உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நோய்நாடி நோய்முதல்நாடி – 35

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

இந்த வாரம் ஒரு ஆன்மிக கதையுடன் நம் கண் பற்றிய கட்டுரையைத் தொடர்வோம்.

விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீ இராமானுஜரின் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ கூரத்தாழ்வான். இவர் காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் என்ற ஊரின் சிற்றசர். ஸ்ரீ இராமானுஜருக்கு தொண்டு செய்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காக தனது செல்வம் முழுவதையும் தானம் செய்துவிட்டு ஸ்ரீ இராமானுஜரை சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் அவருக்குத் தொண்டு செய்து வருகிறார்.

அப்போது சோழ தேசத்து மன்னன் வைணவ நெறி வளர்ந்து வருவதைப் பொறுக்கமுடியாமல் ராமானுஜருக்குத் தீங்கு செய்ய நினைக்கிறான். அவரை கூட்டி வர ஆளனுப்புகிறான். அரசனது கெட்ட எண்ணம் தெரிந்துகொண்ட கூரத்தாழ்வான், நீராட சென்றிருந்த ராமானுஜரின் காவி உடையை தான் தரித்துக்கொண்டு ராமானுஜரை வெள்ளை உடை அணிந்து ஸ்ரீரங்கத்தை விட்டு செல்லுமாறு சொல்லிவிட்டு, அரசவைக்குச் செல்லுகிறார்.

அரசன் அவரை ‘சிவம் பெரிது’ என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்குமாறு கூறுகிறான். அவர் மறுக்கவே, அவரது கண்களை பிடுங்கி எறியுமாறு சேவகர்களுக்குக் கட்டளை இடுகிறான். அரசனின் சேவகர்கள் தன்னை தொடக்கூடாது என்று சொல்லி, தன் கண்களை தானே பிடுங்கி எறிகிறார் கூரத்தாழ்வான். ஸ்ரீ ராமானுஜரின் தரிசனம்(நெறி) வாழவேண்டும் என்பதற்காக தன் தரிசனத்தை (கண் பார்வையை) பறிகொடுத்தவர் இவர் என்பதால் இவருக்கு தரிசனத்திற்காக தரிசனத்தைக் கொடுத்தவர் என்று பெயர்.

கூரத்தாழ்வானுக்கு நேர்ந்தததை அறிந்த இராமானுஜர் மிகவும் வருத்தப்படுகிறார். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளிடம் கண் திரும்ப வரும்படி பிரார்த்திக்கச் சொல்லுகிறார். அந்தமில் பேரின்பம் தரும் பெருமாளிடம் போயும் போயும் புறக்கண்களை வேண்டுவதா என்று மறுக்கிறார் கூரத்தாழ்வான். இராமானுஜர் வற்புறுத்தவே, பெருமாளையும், ஸ்ரீ இராமானுஜரையும் பார்க்க மட்டும் கண்களை தரும்படி வேண்டிக் கொள்ளுகிறார். வரம் தரும் வரதராஜனும் அப்படியே அருளுகிறார்.

அதுமட்டுமல்ல; ‘இவர் இராமானுஜர் இல்லை; கூரத்தாழ்வான்’ என்று தன்னை அரசனிடம் காட்டிக் கொடுத்த நாலூரான் என்பவனுக்கும் முக்தி வேண்டும் என்று பெருமாளிடம் கேட்டுப் பெறுகிறார். என்ன ஒரு உயர்ந்த உள்ளம்!

கூரத்தாழ்வானுக்கு அகக்கண்கள் கிடைத்தன பெருமாளின் அருளால். ஆனால் இந்தக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்விற்குப் பிறகு இரண்டு பேர்களுக்கு பார்வை கொடுக்க முடியும். அதுதான் கண்தானம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் ஒன்று மனதை மிகவும் நெகிழ்த்துகிறது. ஒரு சிறுமி, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞரிடம் வந்து ‘தாங்க்யு, அங்கிள்’ என்பாள். இவர் கொஞ்சம் புரியாமல் அவளைப் பார்த்து, ‘நான் உனக்கு எதுவுமே செய்யவில்லையே, எனக்கு எதற்கு நன்றி?’ என்பார். ‘நான் ‘தாலசீமியா’ என்ற நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு இரத்தம் ஏற்றவேண்டும். யார்யாரோ எனக்கு இரத்த தானம் செய்கிறார்கள். யார் கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அதனால் நான் சந்திக்கும் எல்லோருக்கும் நன்றி சொல்லுகிறேன்’ என்பாள் அந்த சிறுமி. இவர் சொல்லுவார், ‘ஆனால் நான் இதுவரை இரத்ததானம் செய்ததே இல்லை’. அந்தச் சிறுமி மிக அழகாக முகத்தை சற்று சுளித்து, ‘அதுதான் பிரச்னையே! நிறையப் பேர் இப்படித்தான் இரத்ததானத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொண்டாலும் தானம் செய்ய முன்வருவதில்லை. ப்ச்.. பரவாயில்லை. இனிமேல் தானம் செய்யுங்கள்’ என்று சொல்லுவாள்.

இதேபோலத்தான் கண்தானம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருவர் கண் தானம் செய்வதாக முடிவெடுத்து, அதற்காக பதிவும் செய்துகொண்டிருந்தால் தனது குடும்பத்தினரிடம் அதைச் சொல்லவேண்டும். இது மிகவும் முக்கியம். வேறு என்ன செய்ய வேண்டும்?

 • இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
 • மின்விசிறியை இயக்கக்கூடாது.
 • இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
 • அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
 • இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?  

 • நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டனஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.
 • கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:   ஒருவர் இறந்த 4&6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
 • அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
 • கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.
 • கண்தானம் செய்ய 20 TO 30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
 • இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.
 • கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
 • ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.

இந்தத் தகவல்களை எனக்கு அனுப்பி வைத்த நண்பர் திரு அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி!

வரும் வாரம் குளிர் கண்ணாடிகளின் வரலாறு!

“கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. கண் தானம் குறித்த சிறப்பான பகிர்வு.

  நானும், என்னவரும் எங்களின் கணகளை தானம் செய்ய பதிந்து வைத்திருக்கிறோம்.

  புற்றுநோயின் காரணத்தால் மரணத்துக்குப் பின் என் அம்மாவின் கண்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் மருத்துவர். இதனாலேயே அப்பாவுக்கு நாங்கள் கேட்கவே இல்லை…:((

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.