நோய்நாடி நோய்முதல் நாடி – 33
ரஞ்சனி நாராயணன்

கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. நாம் ஒவ்வொருமுறை கண் சிமிட்டும்போதும், எண்ணெய், சளிபோன்ற திரவம் இவற்றுடன் தண்ணீரும் சேர்ந்து நம் கண்ணின் மேற்பரப்பில் பரப்பப்பட்டு நம் கண்ணின் ஈரத்தன்மை பராமரிக்கப்படுகிறது. இந்த ஈரத்தன்மை சுமார் 20 நொடிகள் இருக்கும். உலர் கண்கள் இருப்பவர்களுக்கு இந்த ஈரத்தன்மை 5 நொடிகள் மட்டுமே இறக்கும். கண்ணின் மேற்பரப்பில் ஒரு கண்ணீர் திரை மூன்று அடுக்குகளாக இருக்கும் என்று சென்ற வாரம் பார்த்தோம். இந்த மூன்று அடுக்குகளிலும் வேறு வேறு விதமான புரதங்கள் வேறு வேறு அளவில் இருக்கின்றன. உணர்வுசார் கண்ணீரில் இருக்கும் புரதங்களும், கண்ணில் தூசி விழுந்துவிட்டால் பெருகும் கண்ணீரில் இருக்கும் புரதங்களும் மாறுபட்டவை. ப்ரோலாக்டின் (prolactin) என்ற புரதம் ஆண், பெண் இருவரின் கண்ணீரிலும் இருக்கிறது. இதுவே கண்ணீரை உண்டுபண்ணுகிறது. 15 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த புரதம் அதிகம் சுரப்பதாக தெரிகிறது. இந்த புரதம் கருவுற்றிருக்கும் போது அதிசயிக்க தக்க முறையில் அதிகமாகிறது.
இன்னொரு அதிசயமான தகவல் கண்ணீரைப் பற்றி: அடிபட்டவுடன் அழும் குழந்தைகளின் காயம் சீக்கிரம் ஆறுகிறது என்கிறார்கள் ஆராயச்சியாளர்கள். இதற்குக் காரணம் கண்ணீரில் இருக்கும் கிருமிநாசினி தான். கண்ணீரில் இருக்கும் லைநோசம் என்கிற ரசாயனம் இந்தக் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. இனி குழந்தைகள் அடிபட்டுக்கொண்டு அழுதால் கொஞ்சநேரம் அழ விட்டுவிடுங்கள். அழு, அழு என்று அவர்களைப் படுத்த வேண்டாம், ப்ளீஸ்! இதனால் எந்தப் பயனும் இருக்காது. இயற்கையான அழுகையில் தான் பலன் இருக்கும்.
அழுதவுடன் மனம் லேசாகிறது. இதற்குக் காரணம் நமது கண்ணீரில் இருக்கும் ரசாயனங்கள் தான். மன அழுத்தத்தின்போது வெளியாகும் ரசாயனங்கள் நாம் அழும்போது நமது கண்ணீரில் வெளிப்படுகிறது. இவை வலிநிவாரணிகளாகச் செயல்பட்டு நமது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அழுகைக்குப் பிறகு நமது கோபம், துக்கம் எல்லாம் குறைகிறது. மனிதனுக்கு பேச வருவதற்கு முன் அழுகை என்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு உடல்மொழியாக இருந்தது – எனக்கு உதவி வேண்டும், ஆறுதல் தேவை, மனது துக்கத்தில் இருக்கிறது போன்ற உணர்வுகளைத் தெரிவிக்க – என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். நமக்குத் தான் துக்கம் என்றில்லை; துக்கத்தில் இருக்கும் இன்னொருவரைப் பார்த்தால் கூட சிலருக்கு அழுகை வரும். இந்த உண்மையை பயன்படுத்தித் தான் நம் சீரியல் இயக்குனர்களும், பட இயக்குனர்களும் ‘கண்ணீரும் கதை சொல்லும்’ என்று நம்மை தினமும் அழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்! நமது கண்ணீர் ஏன் உப்பு கரிக்கிறது? நம் உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் உப்பு இருக்கிறது. ஒரு வளர்ந்த மனிதனின் உடலில் ஒரு கோப்பை உப்பு இருக்கிறது. நம் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உப்பு தவிர வேறெதுவும் இல்லையாதலால் உப்பு தெரிகிறது. கண்ணீரில் உப்பு இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உப்பு ஒரு கிருமிநாசினி என்பதுடன் புண்களையும் ஆற்றவல்லது. கண்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கவும் இந்த உப்பு பயன்படுகிறது. எப்படி தொண்டை புண் இருக்கும்போது உப்புத் தண்ணீரில் கார்கிள் செய்கிறோமோ அதுபோலத் தான் இதுவும்.
கண்ணீர் சுரப்பிகள் உள்ள சில விலங்குகளும் குறிப்பாக, யானை, நமது மூதாதையர்களான குரங்குகள் நம்மைப்போல துக்கம் மேலிடும்போது அழுகின்றன. முதலைக்கண்ணீர் என்பது நீலிக்கண்ணீர் வகையைச் சேர்ந்தது. அதாவது அழுவது போல நடிப்பது!
நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், ‘பொட்டச்சி போல அழாதே’ என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை. டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும். அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்; நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”
இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.
இரண்டு வாரங்களாக கண்ணீரைப் பற்றி எழுதி உங்களை கண்ணீர் விடவைத்து விட்டேனோ? அடுத்தவாரம் வேறு விஷயம் பேசலாம்!
புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.
திரு. ஃபெடரர், திரு. அமீர்கான் – இவர்களின் உதாரணத்தோடு விளக்கம் அருமை அம்மா… நன்றி…
கண்ணீர் பற்றிய கருத்துக்களைச் சொல்லி எங்களை ஆனந்த்க் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டீர்கள் ரஞ்சனி அருமையான பதிவு பாராட்டுக்கள்
கண்ணீர் இவ்வளவு மகத்தானது. அதிலும் உப்பு சத்து உள்ளது. தேடினாலும் இவ்வளவு மகத்துவம் அறியமுடியாது. ஆனந்த பாஷ்பம் தான். அன்புடன்