செல்வ களஞ்சியமே – 63
ரஞ்சனி நாராயணன்

‘அவளை மட்டும் நிறைய கொஞ்சற..?’
‘ஏன்தான் இந்த பாப்பா பொறந்ததோ? நான் மட்டும் இருந்திருந்தா நன்னா இருந்திருக்கும்….!’
‘இந்த பாப்பாவ கண்டாலே எனக்குப் பிடிக்கல….!’
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் முதல் குழந்தையின் முணுமுணுப்புகள்தான் இவை. இருவரும் நட்பாக இருப்பார்கள். என் தம்பி, என் தங்கை என்று உறவாடுவார்கள். நீங்கள் எத்தனை தூரம் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்தாலும் இந்த பிரச்னை வரத்தான் வரும். அடிக்கடி உரசல்கள், சண்டைகள் – வாய், கை சண்டைகள் எல்லாம் நடக்கும். அப்படி நடக்கையில் நீங்கள் முதலில் டென்ஷன் ஆகாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். சின்னக் குழந்தைக்கு உங்கள் டென்ஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், முதல் குழந்தைக்கு புரியும். ‘ஓ! பாப்பாவை ஏதாவது செய்தால், அம்மாவிற்கு பிடிக்காது. அம்மாவின் கவனத்தை கவர வேண்டுமானால் இது ஒரு வழி’ என்று தன் வழியில் தப்பாகப் புரிந்து கொள்ளும். உங்களை இன்னும் படுத்தும்.
ஒரு சின்ன விஷயம் பூதாகாரமாக வடிவெடுக்கும் போது பெற்றோர் அயர்ந்து போவது சகஜம் தான். இந்த பொறாமைக்குக் காரணம் இத்தனை நாட்கள் பெற்றோரின் ஒரே செல்லமாக இருந்த குழந்தைக்கு தனது இடத்தில் இன்னொரு குழந்தை வந்தது பிடிக்கவில்லை என்பது ஒன்றுதான். பெற்றோர்கள் இருவருக்கும் சொந்தம் என்பது புரிய நாட்கள் ஆகும். அதேபோலத் தான் விளையாட்டு சாமான்களும். இருப்பதில் தங்கைக்கும் பங்கு என்றாலும் முதல் குழந்தைக்குக் கோவம் வரும். சரி, புதிதாக வாங்கிக் கொடுத்தாலும் கோவம் வரும். பெற்றோர் தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். விளையாட்டு விளையாட்டாகவே இருக்கும்வரை இரண்டு குழந்தைகளுக்கும் நடுவில் பெற்றோரின் தலையீடு தேவையில்லை. விளையாட்டு என்பது அடிதடியாக மாறும் போது உடனடியாகத் தலையிட்டு இருவரின் கவனத்தையும் திசை திருப்ப வேண்டியது பெற்றோரின் கடமை.
இரண்டாவது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்னும்போது பெற்றோரின் கவனம் அதனிடத்தில் அதிகம் இருக்கும். சமயம் பார்த்து, முதல் குழந்தையும் ‘எனக்கும் தலைவலி, ஜுரம்’ என்று படுத்தும். எல்லா சமயங்களிலும் நல்ல வார்த்தைகளினால் பெரிய குழந்தையை சமாதனப்படுத்துவதுதான் சிறந்தது. சிலசமயம் ‘பாப்பாவிற்கு ஊசி போடப் போகிறோம். உனக்கும் ஊசி போடச் சொல்லவா, டாக்டர் மாமாவை?’ என்ற சின்ன அதட்டல் பெரிய குழந்தையை சற்று நேரத்திற்கு அடக்கலாம். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான இந்தப் பொறாமை சில வருடங்களில் முடிவுக்கு வராது. பல வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
எங்கள் உறவினர் ஒருவருக்கு அடுத்தடுத்து மூன்று பெண்குழந்தைகள். வயது இடைவெளி இரண்டிரண்டு வயதிற்குள். தனக்குப் போட்டியாக இன்னொரு குழந்தை வந்துவிட்டது, அம்மாவின் கவனம் அந்தக் குழந்தையின் மேல் அதிகமாகிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடிய வயது இடைவெளி இல்லாத காரணத்தாலோ என்னவோ அவர்கள் மூவரும் தங்களுக்குள் அத்தனை சண்டை போட்டு நான் பார்த்ததில்லை. இரண்டாவது குழந்தை மேற்சொன்ன உறவினருக்குப் பிறந்த போது நான்தான் முதல் குழந்தையைப் பார்த்துக்கொண்டேன். புது பாப்பாவின் வழிக்கே போகாது அந்த முதல் குழந்தை. கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு என் குழந்தையுடன் கொஞ்சம் சண்டை, கொஞ்சம் சமாதானம் என்று இருக்கும். மூன்றாவது குழந்தை பிறந்தபோது என் குழந்தை, எனது உறவினரின் இரண்டு குழந்தைகள் என்று மூவரையும் கட்டி மேய்க்கும் பொறுப்பு எனக்கு. என் குழந்தைக்கு அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வரும். ஆனால் அக்கா தங்கைக்குள் சண்டையே வராது. கொஞ்சம் வியப்பாக இருக்கும்.
நான் அவர்கள் மூவரையும் சமாளித்ததே ஒரு கதை! மூவரையும் ஒரு சேர எழுப்பி, பாலை கொடுத்துவிடுவேன். அதேபோல ஒருசேர நிற்க வைத்து குளியலையும் முடித்துவிடுவேன். ஒருவர் பின் ஒருவராக தலையை வாரி பின்னி விடுவேன். ஒரே வேளையில் சாப்பாடு. ஒரேவேளையில் தூக்கம். ஒரே கதையை ஒரே நேரத்தில் சொல்லி….மொத்தத்தில் ஒரு குட்டி கிண்டர் கார்டன் பள்ளியே நடத்திக் கொண்டிருந்தேன்! எனக்கு எப்போதுமே குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது பிடித்த விஷயம்.
இன்னொரு விஷயம்: நான் முதலிலேயே சில கண்டிஷன்களைப் போட்டுவிடுவேன். ‘முதலில் பால்; அப்புறம் தான் விளையாட்டு’, அதேபோல முதலில் ஆனந்தி, பிறகு நளினி பிறகு ஜெயந்தி என்று குளிக்கும் வரிசை; பால் மூவருக்கும் ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்துவிடுவேன். அதேபோல சாப்பாடும். ஒரே நேரத்தில் பிசைந்து கொண்டு வந்துவிடுவேன்.
ஆனால் இப்போது இந்தப் பெண்களுக்குத் திருமணம் ஆகி அவர்களும் அம்மாக்கள் ஆகிவிட்டார்கள். இவர்களை நான் கையாண்ட அளவிற்கு அவர்கள் குழந்தைகளை அவர்களால் சுலபமாக கையாள முடியவில்லை என்று சொல்லுவார்கள் என்னிடம். நான் சொல்வது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன். கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே ஆகிவிட்டதே! ஒவ்வொரு குழந்தைகளுக்கு இடையில் எத்தனை வித்தியாசங்கள்.
சில விஷயங்களை பெற்றோர்கள் தவிர்ப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நடுவில் ஏற்படும் போட்டி பொறாமையை சற்று குறைக்கலாம்.
- முதல் குழந்தையில் எதிரில் இரண்டாவது குழந்தையை அதிகம் கொஞ்ச வேண்டாம்.
- புது பாப்பாவிற்கு எது வாங்கினாலும் பெரிய குழந்தைக்கும் ஏதாவது வாங்கி வாருங்கள்.
- இருப்பதை வைத்துக் கொண்டு இருவரும் விளையாட வேண்டும் என்பதை ‘கண்டிஷனா’கப் போடுங்கள்.
- இரண்டாவது குழந்தையை ‘ஐயோ பாவம்!’ என்று பெரிய குழந்தை எதிரில் சொல்லாதீர்கள்.
- ‘பாப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அதனால அம்மாவால இன்னிக்கு உன்னோட நிறைய நேரம் விளையாட முடியாது. நாளைக்கு விளையாடலாம், சரியா?’ என்பது போல நேரடியான வேண்டுகோள்கள் சிலசமயம் உதவும்.
- எந்தக் காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளுக்குள் ஒப்பீடு வேண்டாம்.
- இருவரும் அதிசயமாக(!) விளையாடிக் கொண்டிருக்கும்போது அவசியம் ஏற்பட்டாலொழிய நீங்கள் தலையிடாதீர்கள். ‘என்னடி அதிசயமா இருவரும் சண்டைபோடாமல் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.
- குழந்தைகள் வளர்ப்பில் இந்தப் போட்டி பொறாமையை சமாளிப்பதும் நமது கடனே!
அடுத்த வாரம்…
படு ஜோர்.
வாங்க பாண்டியன்!
பாராட்டிற்கு நன்றி!
சரியான அலசல்…
அண்ணன்களுக்கு தேவைப்படும்…!
வாங்க தனபாலன்!
வருகைக்கும் இரண்டுமுறை கருத்துரை போட்டதற்கும் நன்றி!
செய்து பாப்போம்.. நன்றி அம்மா..
பொதுவாக வயது வித்தியாசம் குறைவாக இருந்தால் அந்தக்குழந்தைகள் ஒருவரை மற்றொருவர் ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருப்பதில்லை. முதல் குழந்தை பிறந்து இரண்டு வயதுக்குள்ளாக அடுத்த குழந்தை பிறந்துவிடவேண்டும். :))) மூன்று வயதுக்குள் என்றால் கொஞ்சம் பரவாயில்லை. நான்குக்கு மேல் போனால் கஷ்டம். ஒன்பது, பத்து வயது வித்தியாசம் என்றால் ஒட்டுதல் அதிகம் இருப்பதில்லை. கொஞ்சம் விலகியே இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
மொத்தத்தில் ஒரு குட்டி கிண்டர் கார்டன் பள்ளியே நடத்திக் கொண்டிருந்தேன்!
உண்மைதான் . நினைத்துப்பார்த்தால் மலைப்பகத்தான் இருக்கிறது..
என் மகள் ஒரு பிள்ளையின் பின்னால் ஓட முடியவில்லை என்கிறாள்…
ஏன் ஓடுகிறாய் கவனத்தைத்திருப்பி கதை சொல்லி சாப்பாடு ஊட்டு என்றால் பொறுமை இல்லை என்கிறாள்..!
குழந்தையை வளர்ப்பது ஒரு கலைதான்.
குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் போது மறுத்து பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல் கவனத்தை திசை திருப்புவது தான் சிறந்த முறை.
நன்றாக ஒவ்வொன்றையும் சொல்கிறீர்கள்.
rombavum nalla tips. thanks amma