ருசி
காமாட்சி மகாலிங்கம்

கோவைக்காய் என்றால் ஸ்லேட்டும், பலபமும் ஞாபகம் வருகிறது. ஸ்லேட்டைத் தேய்த்து அலம்ப, கோவை இலைகளைப் போட்டுத் தேய்த்துக் கரியுடனும் தேய்த்து அலம்புவோம். சமயத்தில் தகர ஸ்லேட்டாக் கூட இருந்து விடும். இலை பரிக்கும்போது காயும் பழமும் பச்சையும் சிவப்புமாகத் தொங்குவதைப் பார்க்க அழகாக இருக்கும். ’கோவைப்பழம் தன்னைக் கிளியே கொத்திநீ தின்னுகையில் ஆவலுடன்பார்த்தேன் கிளியே அருகினில் வந்திடுவாய்’ என்று பாடத் தோன்றும். கிராமங்களில், தானாக முளைத்துத் தழைத்துப் படரும் கொடியாகத்தான் அறிந்திருந்தோம். அதுவே மகத்தான உடல் நலம் கொடுக்கும் ஒரு காயெனத் தெரியாததுதான் உண்மை. ஆந்திராவில் வசிக்க நேர்ந்த ஒருவர் இதைச் சமைக்கலாம் என்று சொல்லியபோது கூட அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன். பிற்பாடு வெகு காலத்திற்குப் பிறகு ஆந்திரா, கன்னடா, பெங்கால் என்று வசிக்கத்துவங்கிய காலகட்டத்தில் சமைக்கவும் சாப்பிடவும் பிறர்க்குச் சொல்லவும் பழக்கமாகி விட்டது. இதைப் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் காய்களிலும் நம்பர் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்களின் விரும்பும் காய் லிஸ்டில் சேர்ந்து விட்டது. இதில் பச்சடி முதல் துவையல், வறுவல், வத்தல் எல்லாம் செய்யலாம். நீரிழிவு, வாய்ப்புண், வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரவங்கள் இவை யாவிற்கும் நல்லது.
பச்சைநிற நீண்ட காய்களில் வெள்ளை நிறக் கோடுகள் கொண்டது இந்தக் காய்கள். வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தக் கொடி. ஆங்கிலத்தில் Ivy gourd,Littlegourd என்று சொல்லுவார்கள். குந்துரு, திண்டேரா, தொண்டகாயி என்று பலமொழிகளில் பலபெயர். சின்னதாக ஒரு வதக்கலைப் பார்ப்போம். அதன் பிறகு எல்லா வகைகளும் நீங்களாகவே முயற்சிக்கலாம்.
வேண்டியவைகள்:
நல்ல கோவைக்காய் – கால் கிலோ
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
ருசிக்கு – உப்பு
கறிப்பொடி – 2 டீஸ்பூன் அல்லது மிளகாய், தனியாப்பொடி விருப்பத்திற்கு
மஞ்சள் பொடி – சிறிது.
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது
செய்முறை:
கோவைக்காயை நன்றாக அலம்பி, நீண்ட வகையிலோ, வட்டமான வடிவிலேயோ மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயமும் அப்படியே. அதிகம் சேர்க்கலாம்.
நான் எந்தக் காயையுமே துளி எண்ணெய் சேர்த்துக் கலந்து மைக்ரோவேவ் அவனில் 7 நிமிஷம் வேக வைத்து எடுத்துக் கொள்வேன். காய் கலரும் மாறாது. எண்ணெயும் குறைவாக விடலாம். நேராகவே செய்வதானால், வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொட்டி, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து நறுக்கிய கோவைக்காயைப் போட்டு,உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். துளி தண்ணீர் தெளித்து,மூடிபோட்டு மூடித் திறந்து சட்டுவத்தால் கிளறிவிட்டுச் சுருள வதக்கவும். வதங்கியதும், கறிப்பொடியைத் தூவி வதக்கவும். எந்த மசாலா விருப்பமோ அதையும் தூவி வதக்கி இறக்கவும்.
வதக்கிய கறி ஆதலால் சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். ரொட்டியுடனும் எடுத்துப்போக உபயோகிக்கலாம். வட இந்திய உணவுகளைப் போல இஞ்சி, பூண்டு மசாலா சேர்த்தும், க்ரேவிகள் செய்யலாம். கறியுடன் வேர்க்கடலை வறுத்துப் பொடித்ததைப் போட்டும் செய்யலாம். கற்பனையில் ருசித்து விட்டுச் செயலில் இறங்குங்கள்.
செய்து பாப்போம்.. நன்றி அம்மா..