ருசி
காமாட்சி மகாலிங்கம்

எல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா? வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள் சாய்ஸ் எதுவோ அதைச் செய்யுங்கள்.
வேண்டியவைகள்:
பனீர் – 200 கிராம்.
பாலக்கீரை – 2 கட்டுகள்
உரித்த பூண்டு இதழ்கள் – 4
இஞ்சி – சிறு துண்டு
திட்டமான சைஸ் வெங்காயம் – 2
பழுத்த தக்காளிப்பழம் – 1
டொமேடோ சாஸ் அல்லது கெச்சப் – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி -1 டீஸ்பூன்
ஜீரகப்பொடி – 1 டீஸ்பூன்
தனியாப்பொடி -1 டீஸ்பூன்
தாளித்துக் கொட்ட எண்ணெய் – 4 டீஸ்பூன்
ருசிக்கு – உப்பு
செய்முறை:
பனீரை அழகான சிறிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கீரையைச் சுத்தம் செய்து வேர், தண்டு பாகங்களை நீக்கித் தண்ணீரில் அலம்பி வைக்கவும். சற்றுப் பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டரளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து சுத்தம் செய்த கீரையை நறுக்காமலேயே அதனுள் அழுத்தி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் தீயை நிறுத்தி விடவும்.
ஆறினவுடன் வடிக்கட்டியில்க் கொட்டி கீரையை வடிய விடவும். தக்காளி,பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளை சுத்தம் செய்து நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். கீரையையும் தண்ணீரை ஒட்ட வடித்து மிக்ஸியிலிட்டு அரைக்கவும். தனியாக எடுக்கவும்.
நான் ஸ்டிக் வாணலியிலோ அல்லது அடி கனமான வாணலியிலேயோ எண்ணெயைக் காயவைத்து, அரைத்த வெங்காயக் கலவையை அதில் கொட்டிக் கிளறவும். மிதமான தீயில் கலவை வதங்கித் தொக்கு பத்தில் வரும் போது அதில் சாஸ் பொடி வகைகளையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் போதாவிட்டால் சற்று அதிகம் சேர்க்கவும். ஈரப்பசை நன்றாகக் குறைந்ததும், அரைத்து வைத்துள்ளக் கீரையைச் சேர்த்துக் கிளறவும்.மிகவும் கெட்டியாக இருக்கும் போல் தோன்றினால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்தாலே போதும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை அதில் சேர்த்துக் கிளறி,மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதிகம் பிறகு கொதித்தால் நிறம் மாறி விடும்.
இந்த முறையில் நல்ல பசுமையான நிறத்துடன் பாலக் பனீர் இருக்கும். ரொட்டி,பூரிக்கான பனீர் டேபிளில் வைக்கும்போது சற்று கெட்டியாக இருத்தல் நலம். சாதத்துடன் சாப்பிடுவதானால் சற்றுத் தளர இருக்கலாம். ஒரு முறைக்கு இருமுறை செய்தால் எல்லாம் சரியாக வரும். மிகவும் சத்தான உணவுக்குறிப்பு. பனீரை வறுத்தும் சேர்க்கலாம். கீரைக்கு கரம் மசாலா அவ்வளவாக வேண்டியதில்லை. அரைத்த கீரை, அரைத்த மசாலா படத்திலுள்ளது.
சுவையான பாலக் பனீர்… எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடித்தமானது.. சமீபத்தில் தான் ஒருநாள் செய்தேன்… கெட்சப் சேர்த்ததில்லை…பகிர்வுக்கு நன்றிம்மா..
நன்றி ஆதி. ஒருதரம் செய்து பார்த்தால் எல்லோருக்குமே பிடித்து விடும்.
கெட்சப்,சேர்ப்பது கட்டாயமில்லை.ஆலுதாம்,சோலே முதலானவைகளுக்குச்
சற்றுக் கலரும், ருசியும் கூடிவரும் இதைச் சேர்ப்பதால். அன்புடன்