குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு தோல்வியடைய கற்றுக்கொடுங்கள்!

செல்வ களஞ்சியமே – 60

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் போட்டிகள் அதிகமாகிவிட்டன. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் என்று இசை, நடனம் என்று விதம் விதமான போட்டிகள். எல்லா போட்டிகளிலும் குழந்தைகளும் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சக்திக்கு மீறிய செயல்களை செய்து காட்டுகிறார்கள். இவற்றைக் கண்டு வியக்கும் வேளையில் சில விஷயங்கள் இந்தப் போட்டியாளர்களுக்கு தெரியுமா என்ற கவலையும் ஏற்படுகிறது.

போட்டி என்பது நல்ல விஷயம். நம்முடைய செய்திறனை அது அதிகரிக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால், இவர்களுக்கு போட்டி என்றால் வெற்றி தோல்வி இரண்டும் உண்டு என்பது ஏன் புரியாமல் போகிறது? அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால் போட்டியாளர்களும், அவர்களது உறவினர்களும், பார்வையாளர்களும் அழும் அழுகை இருக்கிறதே, ஐயோ! தாங்கமுடியவில்லை, சாமி!

வெற்றியை கொண்டாடும் நம்மால் தோல்வியை தாங்குவது ஏன் முடியவில்லை? தோல்வியே இல்லாமல் வாழ முடியுமா? தோல்வி என்பது தப்பு இல்லையே. ஒருமுறை தோல்வி என்றால், வாழ்க்கையே முடிந்துவிடுமா? பரீட்சைகள் ஆரம்பித்துவிட்டன. இன்னும் சில நாட்களில் முடிவுகள் வெளிவரும். கூடவே பல குழந்தைகளின் வாழ்க்கையும்  முடிந்துவிடும் செய்திகளையும்  செய்தித்தாள்கள் வெளியிடும். படிக்கவே -இல்லையில்லை, இப்போது நினைத்துப் பார்க்கவே மனம் வேதனைப் படுகிறது. எத்தனை குழந்தைகள் தோல்வியை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள். இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும்போது என்னுடைய கோபம் பெற்றோர்களின் மேல்தான் திரும்பும்.

சின்னக் குழந்தையாக இருக்கும்போது, குழந்தை விழுந்து எழுந்து, திரும்ப எழுந்து நடக்கும்போதும், மழலையில் உளறிக்கொட்டும்போதும் ரசிக்கும் உங்களுக்கு வளர்ந்த குழந்தைகள் தடுமாறும்போது ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? அவர்களின் தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை? தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதி அவ்வளவுதான் என்று ஏன் குழந்தைகளுக்குப் புரியவைக்க முடியவில்லை? குறுகுறு நடையின் போது விழும் குழந்தைகளை தூக்கி நிறுத்தி சமாதானப்படுத்தும் உங்களால் படிப்பில் தோல்வி காணும்போது ஏன் அவர்கள் துவண்டு போகாமல் தூக்கி நிறுத்த முடிவதில்லை?

பள்ளிக்குச் செல்கிறார்களே, எந்த பாடங்களில் அவர்களால் சரியாக மதிப்பெண்கள் பெற முடியவில்லை, என்ன காரணம் என்று கேட்டிருக்கிறீர்களா? காரணத்தை சரி செய்ய ஆவன செய்திருக்கிறீர்களா? பள்ளிக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் பாடு, ஆசிரியர்கள் பாடு, உங்களுக்கென்ன என்று இருக்கிறீர்களே, எத்தனை தவறு இது என்று உங்கள் குழந்தையின் வாழ்வு முடிந்தபின் உணர்ந்து என்ன பயன்?

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாடங்கள் மட்டுமல்ல; வேறு பல சிக்கல்கள் இருக்கும். அவற்றைப்பற்றி என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? கூடப்படிக்கும் மாணவர்கள் (மாணவியரும் இதில் அடக்கம்) கொடுக்கும் மன அழுத்தம், ஆசிரியர்களால் வரும் மன வருத்தங்கள் கூட படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுக்கும் காரணங்கள்.

பாடங்கள் புரியவில்லை என்றால் உடனே டியூஷன் வகுப்புகள் என்பது பிரச்னைக்கான தீர்வு இல்லை. பள்ளியில் இருந்து ஓய்ந்து வரும் குழந்தைகளை மறுபடி இரண்டு மூன்று மணிநேரம் இன்னொரு வகுப்பில் போட்டு அடைத்தால் எப்படி இருக்கும்?

P.Saravanan
art P.Saravanan

என் அனுபவம் ஒன்றை இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு பள்ளியில் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க போனபோது ஆசிரியர்களுடன், பெற்றோரும் வந்து அமர்ந்தனர் கற்பதற்காக. ஒரு அம்மாவிற்கு சிறிது நேரத்துக்கு மேல் உட்கார முடியவில்லை. இப்படி அசைகிறார்; அப்படி அசைகிறார். அவரைப்பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இத்தனைக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி முப்பது நிமிடங்கள் தான் வகுப்பு. அதுவும் ஒருநாள் விட்டு ஒரு நாள். நான் அவரைப்பார்த்துக் கேட்டேன். ‘இவ்வளவு குறுகிய நேரம் உங்களால் உட்கார முடியவில்லை; உங்கள் குழந்தை இங்கு தினமும் சுமார் எட்டு மணிநேரம் உட்கார வேண்டும் எப்படி இருக்கும் அவளுக்கு?’ எல்லோரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். பிறகு ஒரு ஆசிரியர் சொன்னார்: ‘உண்மைதான்; பாவம் குழந்தைகள். நாங்கள் மேஜைக்கு இந்தப் பக்கம் வரும்போதுதான் தெரிகிறது!’ அப்பாடி, இவராவது ஒத்துக் கொண்டாரே என்று இருந்தது. பெரியவர்களுக்கு வீடுகளில் இருக்கும் மன அழுத்தம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இருக்கிறது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ‘நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது’ என்று மிரட்டுவதுடன் உங்கள் கடமை முடிவதில்லை.

பரீட்சைகளில் தோல்வி, போட்டிகளில் தோல்வி என்பதெல்லாம் நமக்கு அனுபவ படங்களைக் கொடுக்கும். இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள மிகவும் உதவும். தோல்வி இல்லாமல் வாழ்க்கை இனிக்காது. தோல்வியின் கசப்பை உணர்ந்தால் தான் வெற்றிக்கனி சுவைக்கும்.

குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கற்றுக் கொடுங்கள். நிறைய பேசுங்கள். உங்கள் தோல்விகளைச் சொல்லுங்கள். வெற்றி பெற என்ன முயற்சி செய்தீர்கள், எப்படி மாற்றி யோசித்தீர்கள்  என்றும் சொல்லுங்கள். தோல்வி என்பது நம்மை புடம் போடும். நமது தவறுகளை சுட்டிக்காட்டும். தோல்வி என்பது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு என்று புரிய வையுங்கள்.

குழந்தைகளுடன் நிறைய பேசுங்கள். நிறைய கதை சொல்லுங்கள். கதாநாயகன் நிறைந்த குணவான் ஆக இருக்க வேண்டாம். தனது பலவீனத்தை புத்தி சாதுர்யத்தால் பலமாக மாற்றிக் கொண்டான் என்று சொல்லுங்கள். கதாநாயகி அழகியாக இருக்க வேண்டாம். ஃபேர் அண்ட் லவ்லி தடவிக் கொள்ளாமலேயே, தனது புத்திசாலித்தனத்தால், உள்ள அழகினால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டாள். சில சமயம் தோல்வியை சந்தித்தாள். தோல்வியில் கற்ற பாடத்தினால் வாழ்க்கையில் உயர்ந்தாள் என்று சொல்லுங்கள்.

சரித்திரத்தில் பார்த்தால் பல அரசர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். கஜனி முகமது கதையை சொல்லுங்கள். சக்ரவர்த்தி அசோகருக்கு வெற்றி கிடைத்தாலும் அதனால் மன நிம்மதி இழந்ததை சொல்லுங்கள். வாழ்க்கையில் வெற்றிபெற எந்தத் தோல்வியும் குறுக்கே வராது என்று அடித்துச் சொல்லுங்கள். பாடங்களும், போட்டிகளும் தேவை. அதற்காக உயிரை இழப்பது, அழுது புலம்புவது மிகப்பெரிய குற்றம் என்று குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். அப்போதுதான் நீங்கள் சிறந்த பெற்றோர். நினைவிருக்கட்டும்.

தோல்வி பற்றி அடுத்த வாரமும் பேசலாம்…!

Advertisements

“குழந்தைகளுக்கு தோல்வியடைய கற்றுக்கொடுங்கள்!” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. என்னென்ன குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் என்பதை மிகவும் அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் அம்மா… தலைப்பே பலரையும் திகைக்க வைக்கும்…!

 2. நீங்க சொல்வதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதுதான், வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சக்கரம் சுற்றுவதுபோல் வந்துகொண்டேதான் இருக்கும். முதலில் இதை பெற்றோர் புரிந்துகொண்டால் அவர்களிடமிருந்து பிள்ளைகள் தானாகக் கற்றுக்கொள்வார்கள்.

  உங்களின் அனுபவத்துடனான‌ பதிவு அருமைங்க.

 3. உண்மை. சிவனுக்கே தோல்வி அடைய விருப்பம் இருந்தது. நக்கீரனிடம் சொல்லாடலில் தோற்றார். டிவி என்பது வீட்டிற்கு வீடு வாங்கி வைத்துள்ள விஷச் செடி.

  1. வாங்க பாண்டியன்!
   தொலைக்காட்சியை தொலைக்க முடியவில்லையே, என்ன செய்ய?
   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. நல்லாச் சொன்னீங்கம்மா..அதுவும் இந்த நேரத்திற்கு ஏற்ற பதிவு. நான் தோல்வி அடைந்த விசயங்களைச் சொல்லி, அதனால் என்ன, கலந்து கொண்டேன், கற்று கொண்டேன் அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறேன். இனியும் தொடர்வேன். நன்றி அம்மா.

  1. வாங்க கிரேஸ்,
   பாவம் குழந்தைகள். நாம்தான் அவர்கள் தோல்வியில் துவளாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
   முதல் வருகைக்கும், தொடர்வதற்கு நன்றி!
   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

 5. தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பதை நாம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அது தான் அவர்களின் வருங்கல்ல்த்திற்கு மிகவும் நல்லது. அருமையாய் தோல்வியைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறீர்கள் ரஞ்சனி. தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதற்கு முகமது கஜினி உதாரணத்தை வெகுவாக ரசித்தேன். என்னுடைய் ஆங்கில தளத்தில் கஜினி கதையை எழுத வேண்டும். நன்றி ரஞ்சனி ஒரு அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு.

  1. வாங்க ராஜி!
   இது பரீட்சை சமயம் வேறு. அதனால் தான் இந்தப் பகிர்வு.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.