அரசியல், அரசியல் பேசுவோம்

தேர்தலில் நிற்பது கேவலமான செய்கையா? : சுப. உதயகுமாரன்

அரசியல் பேசுவோம்

SPUமக்களவை தேர்தலில் பங்கெடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி(எளிய மக்கள் கட்சி)யில் இணைந்திருக்கும் இடிந்தகரை போராட்டக்குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமாரன் மற்றும மை.பா. ஜேசுராஜ் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் விளக்கம் தரும் வகையில் தங்களுடைய நிலையை கேள்வி, பதில் மாதிரியில் விளக்கியிருக்கிறார் சுப. உதயகுமாரன்.

கே: அரசியலுக்குப் போவது சரியான முடிவா?
ப: போராட்டம் என்பது வீதியில் நடத்தும் அரசியல். அரசியல் என்பது அரங்குகளில் நடத்தும் போராட்டம். மக்களுக்காகப் போராடத்தான் அரசியலுக்குப் போகிறோம்.

கே: தேர்தலில் நிற்பதால் என்ன நடந்துவிடப் போகிறது?
ப: தேர்தலில் நிற்பதாக அறிவித்ததால்தான் இடிந்தகரைப் போராட்டம் மீண்டும் ஊடகங்களின் கவனத்தையும், அவர்களின் உதவியோடு மக்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் மீண்டும் பேசுகிறார்கள். தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாமல் கும்பகர்ண நித்திரையில் இருக்கிறீர்களா என்று முதல்வரை கேள்வி கேட்கிறார். தங்கள் தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் பிரச்சினை இடம்பெறும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இன்னும் பல விடயங்கள் நடக்கும். மந்திரத்தால் மாங்காய் விழாது, நாம்தான் விழவைக்க வேண்டும்.

கே: உங்களுக்கு பதவி, பட்டம் மீது ஆசை வந்துவிட்டதாக சொல்கிறார்களே?
ப: ஆறாண்டுகள் மிகக் கடினமாக படித்துப் பெற்ற முனைவர் பட்டத்தையே நான் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதில்லை. பதவிகள் மீது ஆசையிருந்தால் எப்போதோ விலை போயிருப்பேன். பதவிக்காக தேர்தலில் நிற்கவில்லை; எங்கள் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாகவே அதனைப் பார்க்கிறோம்.

கே: நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!
ப: சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். தேர்தலில் நின்று பதவி பெறுவது சட்டப்படி குற்றமா?  , இல்லையே?

கே: பதவி பெற்ற பிறகு நீங்கள் மக்களை மறந்துவிட்டு, தன்னலவாதியாக மாறிவிட்டால்?
ப: ஏறத்தாழ மூன்றாண்டுகள் பிள்ளை, குட்டி, பெற்றோர், தொழில், வருமானம், வீடு, வாசல் என அனைத்தையும் விட்டுவிட்டு மக்களோடு மக்களாக இருந்தோம் என்றால் நாங்கள் இரும்பனைய உறுதிகொண்டவர்கள் என்பது தெரியவில்லையா? இடிந்தகரை மக்களிடம் கேளுங்கள் எங்கள் உண்மை, ஒழுக்கம், உறுதி பற்றிச் சொல்வார்கள். நாங்கள் அக்னி பரீட்சையில் தேறியவர்கள், அழுகும் பொருட்களல்ல. வாய்ச்சொல் வீணர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை நாங்கள்.

கே: இன்றைய அரசியல் அப்படிப்பட்டத் தன்மையுடையதாக இருக்கிறதே?
ப: தற்போதைய பொதுவாழ்க்கை சீர்குலைந்திருப்பது உண்மைதான். ஆனால் அதே அரசியலில்தான் சீர்மிகு சிங்காரவேலரும், பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், தோழர் ஜீவாவும், பெரியவர் கக்கனும், மதிப்பிற்குரிய லூர்தம்மாள் சைமனும், மார்ஷல் நேசமணியும், இன்னும் எண்ணற்றப் பெரியவர்களும் அப்பழுக்கற்ற அரசியல் செய்து மக்கள் தொண்டு புரிந்தார்கள். நாங்கள் இந்தப் பெரியவர்களைத்தான் முன்னுதாரணங்களாகக் கொள்கிறோம்.

கே: எளிய மக்கள் கட்சியில் (ஆம் ஆத்மி கட்சி) சேர்ந்தது இடிந்தகரையை விட்டு வெளியே போவதற்குத்தான் என்று பேசுகிறார்களே?
ப: ஏற்கனவே சொன்னது போல, எங்கள் போராட்டத்தை அரசியல் படுத்துவதுதான் எங்கள் நோக்கம். அதற்கு தகுந்த வாகனமாக எளிய மக்கள் கட்சி (ஆம் ஆத்மி கட்சி) இருப்பதால் அதில் இணைந்திருக்கிறோம். சாகும் வரை இங்கே இடிந்தகரையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? வெளியேறி அடுத்தக் கட்ட வேலைக்குப் போவது தவறான செயலா?

கே: நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதா?
ப: இல்லைதான். கோடிக்கணக்கான பணமும், குடியும், ரவுடித்தனமும் மண்டிக் கிடக்கும் களத்தில் நின்று வெற்றி பெறுவது கடினமானதுதான். இவற்றை செய்யாமலிருப்பதன் மூலம், எங்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையும், மரியாதையும் வருமென நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். எங்களை ஆதரிப்பார்கள், தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறோம்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” என்பது வள்ளுவம்.
கே: ஒருவேளை நீங்கள் தோற்றுப் போய்விட்டால்?
ப: உலகம் அழிந்துவிடாது. உங்கள் சேவை எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் சொன்னால், மனமார்ந்த நன்றியினை தெரிவித்துவிட்டு, குடும்பத்தாரோடு ஓரிரு மாதங்கள் எங்காவது போய் ஓய்வு எடுப்பேன். திரும்பி வந்ததும், முன்பு செய்து கொண்டிருந்தது போலவே, அணுசக்திக்கு எதிராக, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன், போராடுவேன். முகமும் முகவரியுமின்றி இருந்த காலத்திலேயே முனைப்பான ஒரு போராட்டத்தைக் கட்டியெழுப்ப முடிந்தது என்றால், மக்களின் ஆதரவு பெற்றிருக்கும் இந்த நிலையில் நானும், என் தோழர்களும் என்னென்னவோ சாதிக்க முடியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s