குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உங்கள் குழந்தை டூப் விடுகிறதா?

செல்வ களஞ்சியமே – 55

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

சில வாரங்களாக இரட்டைக் குழந்தைகள், மற்றும் ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் என்று பார்த்தோம். ஒரு குழந்தையோ, இரட்டையரோ, பலரோ, ஒவ்வொரு குழந்தையும் தனி ரகம்தான். ஒட்டிப்பிறந்தவர்களுக்கும் தனித்தனி குணங்கள்; தனித்தனி ஆசைகள். அவர்களை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு நிச்சயம் சவால்தான்.

சிறிது நாட்களுக்கு முன் ஒரு இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை வளர்ப்பு நிகழ்ச்சி அது. ஒரு பெண்மணி தனது மகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனை வயது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் பேசியதிலிருந்து ரொம்பவும் பெரிய பெண் இல்லை என்று புரிந்தது.

இரண்டுநாட்கள் முன் பள்ளி விடுமுறை. இந்தக் குழந்தை வீட்டில் வழக்கம்போல விளையாடிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். ஆனால் பள்ளியில் தனது ஆசிரியையிடம் ‘நேத்திக்கு ஸ்கூல் லீவு. எனக்கு வீட்டுல இருக்கவே பிடிக்கல. ரொம்ப ‘போர்’ அடிச்சுடுத்து. அழுகை அழுகையாக வந்தது. எப்போ ஸ்கூலுக்கு வரப்போறோம்ன்னு இருந்தது’ என்று சொல்லியிருக்கிறாள். அம்மாவுக்கோ ரொம்பவும் வியப்பு; ஏன் குழந்தை இப்படிச் சொல்லியிருக்கிறாள் என்று. ஆனால் அதைப்பற்றி குழந்தையிடம் ஒன்றுமே கேட்கவில்லையாம். ‘குழந்தையைப் பார்த்து ஏன் பொய் சொன்னாய் என்று கேட்ககூடாது. அதனால் சும்மா இருந்துவிட்டேன்’ என்றார்.

இவர் இன்னொரு நிகழ்வையும் குறிப்பிடுகிறார். வீட்டிற்கு யாராவது தொலைபேசினால் இந்தக் குழந்தை தொலைபேசியை எடுத்து ‘அம்மா ஊரில் இல்லை. வெளியூருக்கு போயிருக்காங்க’ என்று சொல்லுவாளாம். அம்மா அங்கேயே உட்கார்ந்திருக்கும்போதும் இப்படி சொல்லுவாளாம். அப்போதும் அம்மா எதுவும் சொல்லமாட்டாராம். ‘ஏன் பொய் சொல்லுகிறாய் என்று குழந்தையைக் கேட்ககூடாது இல்லையா?’ என்கிறார். இந்தக் குழந்தை இப்படி ஊரில் இருக்கும்போதே இல்லையென்று சொல்லுவதால் பல சமயங்களில் உறவினரிடம் ஏச்சு கேட்கவேண்டியிருக்குமாம். அப்போதும் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கமாட்டாராம்.

இதிலிருந்து ஒன்று நிச்சயமாகப் புரிந்தது: குழந்தைகளை எதற்குக் கண்டிக்கலாம், எதற்குக் கண்டிக்கக் கூடாது என்பது நம்மில் பலருக்குப் புரியவில்லை என்பதுதான். செல்லம் கொடுப்பது என்பதின் எல்லை என்ன?

உளவியலாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்: ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாது. அதனால் ‘கதை’ விடுவதற்கும், ‘டூப்’ விடுவதற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. உங்கள் குழந்தையின் கற்பனை சிறகடித்துப் பறக்கும் காலம் இது. இந்தமாதிரியான ‘கதை’ மற்றும் ‘டூப்’ களினால் யாருக்கும் எந்தத் தீங்கும் விளையாது.

DSCN0423

ஆனால் ஆறு வயதுக்குப் பிறகும் இவை தொடர்ந்தா நிச்சயம் கவனிக்க வேண்டும். ஏன் குழந்தை இப்படிச் செய்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு குழந்தை உண்மையை பேசாமல் போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

 • பெற்றோர்களின் எதிர்பார்ப்பை தங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டால் அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்
 • உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்குமோ என்ற பயம்
 • பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க
 • உதவி தேவை என்பதை நேரடியாகச் சொல்ல முடியாமல் போவது
 • கடினமான சூழ்நிலைகளை சந்திக்க முடியாமல் தடுமாறுவது
 • பெரியவர்களைப் பார்த்து காப்பியடிப்பது.
 • குழந்தை உண்மையை மறைக்கிறது என்று தெரிந்தவுடன் நமக்கு முதலில் வருவது கோபம். குழந்தையின் மேலும், நாம் சரியாக வளர்க்கவில்லையோ என்று நம் மேலும்!

குழந்தை உண்மை பேசவில்லை என்பது நம்மை ஏன் பாதிக்கிறது? நேர்மை என்பதற்கு நாம் கொடுக்கும் உயர்ந்த இடம் தான் இந்த பாதிப்பிற்கு மூல காரணம். ஏன் என் குழந்தை இப்படிச் செய்கிறது என்று கவலைப்படுவதை விட என்ன காரணம் என்பதை ஆராய்வது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக ஒரு சின்னக் குழந்தை கையில் கத்தியை  எடுத்துவிட்டு கையை கிழித்துக் கொண்டு நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். கையில் கத்தியையும் வைத்துக்கொண்டு, ‘நான் ஏன் கத்திய எடுத்தேன்னா….?’ என்று ஏதோ சொல்லி நம் கோபத்தை குறைக்கப் பார்க்கிறது குழந்தை. இதைப் பார்த்தவுடன் கோபம் மேலிட கத்துவதோ, குழந்தையை அடிப்பதோ குழந்தையிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. மாறாக கத்தியை குழந்தையின் கையில் படாமல் வைப்பது புத்திசாலித்தனம். நீங்கள் காய்கறி வெட்டுவதைப் பார்த்திருக்கும் குழந்தைக்கு தானும் அதுபோல செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். குழந்தைக்குத் தெரியுமா, கத்தி காய்கறியை மட்டுமல்ல; கையையும் வெட்டும் என்பது? ‘நீ பெரியவள் ஆனவுடனே அம்மாவுக்கு காய்கறி கட் பண்ண ஹெல்ப் பண்ணுவியாம், சரியா?’ என்று சொல்லி கத்தியை குழந்தையின் கையில் படாத இடத்தில் வையுங்கள். நீங்கள் கோபப்படவில்லை என்பதுடன், நீயும் கத்தியை பயன்படுத்தலாம், சரியான நேரம் வரும்போது என்ற பாசிடிவ் ஆன செய்தியைக் கொடுக்கிறீர்கள்.

நாம் ஏன் பொய் சொல்லுகிறோமோ அதே காரணத்திற்குத்தான் குழந்தைகளும் உண்மையை மறைக்கிறார்கள் – உண்மையைச் சொன்னால் நிலைமை எப்படி மாறுமோ என்று.

இப்போது மேலே சொன்ன நிகழ்ச்சியை வேறு மாதிரி பார்ப்போம்: குழந்தையை கையும் கத்தியுமாக நீங்கள் பார்க்கிறீர்கள். பதறிப்போய் விடுகிறீர்கள். சற்று நிதானப்படுத்திக் கொண்டு, கோபத்தை வெளிக்காட்டாமல்  ‘என்ன செய்யறே, கத்தியை வைச்சுண்டு..?’ என்று கேட்கிறீர்கள். ‘உன்ன போல நானும் காய்கறி கட் பண்ணப் போறேன்’ என்று குழந்தை சொல்லுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? சிரித்துக்கொண்டே குழந்தையின் கையிலிருந்து கத்தியை வாங்கிக் கொண்டு,  ‘உனக்கு இப்போ அதெல்லாம் வேண்டாம்மா. நீ பெரியவளானதும் இதெல்லாம் செய்யலாம். சரியா? இப்போ அம்மாவும் நீயும் வெளியில் போகலாம், வா’ என்று குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் குழந்தைக்கு ‘உண்மையைச் சொன்னால் அம்மா கோபித்துக் கொள்வாளோ’ என்கிற பயம் இருக்காது.

மாறாக, ‘ஆமா, நீ கிழிச்சே! கையைக் காலை கட் பண்ணிண்டால் என்ன பண்றது? டாக்டர் கிட்ட போயி உனக்கு ஊசி போடணும். நானும் அப்பா கிட்ட திட்டு வாங்கணும்….! இன்னொரு தடவ கத்திய தொடு, என்ன பண்றேன் பாரு!’ என்று சொன்னால் அடுத்தமுறை கத்தியை எடுத்து கையை வெட்டிக்கொண்டாலும் குழந்தை உங்களிடம் உண்மையை சொல்லாது.

பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் வரச்சொல்லிவிட்டு, குழந்தையிடம் அவர் வந்தவுடன், ‘அம்மாவுக்கு தலைவலின்னு சொல்லு’ என்பதும் குழந்தையின் மனதில் பொய் சொல்லலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். உண்மையைச் சொல்வது எப்போதும் நன்மை பயக்கும் என்று உங்கள் உதாரணத்தின் மூலமே குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.

அடுத்த வாரம் தொடர்ந்து பேசலாம்…

“உங்கள் குழந்தை டூப் விடுகிறதா?” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. நாமும் கொஞ்சம் ஸாமர்த்தியமா திசை திருப்பணும். இல்லாட்டா அவ்வளவுதான். பொய் நாம் வொருமுறை பேசினாலே போதும். குழந்தைகள் ஞாபகமாக அதை உபயோகப் படுத்துவார்கள். நல்ல வளர்ப்பு வளர நாம்தான் இயற்கையாகவே நல்ல சுபாவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
  இனிமேல் வளர்ப்பவர்கள்களுக்கு இந்தக் கட்டுரை உபயோகமாக இருக்கும்.
  எவ்வளவு விஷயங்கள்யிருக்கு.உபயோகமான விஷயம். அன்புடன்

 2. அருமையான் விளக்கம் ரஞ்சனி. ஒரு சில நாட்களாக உடல் நலமில்லாததால் ,பல் பதிவுகள் படிக்காமல் விடப்பட்டிருக்கின்றன. . இனி தொடர்ந்து இணையம் வர உடல் நிலை ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
  உங்களின் இந்தப் பதிவு குழந்தைகள் வளர்ப்பிற்கு மட்டுமின்றி, பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அருமையாய் சொல்கிறது. நன்றி.

 3. குழந்தை வளர்ப்பு அல்லது அக்கறை என்ற பெயரில் முழுமையான முட்டாள் தனம் தற்போது இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. காரணம் அடிப்படையில் பயம் எல்லோர் மனதிலும் உள்ளது. குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு இடத்திற்கு இடம் மாறுபடக்கூடியது. இதில் கவலைப்படக்கூடியது ஒன்றுமே இல்லை.

  ஆனால் இதற்கு முழுமையான பொறுப்பானவர்கள் பெற்றோர்களே. அதுவும் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் செய்யும் அலும்பு சொல்லி மாள முடியாது.

  ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் படிக்கும் 35 குழந்தைகளில் 25 குழந்தைகளிடம் உள்ள பழக்கவழக்கங்கள் பயமுறுத்துவதாக உள்ளது.

  தங்கள் பெற்றோர்கள் தங்களிடம் காட்டும் செல்லம், தாங்கள் விரும்பியதை அவர்களிடம் எப்படி வாங்குகின்றோம் என்பதில் தொடங்கி மற்ற தோழி தோழர்களிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொன்றும் நீங்க சொல்லியுள்ள திருட்டுத்தனத்தை எனக்கு நினைவு படுத்துவதாக உள்ளது.

  முழுமையாக நல்லதே சொல்லி, நல்லவற்றையே அடையாளம் காட்டி, நாகரிகமான விசயங்களையே முன்னிறுத்தல் என்பது ஒரு வகையில் கொடூரமானது. ஒரு குழந்தைகள் வாழும் சூழ்நிலையில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் பள்ளி முதல் விளையாடும் இடங்கள் வரைக்கும் சந்திக்கும் சக மனிதர்களை அவர்கள் எதிர்கொள்ள நல்லதும் கெட்டதும் உள்ள இந்த உலகத்தை அதன் இயல்பிலேயே கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்க காட்டும் உலகத்திற்கும் அவர்கள் பார்க்கும் உலகத்திற்கும் உள்ள இடைவெளியை எப்படி இட்டு நிரப்புவது என்று தெரியாமல் அவர்கள் புதுப்பாதையை உருவாக்கிட தொடங்கி விடுவார்கள்.

  அப்படிப்பட்ட குழந்தைகளை அதிகம் நான் தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

  ஐந்தாவது படிக்கும் சக தோழிகள் உரையாடும் உரையாடல் ஒன்று

  நேந்று இரவு எங்க வீட்டில் எங்க அப்பா அம்மா என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க தெரியுமா?

  பத்து வயதில் அவர்களின் எதிர்பார்ப்பு ஏக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் ஏதும் தேவையில்லை. அவர்களுடன் பழகும் விதம், உரையாடல்கள், ஒளிவு மறைவற்ற தன்மை, சிநேகத்தன்மை போன்றவை தான் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

  இதை யார் இங்கே புரிந்து வைத்துள்ளார்கள்?

 4. பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் கவனத்தை திருப்ப வழி கண்டு பிடித்து திசை திருப்ப வேண்டும் நீங்கள் சொன்னது மிக அருமை.
  திட்டினால், அடித்தால் சரி வராது. சிநேகமாய் இருந்தால் தான் குழந்தை நம்மிடம் அனைத்தையும் சொல்லுவார்கள், இல்லை என்றால் மறைத்து பொய் சொல்வார்கள்.

  அருமையான குழந்தை வளர்ப்பு யோசனைகளுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.