுங்கள். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் எம் இனத்தின் மீது பழி பரப்புகிற வேலையை இனியும் யாராவது செய்யத் துணிந்தால் அதற்கான பலனை அனுபவிக்கவும் தயாராக வேண்டியிருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.