குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்!

செல்வ களஞ்சியமே – 61

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

‘தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்….’ இந்த வரிகளை எங்கோ படித்ததுபோல இருக்கிறதா? விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம்?) ஏறுவதும், பதுமைகள் சொல்லும் கதைகளுமாக நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்று விடும் இந்தக் கதைகள். நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது ‘தன் முயற்சியில் சற்றும் தளராத’ என்கிற வார்த்தைகளைத்தான்.

குழந்தைகளுக்கு இந்த சற்றும் தளராத முயற்சியை சொல்லிக் கொடுங்கள். இன்று உலகப்புகழ் பெற்ற எல்லோருக்கும் பின்னால் இந்த தளராத முயற்சி இருந்திருக்கிறது. இனி வெற்றி பெறப்போகிறவர்களுக்கும் இந்த தளராத முயற்சி மிகவும் தேவை.

ஒரு விஷயத்தை நாம் எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பாடத்திலோ, ஒரு போட்டியிலோ தோல்வி என்றால் வாழ்க்கை முழுவதும் தோல்வி என்று அர்த்தமில்லை. வெற்றியிலிருந்து நாம் பாடம் படிக்கிறோமோ இல்லையோ, தோல்வி நிச்சயம் நமக்குப் பல பாடங்களை சொல்லித் தருகிறது.

என் மாப்பிள்ளை ஆசிரியராக இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் +2 மாணவர்களுக்காக வருடம் ஆரம்பிப்பதற்கு முன் இரண்டு நாட்கள் அவர்களை பரீட்சைக்குத் தயார் செய்ய, படிக்கும் முறைகளைச் சொல்லித்தர பயிற்சி முகாம்கள் நடத்துவார். இரண்டாம் நாள் மாலை பெற்றோர்களை வரச் சொல்லி எப்படி குழந்தைகளை தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் சில பயிற்சியாளர்களை வரவழைத்து பேசச்சொல்லுவார். அதுமட்டுமல்ல; பத்தாம் வகுப்பில் தோல்வி கண்ட மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் உண்டு.

வருடம் தவறாமல் நாங்களும் போவோம். பயிற்சி வகுப்புகள் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒருமுறை திரு சேதன் ராம் என்பவர் வந்திருந்தார், பத்தாம் வகுப்பில் வெற்றி பெறாத மாணவர்களுடன் பேச. குழுமியிருந்த மாணவர்கள் எல்லோருமே வருத்தத்தில் இருந்தார்கள். காரணம் தெரிந்ததுதான். இவர்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தவுடன் திரு சேதன் ராம் கேட்டார்: ‘என்ன பிள்ளைகளா! ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு?’ யாரும் பேசவில்லை. அவர் சொன்னார்: ‘யாராவது பதில் சொன்னால்தான் என்னால் உங்களுடன் பேச முடியும்…!’ ஒரு மாணவன் மெல்ல எழுந்து, ‘ஸார், நாங்கள் பத்தாவது வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டோம்!’ ‘அட! அப்படியா?’ என்றவர் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள், நான் கூட பத்தாம் வகுப்பில் தோல்வி கண்டவன் தான்!’ வகுப்பில் பலமான சிரிப்பு. மாணவர்களிடையே கசமுசா என்று பேச்சு. ஒரு சகஜ நிலை திரும்பியது அவர்களின் மத்தியில்.

திரு சேதன் ராம் தொடர்ந்தார்: இப்போ நமக்கெல்லாம் இரண்டு அனுபவங்கள். ஒன்று தோற்றது. இன்னொன்று தோற்றபின் ஜெயிப்பது. ஆனால் ஜெயித்தவனுக்கு ஒரே அனுபவம் தான். அதனால் நாமதான் உயர்ந்தவர்கள்…! நாம் எல்லோரும் பத்தாம் வகுப்பில் மட்டும்தான் தோற்றிருக்கிறோம். வாழ்க்கையில் இல்லை. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’.

எத்தனை உண்மையான வார்த்தைகள்! இதை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். ரொம்பவும் முக்கியமான பாடம் இது. சின்னக் குழந்தைகளை போட்டிக்கு அனுப்பிவிட்டு வெற்றி பெறவில்லை என்றால் கோபிக்காதீர்கள். அதே போல வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றும் மன அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள்.

DSCN2037

தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன?

  • தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
  • அந்த சமயத்தில் உங்களின் திறமை சற்று குறைவாக இருந்தது.
  • உங்களை விட திறமை கூடுதலாக இன்னொருவருக்கு இருந்தது.
  • உங்கள் முயற்சி இன்னும் கொஞ்சம் தேவை.

ஒரு குழந்தை தோல்வி அடைகிறது என்றால் அதன் தவறு மட்டுமல்ல காரணம். பெற்றோரும் ஒரு விதத்தில் காரணம். ஒரு குழந்தை திரைப்படப்பாடல்களை நன்றாகப் பாடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அந்தக் குழந்தையை சூப்பர் சிங்கர் போட்டிக்கு அனுப்பக்கூடாது. போட்டி என்று வரும்போது அதற்கென தயார் செய்துகொள்ளுதல் மிகவும் முக்கியம். ஜாலியாக வீட்டில் பாடுவது வேறு; போட்டியில் பலருடன் பங்கு பெறுவது வேறு. கொஞ்சம் பாட ஆரம்பித்தவுடனே வருவோர் போகுவோரிடமெல்லாம் ‘என் பெண் ரொம்ப நன்றாகப் பாடுகிறாள்; அவள்தான் இந்த சீசன் சூப்பர் சிங்கர்’ என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். குழந்தையும் தான் மிக நன்றாகப் பாடுவதாக நினைக்க ஆரம்பிக்கிறது. தன்னம்பிக்கை என்பது அளவுக்கு மீறிய நம்பிக்கையாக உருவெடுக்கிறது. இதனால் தான் முதல் சுற்றுத் தோல்வியைக் கூட தாங்க முடியாமல் போகிறது.

உங்கள் குழந்தையின் பலம் பலவீனம் இரண்டும் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். பக்கத்துவீட்டுக் குழந்தை பாடுகிறது என்று உங்கள் குழந்தையையும் பாட்டு வகுப்புகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்களுக்கு உண்மையிலேயே பாட்டில் விருப்பம் இருக்கிறதா என்று பொறுமையுடன் காத்திருந்து அந்த ஆசை ஏற்படும்போது வகுப்புகளுக்கு அனுப்புங்கள்.

பெற்றோரின் அதீத ஆசைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும் இங்கு: எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் – 6 ஆம் வகுப்பு படிக்கிறாள் – வந்திருந்தாள். கூடவே அந்தப் பெண்ணின் அம்மாவும் வந்திருந்தார். அந்தப் பெண்ணைப் பாடச் சொன்னார். அந்தப் பெண் பாடிய பாடலைக் கேட்டு மனம் வருந்தியது. அவள் பாடிய கன்னடப் பாடலின் ஆரம்ப வரிகள் இவை: ‘நீ இல்லாமல் போனால் என் வாழ்வு வாழ்வே இல்லை’. கையை, தலையை எல்லாம் மேலும் கீழும் ஆட்டிக் கொண்டு அந்தக் குழந்தை பாடியபோது நான் மிகவும் வருந்தினேன். பாடலின் அர்த்தம் புரியாமல் ஆசிரியை சொல்லிக் கொடுத்தபடி பாடினாள் அந்தப்பெண். நடன வகுப்புகளில் கூட இப்படி நடக்கும். சிருங்கார ரசம் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய வயது இல்லாத குழந்தைகள் அந்தப் பாடல்களுக்கு அபிநயம் பிடிக்கும். பரிதாபம்! சின்ன வயதிலேயே அரங்கேற்றம் ஆக வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆசைக்கு குழந்தைகள் பலி ஆகிறார்கள் என்பது மிக மிக வருத்தமான – மோசமான விஷயம்.

இங்கு தொலைக்காட்சியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டியில் – நடத்திக் கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஜாலியான பாடல்கள் பாட வேண்டிய சுற்று. அது குழந்தைகளுக்கான போட்டி. ஒரு குழந்தை பாடிய பாடலைக் கேட்டு எஸ்.பி.பி. ரொம்பவும் வருத்தப்பட்டுக் கூறினார். ‘உன்னுடைய வயதுக்குத் தகுந்த பாடலைப் பாடு. இந்தப்பாடலை பாடச் சொல்லி யார் சொன்னார்களோ அவர்களும் யோசித்திருக்க வேண்டும். பெற்றோரையும், ஆசிரியர்களையும் ரொம்பவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்: இந்த மாதிரிப் பாடல்களை குழந்தைகளைப் பாட வைக்காதீர்கள், தயவு செய்து!’

அடுத்த வாரம் பார்க்கலாம்…

Advertisements

“தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்!” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. ஊடகப் போட்டிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பது என் கருத்து.எத்தனை எத்தனை மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பாவமாய் இருக்கிறது. அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் ரஞ்சனி.

  2. மிக அருமையாக சொன்னீர்கள்! தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பிள்ளைகளுக்கு புரியவைப்பது மிக அவசியம்! உற்சாகமூட்டி அவர்களை வெற்றிபெற வைப்பது ஒரு கலை! தோற்றால் திட்டுவது கூடாது! மிக நல்ல பதிவு! நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.